வேதாரண்யம் அருகே ஒரே நாளில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே இருக்கும் பெரிய திடல் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி அலமேலு. 70 வயதான இவர் வாண்டுவாஞ்சேரி சரபோஜிபுரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு நேற்று சென்றிருக்கிறார். அங்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர், அருகில் இருந்த மரத்தடி நிழலில் ஓய்வெடுத்திருக்கிறார்.
அப்போது ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்திருக்கிறது. இதையடுத்து, அலமேலு ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டது தெரியாமல், அங்கிருந்தவர்கள் அவரை ஆண்கள் வரிசையில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி இரண்டு முறை போடுவார்கள் என்று நினைத்த மூதாட்டி அலமேலு, ஆண்களுக்கான வரிசையில் சென்று இரண்டாவது முறையாகத் தடுப்பூசி போட்டிருக்கிறார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அலமேலு, தனது மகளிடம் இரண்டு தடுப்பூசிகள் போட்டது குறித்து சொல்லியிருக்கிறார். இதையடுத்து, இந்த விவகாரம் வெளியில் பரவத் தொடங்கி சுகாதாரத் துறையினருக்கும் தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த சுகாதாரத் துறையினர் அலமேலுவின் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்திருக்கிறார்கள். விசாரணையில், ஒரே நாளில் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மூதாட்டி அலமேலுவை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்து வருகிறார்கள் சுகாதாரத் துறையினர். மூதாட்டி அலமேலு உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.