மாடித்தோட்டம்

மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு – இதெல்லாம் செய்யாதீங்க..!

பொதுவாகவே இயற்கையான காய்கறிகளை உண்ண மூன்று வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று இயற்கை விவசாயம் செய்வது, இரண்டாவது இயற்கை விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாகப் பெறுவது, இறுதியாக மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் மூலமாக இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்வது. இந்த வழிகளில் நகரவாசிகளில் பெரும்பாலானோர் இறுதி வழியான மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பையே பின்பற்றி வருகிறார்கள்.

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

பெரும்பாலான மக்களிடம் மாடித்தோட்டம் அமைக்கும் பழக்கம் பிரபலமடைய ஆரம்பித்திருக்கிறது. மாடித்தோட்டத்தில் கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் எனக் கால நிலைகள் வேறுபடும். அதற்கு ஏற்றார்போல மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். இப்போது மழைக்காலம் துவங்கியிருப்பதால் மாடித்தோட்டத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். மழைக்காலங்களில் சில விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் வீட்டு மாடியில் அள்ள அள்ளக் குறையாத காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

மழைக்கால பராமரிப்பு

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

மற்ற காலங்களைவிட மழைக்காலத்தில் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பது அவசியம். மழைக்காலங்களில் மாடித்தோட்டத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாடித்தோட்டத்தில் ஆங்காங்கே தேவை இல்லாமல் சிதறிக் கிடக்கும் மண்கலவை, இலை, தழைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் அவை மழைநீரைப் பிடித்து வைத்துக் கொள்ளும்.  இதனால் மாடி தளத்தில் ஏதேனும் பாதிப்பு உண்டாகலாம்.
பெரும்பாலும் ஜூன், ஜூலை மாதங்களில்தான் மாடித்தோட்டம் அமைப்பது வழக்கம். அதனால் தொட்டி முழுவதும் இப்போதுதான் உரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். மழை பெய்யும்போது மண்கலவை, உரங்கள் கரைந்துபோய்விடுமா என்று கவலைப்படத் தேவையில்லை. மழைக்காலங்களில் அதிக அளவில் தொட்டியில் இருக்கும் கரிமச் சத்துக்கள் வெளியேறுவதில்லை.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

அதேபோலப் புதிதாக வளரும் நாற்றுகளில் அதிகமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமான தண்ணீர் தேங்குவதால் நாற்றுகள் அழுகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழைக்காலங்களில் செடிகள் தானாகவே சாய ஆரம்பிக்கும். பின்னர் வெயில்படும் நேரத்தில் மீண்டும் சரியாகிவிடும். அடைமழைக்காலங்களில் பஞ்சகவ்யா, மீன் அமிலம் மாதிரியான இடுபொருட்களையும், உரங்களையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. மழைக்காலத்தில் அவை கரைந்து செல்லும் வாய்ப்புகள் அதிகம். மழைக்காலத்தில் தரையில் தொட்டிகளை நேரடியாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பலகைகள் வைத்து அவற்றின் மீது தொட்டிகளை வைக்கலாம். பலகைகள் கிடைக்காத பட்சத்தில் செங்கற்களை அடுக்கி வைத்தும் அதன் மீது தொட்டிகளை வைக்கலாம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

மழையிலிருந்து செடிகளைக் காப்பாற்ற தார்பாலின் பந்தல் அமைத்தும் செடிகளைக் காக்கலாம். மாடியில் அதிக மழைநீரைத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மழைநீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக இருக்கும். என்னதான் அடைமழைக்காலத்தில் செடிகளை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும், செடிகளுக்கு இழப்பு கொஞ்சம் வரத்தான் செய்யும். மழையிலிருந்து தப்பிக்கத் தொங்கு தோட்டம், பி.வி.சி பைப்புகளை மேடை அமைத்து அதன்மீது தொட்டிகள் வைக்கலாம். மழைக்காலத்தில் பைகளை நெருக்கி வைக்கக் கூடாது. பைகளுக்கு இடையே இடைவெளி மிக முக்கியமானது. அதிகமான பைகளை நெருக்கி வைக்கும்போது ஒரு செடிக்கு வரும் நோய் பக்கத்துச் செடிக்கும் பரவும் வாய்ப்பு அதிகம். அதேபோலத் தொட்டிகள் நெருக்கி வைக்கப்பட்டால், ஈரப்பதம் உலரத் தாமதமாகும். மழைக்காலங்களில் நீர் ஊற்றக் கூடாது. மழைக்காலத்தில் ஈரப்பதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகளைச் சோதித்துப் பார்த்து நீர் ஊற்ற வேண்டும். வெயில் காலங்களில் இரண்டு வேளைகளில் கூட நீர் ஊற்றலாம். நீர் உள்ளிறங்காத பெயிண்டை மாடித்தளத்தில் அடிக்கலாம். இதன்மூலம் மாடித்தோட்டம் அமைக்கும்போது தளத்தின் உள்ளே தண்ணீர்  கசிவதைத் தடுக்கலாம்.

மாடி பெயிண்டிங்
மாடி பெயிண்டிங்

மழைநீர் செடிகளுக்குக் கொடுக்கும் சத்துக்களும், வளர்ச்சியும் வெளியிலிருந்து கொடுக்கும் உரத்துக்கு ஈடாகாது. அதனால் மழையில் செடிகள் நனைவது செடிகளுக்கு வளர்ச்சியே தரும். இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு மாடித்தோட்டம் அமைத்தால் வெற்றிகரமாகக் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

Also Read – Remix: ராஜாவின் இந்தப் பாடல்களெல்லாம் ரீமிக்ஸ் செய்யப்பட்டால்… பொருத்தமான நடிகர் யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top