இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைபெற்ற இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார். 1984-ம் ஆண்டுக்கு முந்தைய 19 ஆண்டுகளில் 16 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த அவர், 1984 அக்டோபர் 31-ல் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கடைசி நாள் எப்படியிருந்தது?
இந்திரா காந்தி
லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பின்னர் 1966-ல் இந்தியாவின் பிரதமரான இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் அந்தப் பதவியில் தொடர்ந்து இருந்தார். 1971 தேர்தலில் இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம், 1975 ஜூன் 12-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 1975 ஜூன் 26-ம் நாடு முழுவதும் அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார் இந்திரா. 1977-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வரை நீடித்த அவசரநிலைக் காலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தலைவர், தொண்டர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின்னர், நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின்னர், 1980-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானார். 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சுட்டுக்கொல்லப்படும் வரை இந்தியாவின் பிரதமராக அவர் பதவி வகித்தார்.
இந்திராவின் கடைசி நாள்
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணியளவில் சோனியா காந்திக்கு துப்பாக்கி குண்டு சத்தம் தூரமாகக் கேட்டிருக்கிறது. முதலில் யாரோ பட்டாசு வெடிக்கிறார்கள் என்று நினைத்த அவர், வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது, தான் பார்த்த காட்சியை நம்ப முடியாமல் வெடித்து அழத் தொடங்கினார். `அம்மா… அம்மா’ என்று அழுதவாறே ஓடி வந்த அவர், அங்கிருந்தவர்கள் உதவியோடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திராவை அம்பாசிடர் காரில் கொண்டு செல்கிறார். காலை 9.32 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட இந்திராவுக்கு சுமார் 5 மணி நேரம் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. தனது பாதுகாவலர்களால் 35 முறைக்கும் மேல் துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் இந்திராவின் இதயம் இயக்கத்தை நிறுத்தவில்லை என்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இறப்பு செய்தியை மதியம் 2.32 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள். இதுகுறித்த தகவல் வெளியே கசியாமல் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், பிபிசி ரேடியோ இந்தத் தகவலை பிரேக் செய்தது.
முன்னரே கணித்த இந்திரா காந்தி!
சுட்டுக்கொல்லப்பட்ட அக்டோபர் 31-ம் தேதிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 30-ல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருந்தார் இந்திரா. அந்தக் கூட்டத்தில், `இன்று நான் இங்கே இருக்கிறேன். ஒருவேளை நாளைய தினம் நான் இல்லாமல் போகலாம். என்னை சுட்டுக்கொல்ல எத்தனை முறை முயற்சிகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. நான் உயிரோடு இருப்பேனா இல்லை இறந்துவிடுவேனா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் நீண்ட நாட்கள் வாழ்ந்து விட்டேன். வாழ்நாள் முழுவதையும் என்னுடைய மக்களுக்காக சேவை செய்வதில் ஈடுபட்டேன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று இந்திரா பேசியிருந்தார். அவரது ஆலோசகர் ஹெச்.ஒய்.ஷ்ரதா பிரசாத் எழுதிக் கொடுத்த உரைதான் இது என்றாலும், சில மாதங்களாகவே இந்திராவின் மனதை அரித்துக் கொண்டிருந்த செய்தியை அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்ட திருப்தியோடு அக்டோபர் 30-ம் தேதி இரவு டெல்லி திரும்பியிருக்கிறார். அன்றைய தினம் அதிகாலை 4 மணிவரை இந்திரா தூங்காமல் விழித்துக் கொண்டிருந்ததாக சோனியா காந்தி, தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆஸ்துமாவுக்காக மருந்தை எடுக்க தான் எழுந்தபோது இந்திரா விழித்துக் கொண்டிருந்ததாகவும், உதவி எதுவும் தேவைப்பட்டால் தன்னிடம் கேட்குமாறு அவர் சொன்னதாகவும் சோனியா குறிப்பிட்டிருக்கிறார்.
கறுப்பு நாள் – அக்டோபர் 31, 1984!
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அதிகாலை 9 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிய இந்திரா, பேரன் ராகுல், பேத்தி பிரியங்கா ஆகியோர் பள்ளிக்கு வழியனுப்பியிருக்கிறார். பேரன் ராகுல் காந்தியிடம் ஒருவேளை தான் இறந்துவிட்டால், அழக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். இந்திரா, தனது மரணம் குறித்து ராகுலிடம் பேசுவது அது முதல்முறை அல்ல என்றாலும், தனது பாட்டி வழக்கத்தை விட அதிக நேரம் தங்களுடன் அந்தக் காலை நேரத்தில் செலவிட்டதாக நினைவுகூர்ந்திருக்கிறார் அவர்.
அக்டோபர் 31-ம் தேதி காலையில் முதல் நிகழ்ச்சியாக ஆங்கில ஆவணப்பட இயக்குநர் பீட்டர் அலெக்ஸாண்டர் உஸ்டினோவ் உடனான நேர்காணலைத் திட்டமிட்டிருந்தார் இந்திரா. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜேம்ஸ் கல்லாஹனை சந்திக்கவும், மாலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஒரே மகளான ராணி ஆன்னியுடனான இரவு விருந்தும் பிரதமர் இந்திரா காந்தியின் ஷெட்யூலில் இருந்தது. நேர்காணலுக்காக 7.30 மணிக்கே தயாரான இந்திரா, தனது வீட்டில் இருந்து அருகிலிருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கு நடந்து சென்றார். கறுப்பு நிற பார்டர் கொண்ட காவி நிற சேலை அணிந்திருந்த பிரதமர் இந்திரா, நேர்காணலுக்காக மேக்கப்பும் செய்திருந்தார். போலீஸ் கான்ஸ்டபிள் நாராயண் சிங், தனி பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்வர் தயாள், நேர்முக உதவியாளர் ஆர்.கே.தவான் ஆகியோர் அவருடன் நடந்து சென்றனர். காலை வெயில் நேரத்தில் நாராயண் சிங் இந்திராவுக்குக் குடை பிடித்தபடி உடன் நடந்து சென்றார். வீட்டிலிருந்து உள் இணைப்பு நடைபாதை வழியாக பிரதமர் அலுவலகம் (நம்பர் 1, அக்பர் சாலை) சென்றுகொண்டிருந்தார்.
பிரதமர் அலுவலக வாயில் பகுதியை அவர் அடைந்தபோது, பாதுகாவலரான பியண்ட் சிங் என்பவர் தனது ரிவால்வரால் இந்திராவை நோக்கி மூன்று முறை சுட்டார். மேலும், மற்றொரு பாதுகாவலரான சத்வந்த் சிங்கை நோக்கி இந்திராவை சுடுமாறு கூச்சலிடவே, அவர் தனது துப்பாக்கியால் 25 முறை இந்திராவை சுட்டிருக்கிறார். இதில், பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்வர் தயாளும் படுகாயமடைந்து கீழே விழுந்தார். பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் இந்திரா காந்தியின் உடலை 30-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் துளைத்திருந்தன. பிரதமர் இந்திராவின் இல்லம், அலுவலகம் தற்போது நினைவு இல்லமாக்கப்பட்டிருக்கிறது. இந்திரா நடந்து வந்த பாதையில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அவர் பயன்படுத்திய பொருட்களும் அந்த இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சீக்கிய தீவிரவாத அமைப்புகளால் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று இந்திராவுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதோடு, குண்டு துளைக்காத பாதுகாப்புக் கவசத்தை அணியவும் உளவு அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால், எடை அதிகமான கவச உடையை வீட்டில் அணிய இந்திரா மறுத்துவிட்டார். அதேபோல், அவரை சுட்டுக் கொன்றவர்களுள் ஒருவரான பியண்ட் சிங் குறித்து தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்னர் பேசிய இந்திரா, `இவரைப் போன்ற சீக்கியர்கள் எனக்கு பாதுகாப்பு அளிக்கும்போது, நான் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Also Read – சீமானின் வாழ்க்கையை மாற்றிய போராட்ட மேடை – 2008 ராமேஸ்வரம் பேரணியில் என்ன நடந்தது?