ரமேஷ்வர் டெலி

`தடுப்பூசிக்கான பணம் எங்கிருந்து வருகிறது’ – பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரியிலிருந்தே இலவச தடுப்பூசி போடப்படுகிறது என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் டலி.

உச்சம்தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்திருக்கிறது. டீசல் விலையும் நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் அக்டோபர் 12 நிலவரப்படு 110 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை நூறு ரூபாயையும் கடந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.900-த்துக்கும் மேல் சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனத்தை எதிர்க்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ரமேஷ்வர் டெலி

மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக இருப்பவர் ரமேஷ்வர் டெலி. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கௌஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரமேஷ்வர் டலி, “பெட்ரோல் விலை அதிகம் கிடையாது; மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது வரி விதிக்கின்றன. கொரோனா தடுப்பூசி உங்களுக்கு இலவசமாகக் கிடைத்தா? அந்தத் தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வந்தது? நீங்கள் தடுப்பூசிக்காகப் பணம் செலுத்தவில்லை. அவற்றுக்கான பணம் இதுபோன்ற வரிகள் மூலம் கிடைக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அசாமின் தில்புரூகர்க் மக்களவைத் தொகுதி எம்.பியான அவர் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளில் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ரமேஷ்வர் டலி
ரமேஷ்வர் டலி

மேலும் அவர் கூறுகையில், “எங்கள் அரசு நாட்டின் 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை இலவசமாகப் போட திட்டமிட்டிருக்கிறது. ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1,200. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40. இதன்மீது மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கின்றன. நாட்டிலேயே மதிப்புக் கூட்டு வரியான VAT வரியைக் குறைவாக விதிக்கும் மாநிலம் அசாம்தான். மத்திய அரசு ரூ.30 வரி விதிக்கிறது. கச்சா எண்ணெய் விலையை பெட்ரோலியத் துறை அமைச்சகம் நிர்ணயிப்பதில்லை. சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நிர்ணயிக்கிறது’’ என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

பெட்ரோல் விலையை பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் விலையோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், `இமயமலை நீரை நீங்கள் குடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு லிட்டருக்கு ரூ.100 கொடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் உயரும்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசிய அசாம் மாநில பா.ஜ.க தலைவர் பாபேஷ் கலிதா,விலை உயர்வை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க வேண்டும். அதேபோல், மக்கள் நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read – Vehicle Scrapping Policy 2021: 15 வருட பழைய வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா… உங்களுக்கான தகவல்தான் இது..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top