ஈழம்

ஈழ மக்களின் உணர்வுகளைப் பேசிய படங்கள், ஷார்ட் ஃபிலிம்கள்!

இலங்கை தமிழர்களின் பிரச்னை என்பது இன்றைய திரைப்படங்களில் போகிற போக்கில் தொட்டு பேசுகின்ற பிரச்னையாக இருந்து வருகிறது. இல்லையெனில், அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி மேன் சீசன் 2 போல சர்ச்சைகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான `ஜகமே தந்திரம்’ படமும் மிகப்பெரிய அளவில் ஈழத்தமிழர்களின் பிரச்னையை பேசவில்லை. விவசாயத்துக்கு அடுத்தபடியாக இன்றைய இயக்குநர்கள் தொடுகின்ற பிரச்னையாக இலங்கை தமிழர்களின் பிரச்னை பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் பிரச்னைகளை கொஞ்சமாவது ஆழமாக அல்லது அர்த்தமுடன் பேசிய திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

தெனாலி

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதியாக `தெனாலி’ படத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இந்தப் படம் ஒரு காமெடி படம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தெனாலி, தனது சொந்த நாட்டில் குழந்தைப் பருவத்தில் அனுபவித்த சம்பவங்களை மனநல மருத்துவரிடம் விளக்கும்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரங்கள் நமது கண்முன்னே வந்து போகும். அதனை கமல்ஹாசன் ஈழத்தமிழில் சிறப்பாக கையாண்டிருப்பார். இந்தபடம் 2000-வது ஆண்டு கிரேஸி மோகன் எழுத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது.

நந்தா

சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய படம் `நந்தா’. இயக்குநர் பாலா எழுதி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் தாய் மற்றும் மகன் இடையிலான பாசப்போராட்டத்தை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த கதையையும் பேசுகிறது.

கன்னத்தில் முத்தமிட்டால்

மணிரத்னம் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று `கன்னத்தில் முத்தமிட்டால்’. ஒரு குழந்தையைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது. இலங்கையில் நடந்த வன்முறைச் சம்பவங்கள், அகதியின் மகளாக பிறந்த குழந்தைக்கும் அவளது வளர்ப்பு தாய்க்கும் இடையேயான பாசப்போராட்டம் என கதைக்களம் நகரும். இந்த திரைப்படம் 2002-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் வரும் பாடல்கள்கூட இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை பேசக்கூடியதாக இருக்கும். மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பி. எஸ். கீர்த்தனா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆண்டவன் கட்டளை

சிறப்பான வாழ்க்கையைத் தேடி தாயகத்தைவிட்டு வெளியேற விரும்பும் மக்களைப் பற்றிய அழகான நேரடியான திரைப்படம் இது. புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள், ஊமையாக நடிக்கும் அகதி போன்ற விஷயங்களை மிகவும் சிறப்பாக இயக்குநர் மணிகண்டன் கையாண்டிருப்பார். இந்தப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. விஜய் சேதுபதி, ரித்திகா சிங், பூஜா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபன்

மூன்று இலங்கை அகதிகள் குடும்பமாக வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. இந்தக் கதையில் எழுத்தாளர் ஷோபா சக்தி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கிளாடின் வினசிதம்பி ஆகியோர் நடித்துள்ளனர். ஜாக்ஸ் ஆடியார்ட் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கை அகதிகளின் பிரச்னையை பேசும் மிகவும் முக்கியமான படமாக இது பார்க்கப்படுகிறது.

நள தமயந்தி

நள தமயந்தி 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதி தயாரித்துள்ளார். இந்தப் படத்தை மௌலி இயக்கியுள்ளார்.  மாதவன், கீது மோகந்தாஸ், ஸ்ருதிகா, அனுஹாசன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது.

காட்சிப்பிழை

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான குறும்படம்தான் இந்த `காட்சிப் பிழை’. ஈழத்தில் சிறுவர்கள் மத்தியில் போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்த திரைப்படம் வழியாக இயக்குநர் கூறியுள்ளார். நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த திரைப்படம் பார்ப்பவர்களின் மனதிலும் போரின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

Also Read : கச்சத்தீவு வரலாறு… 1974 ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top