மியாசாகி

மியாசாகி மாழ்பழம் கிலோ ரூ.2.7 லட்சம் – என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் கோடைகாலம் என்பது மாம்பழங்களின் சீசன். இந்தியாவில் பங்கணப்பள்ளி, தசேரி, அல்போன்சோ, லாங்டா உள்ளிட்ட பல மாம்பழ வகைகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாம்பழங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபால்பூர் பகுதியில் ஒரு மாம்பழ தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களைப் பாதுகாக்க நான்கு காவலர்களையும் ஆறு நாய்களையும் தோட்டத்தின் உரிமையாளர்கள் காவலுக்கு வைத்துள்ள சம்பவம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல் என்பதைதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.

ஜப்பானில் மியாசாகி பகுதியில் பயிரிடப்படும் மிகவும் பிரபலமான மாம்பழங்களில் ஒன்றுதான் இந்த மியாசாகி மாம்பழங்கள். இந்த மாம்பழங்கள் சர்வதேச சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2.70 லட்சம் மதிப்பில் விற்கப்பட்டது. இந்த மாம்பழத்திற்கு `Taiyo-no-Tomago’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு சூரியனின் முட்டை என்று பொருள். இந்த மாம்பழம் மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இல்லை. பழுக்கும்போது ஊதா நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும். இதனுடைய வடிவம் டைனோசரின் முட்டைப் போன்று இருக்கும். தகவல்களின்படி, இந்த மாம்பழங்கள் சுமார் 350 கிராம் எடை உடையவை. மற்ற மாம்பழங்களைவிட அதிகமான இனிப்பு சுவை உடையவை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில சத்துக்களை பிரத்யேகமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மியாசாகி மாம்பழங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஜப்பானில் அதிக அளவில் அறுவடை செய்யப்படுகின்றன. அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதுதான் இந்த வகை மாம்பழங்கள். ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இர்வின் என்பவர்தான் 1939-ம் ஆண்டில் இந்த வகை மாம்பழங்களை உருவாக்கியுள்ளார். இதனையடுத்து, ஜப்பானில் உள்ள மியாசாகி மாகாணத்தில் 1985-ம் ஆண்டு அறிமுகப்படித்தப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த மாம்பழங்கள் கிடைக்கும் என்றாலும் ஜப்பானில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழங்கள்தான் மிகவும் ஃபேமஸ். இதற்கு காரணம் அங்கு விளைவிக்கப்படும் முறைதான். ஒவ்வொரு மாம்பழத்துக்கும் தனித்தனியாக கவனத்தைச் செலுத்தி வளர்க்கின்றனர். இதனால்தான், அதிகமான விலைக்கு இந்த மாம்பழங்கள் விற்கப்படுகின்றன. 

மியாசாகி மாம்பழம்

மாம்பழ வகைகளில் பார்த்து பார்த்து உருவாக்கப்படும் இந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூபாய் 8,600 முதல் ரூபாய் 3 லட்சம் வரை விற்பனையாகிறது. இவ்வளவு புகழ்பெற்ற விலைமதிப்புமிக்க மாம்பழம் தற்போது மத்தியப் பிரதேசத்தில் வளர்ந்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர், சங்கல்ப் பரிஹார். இவருடைய மனைவி ராணி. இந்த தம்பதிக்குச் சொந்தமான தோட்டத்தில்தான் மியாசாகி மாம்பழங்கள் தற்போது விளைந்து வருகின்றன. ஆரம்பத்தில் தாங்கள் நடுவது மியாசாகி மாம்பழக் கன்று என தெரியாமலேயே நட்டு வைத்துள்ளனர். இந்த மாம்பழங்கள் விலைமதிப்பு மிக்கவை என்று அறிந்ததும் அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிபோயுள்ளனர். இவர்களது தோட்டத்தில் தற்போது சுமார் ஏழு மாம்பழங்கள் விளைந்து வருகின்றன. இந்த மாம்பழங்களைத் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கதான் நான்கு பாதுகாவலர்களையும் ஆறு நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளனர்.

சென்னையில் ரயிலில் ஒருவர் அவர்களுக்கு இந்த மாமரக்கன்றுகளை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாம்பழத்துக்கு பாதுகாப்பு போடப்பட்டது தொடர்பாக சங்கல்ப் பரிஹார் பேசும்போது, “எங்களது தோட்டத்தில் விளைந்த மியாசாகி மாம்பழங்களை கடந்த ஆண்டு திருடர்கள் பறித்துச் சென்றனர். இந்தியாவில் இந்த மாம்பழம் மிகவும் அரிதாகவே கிடைக்கும்.  இதன் விலையும் அதிகம். இதனால்தான், இந்த மாம்பழங்களை பாதுகாக்க காவலுக்கு ஆள்களையும் நாய்களையும் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார். இந்த மாம்பழங்கள் முழுதாக விளைந்த பின்னர் விற்க திட்டம் இல்லை என்றும் இதன் விதைகளை அதிக மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Also Read : பப்ஜி ரிலீஸ்… புதிய வெர்ஷனில் என்ன ஸ்பெஷல்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top