1990களில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரானிக் பிராண்டாக ஜொலித்த வீடியோகான் நிறுவனம் திவாலாகி நிற்கிறது. அதன் சரிவு எங்கு தொடங்கியது… எங்கே தவறவிட்டது வீடியோகான்?
வீடியோகான்
1986-ல் மூன்று சகோதரர்களால் தொடங்கப்பட்டதுதான் இந்த நிறுவனம். அதிகம் டிரேடிங் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த கம்பெனி பேப்பர் டியூப்களை விற்றுக்கொண்டிருந்தது. அதன்பின்னர் பல்வேறு பொருட்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம் ஈடுபடத் தொடங்கியது. கலர் டிவி, வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டது. கலர் டிவி புரடக்ஷன் தொடங்கிய இந்தியாவின் முதல் நிறுவனம் அதுதான். 1990களின் தொடக்கத்தில் ஏசி, ஃபிரிட்ஜ், பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம் கால்பதித்தது. 1991 வீடியோகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரானிக் நிறுவனமாக உருவெடுத்தது.
சறுக்கல் தொடங்கியது எங்கே?
ஆனால், அதோடு அந்த நிறுவனம் நிற்கவில்லை. அதன்பிறகு தங்களுக்குத் தெரியாத பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, டெலகாம், ரீடெய்ல், டிடிஎச் சேவை என பலதுறைகளிலும் வியாபாரத்தை விரிவுபடுத்தினர் வீடியோகான் நிறுவன உரிமையாளர்களான சகோதரர்கள். மிகப்பெரிய முதலீடு தேவைப்பட்ட இந்தத் துறைகளில் இருந்து வீடியோகான் நிறுவனத்தால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. லாபம் பார்த்த தொழில்களில் இருந்து வந்த பணம் முழுவதும் இதுபோன்ற தொழில்களால் முடங்கத் தொடங்கியது. இறுதியாக 2018-ல் திவாலானதாக வங்கிகளுக்கான தீர்ப்பாயத்தில் ஒப்புக் கொண்டது வீடியோகான். வீடியோகான் குழுமம் மொத்தமாக ரூ.71,000 கோடி அளவுக்கு கடன்பட்டதாகக் கணக்கு சொல்லப்பட்டது.
இந்திய திவால் சட்டத்தின்படி வீடியோகான் நிறுவனம் பணம் திரும்ப அளிக்க வேண்டிய நிறுவனங்களுக்கு அதைத் திரும்பக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், 13 நிறுவனங்கள் கொண்ட வீடியோகான் குழுமம் அந்த நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதான வேலையாக இல்லை. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வீடியோகான் நிறுவனத்தின் liquidation value – ரூ.2,500 கோடி என்றும் fair market value ரூ.4,500 கோடி என்றும் கணக்கிடப்பட்டது. அதாவது, அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.2,500-4,000 கோடிக்குள் இருக்கும் என்று முடிவுக்கு வந்தார்கள். 71,000 கோடி ரூபாய் கடன் கொண்ட அந்த நிறுவனம் மொத்தமாகவே 4,000 கோடிக்குள் மதிப்பிடப்பட்டது துரதிருஷ்டவசமானது.
வேதாந்தா என்ட்ரி
வீடியோகான் நிறுவனத்தின் இந்த மதிப்பீடுகள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நிறுவனத்தை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிக்விடேஷன் தொகைக்கு மிக நெருக்கமாக ரூ.2,900 கோடி என்ற ஒரு தொகையைக் குறிப்பிட்டது வேதாந்தா நிறுவனத்தின் ட்வின் ஸ்டார் டெக்னாலஜிஸ். அந்தத் தொகையைக் கேட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டதா என்று சந்தேகம் கிளப்பினர். பின்னர், ஒருவழியாக 2,900 கோடி ரூபாய் டீல் பேசி முடிக்கப்பட்டது. யோசித்துப் பாருங்கள் வீடியோகான் நிறுவனத்துக்கு பொருட்கள் சப்ளை செய்த சின்னச் சின்னநிறுவனங்களுக்கு 71,000 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது என்னவோ 0.72% பணம் மட்டுமே.
ஆந்திராவின் கிருஷ்ணா கோதாவரி நதிப் படுகையில் இருக்கும் Ravva Oil field-ல் வீடியோகான் நிறுவனம் வைத்திருந்த 25% பங்குகளும் வேதாந்தா வசமானது. இதன்மூலம் அந்த ஆயில் ஃபீல்டில் மொத்தமாக 47.5% பங்குகள் அந்த நிறுவனத்திடம் வந்தன. இதன்மூலம் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சியை விட அதிகமான பங்குகளைக் கொண்டதாக வேதாந்தா மாறியது. வீடியோகான் நிறுவனம் மீது வேதாந்தா கண்வைத்ததற்கான காரணம் இப்போது புரிகிறதா… இப்படியாக வீடியோகானின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.