நாடு முழுவதும் வீடு விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் டிரெண்ட் பெரும்பாலானோருக்கு நியூ நார்மலாகியிருக்கும் நிலையில் பெரிய பிராபர்டியில் இப்போது முதலீடு செய்வது சிறந்ததா?
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகம் குறையத் தொடங்கியிருக்கும் நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரியல் எஸ்டேட் துறை மீண்டெழத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஹவுசிங் மார்க்கெட் எனப்படும் வீடு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆஃபர்கள், ஹோம் லோன் வட்டி குறைவு போன்ற சாதகமான அம்சங்கள் இருந்தாலும், இப்போது வீடு வாங்க நினைத்தால் பல்வேறு காரணிகளையும் சிந்தித்து முடிவெடுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
புதிய வேலைவாய்ப்புகள், டிரான்ஸ்ஃபர் என இளம் பட்டதாரிகள் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு வாய்ப்புகள் தேடி இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஒருவேளை இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இப்போது வேலை பார்க்கும் நகரில் வீடு வாங்கிவிட்டால், மற்றொரு நகருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் புதிய சிக்கல் உருவாகும் என்கிறார்கள். நீங்கள் வாங்கியிருக்கும் வீட்டுக்கான இ.எம்.ஐ, அதேபோல் புதிய நகரில் வீட்டுக்கான வாடகை என ஒரே நேரத்தில் இரண்டு செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
மற்றொரு ஃபேக்டர் வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலில் ரிமோட் லொக்கேஷனில் குறைந்த செலவில் பெரிய வீடு வாங்குவது. இது சாமர்த்தியமான முடிவாக இருக்காது என்பது நிபுணர்களின் கருத்து. ஏனென்றால், விரைவில் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது பெரிய முதலீடு சரியான தேர்வாக இருக்காது என்றும் ஆலோசனை சொல்கிறார்கள். ஹவுசிங் மார்க்கெட் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல் தோன்றினாலும், உங்கள் சூழல்களை நன்கு ஆய்வு செய்து எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
வருவாய் நிலைத்தன்மை
கொரோனா சூழலால் வேலைவாய்ப்புத் துறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. லே – ஆப், ஊதியக் குறைப்பு போன்றவை பரவலாக இருக்கும் சூழலில் உங்களுக்கான வருவாய் நிலையாக இருக்கிறதா என்ற கேள்வியை முதலில் உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஹோம் லோன் மூலம் வீடு வாங்க நினைக்கும்போது நிலையான வருமானம் என்பது முக்கியமான ஃபேக்டர். உங்கள் பாட்னர் நிலையான வேலையில் இருக்கும்பட்சத்தில் ரிஸ்க் எடுப்பதில் பிரச்னை இருக்காது.
எமர்ஜென்ஸி ஃபண்ட் மற்றும் இதர செலவுகள்
பெருந்தொற்று காலத்தை சமாளிக்க நிறுவனங்கள் பலவும் பல்வேறு விதமான புதிய உத்திகளைக் கையாண்டு கொண்டிருக்கின்றன. இதற்காக குறைந்த காலத்தில் நிறைய பணம் கொழிக்கும் ஆஃபர்களும் வேலைவாய்ப்புத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன. இதுபோன்ற ஒரு வேலையில் நீங்கள் இருக்கும்போது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை இ.எம்.ஐ-க்கு என ஒதுக்க முடியுமா என்பதையும் ஆலோசித்துப் பாருங்கள். இப்படியான இக்கட்டான சூழலை சமாளிக்க சுமார் 6 மாத செலவுகளை சரிசெய்யும் அளவுக்கு எமெர்ஜென்ஸி ஃபண்ட் எனப்படும் அவசர கால நிதி சேமிப்பை உருவாக்குங்கள் என்கிறார்கள். வேலையிழப்பு, மருத்துவ செலவு போன்ற சூழல்களில் இ.எம்.ஐ-யைத் தொடர்ந்து செலுத்த இந்த நிதி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
வட்டி விகிதம்
ஹோம் லோன் வட்டி என்பது மாறக்கூடிய வகையில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்டகாலம் திரும்ப செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், காலத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறவும் வாய்ப்பிருக்கிறது. ஹோம் லோன் எடுக்க வேண்டிய சூழலில், நிலையான வட்டி விகிதத்தோடு கூடிய பிளானை டிக் அடிப்பது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
எப்போதான் வீடு வாங்க முடியும்?
உங்கள் லைஃப்ஸ்டைலில் பெரிதாகத் தியாகம் செய்யாமல் இ.எம்.ஐ-யை எளிதாக சமாளிக்க முடியும் என்று நினைத்தால் நிச்சயம் ஹோம்லோன் உதவியோடு வீடு வாங்கலாம். இதற்காக மற்றொரு கணக்கையும் சொல்கிறார்கள். உங்கள் ஒரு வருட நெட் சேலரியை விட மூன்று மடங்குக்கு அதிகமாக இருக்கும் சொத்துகளில் முதலீடு செய்வது ஆபத்தானது என்பதுதான் அது. அதேபோல், இ.எம்.ஐ என்பது உங்கள் மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகாமல் இருப்பது சிறந்தது. நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் மொத்த மதிப்பில் 25% அளவுக்கு முன்பணமாக செலுத்திவிட்டு வாங்கினால், மற்ற சுமைகளும் குறையும்.
Also Read – பொருளாதாரம் மீள்வதற்கு ரியல் எஸ்டேட் துறை முக்கியம்… ஏன்?