இங்கிலாந்தின் புகழ்பெற்ற தனியார் வங்கிகளுள் ஒன்று பேரிங்ஸ் வங்கி. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த வங்கி பேரன்பெர்க் வங்கிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான வங்கியாகும். 1700-களில் மிகவும் பணக்கார குடும்பமாக விளங்கியது பேரிங் குடும்பம். இங்கிலாந்து – ஜெர்மனியில் புகழ்பெற்று விளங்கிய இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் பேரிங், லண்டனில் 1792-ல் பேரிங்ஸ் வங்கியைத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின்போது உலக அளவில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இங்கிலாந்து அரசு இந்த வங்கியையே பயன்படுத்தியது. அதேபோல், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுள் ஒருவர். அப்படிப்பட்ட நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க பேரிங்க்ஸ் வங்கி, நிக் லெஸன் என்ற ஊழியரின் அதிகப் பிரசங்கித் தனத்தால் 1995-ல் திவாலானது. அந்த அதிர்ச்சிப் பின்னணியைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நிக் லெஸன்
இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் அருகிலுள்ள வாட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்த நிக் லெஸன், பேரிங்ஸ் வங்கியின் அடிப்படை ஊழியராகப் பணியில் சேர்ந்தவர். இவருக்கு 1992-ல் முக்கியமான போஸ்டிங்கைக் கொடுத்து, சிங்கப்பூர் அலுவலகத்துக்கு அனுப்பியது பேரிங்ஸ் வங்கி. அந்த வங்கியைத் தனது தங்க முட்டையிடும் வாத்தாக மாற்றிய நிக் லெஸன் ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 10 மில்லியன் பவுண்ட் (இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.103 கோடி) அளவுக்கு சம்பாதித்தார். இது அந்த வங்கியின் ஆண்டு வருமானத்தில் 10 சதவிகிதமாகும்.
பேரிங்ஸ் வங்கி நிக் லெஸனை arbitrage எனப்படும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பியது. ஆர்பிட்ரேஜ் எனப்படுவது, இரண்டு பங்கு சந்தைகளில் இருக்கும் விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி, ஒரு சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கை வாங்கி, அதை கூடுதல் விலைக்கு மற்றொரு சந்தையில் குறுகிய காலத்தில் விற்று குறைந்தபட்ச லாபத்தை உறுதி செய்வதாகும். இதன்படி, ஜப்பான் பங்குச் சந்தை மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் பேரிங்ஸ் வங்கி சார்பாக முதலீடு செய்யக் கூடிய பங்குகளை அடையாளம் கண்டு, வாங்கி விற்பது நிக் லெஸனின் பணி.
நிக் லெஸனின் செயல்பாடுகள் தொடக்கத்தில் பேரிங்ஸ் வங்கிக்குப் பெரிய அளவில் லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதன்மூலம் வங்கி உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குரியவராக மாறிய நிக், பெரிய முதலீடுகளில் ஆர்வம் காட்டினார். 1992ம் ஆண்டு டிசம்பரில் நிக் லெஸன் முதல் தவறைச் செய்தார். சிங்கப்பூர் பங்குச் சந்தையில் ஒரு பங்கை விலைக்கு வாங்கிய அவர், குறிப்பிட்ட காலத்துக்கும் மேலாக அந்தப் பங்கை ஜப்பான் சந்தையில் விற்காமல் இருக்கவே, அது பேரிங்ஸ் வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், சிறிய அளவிலான தொகை என்பதால், போலி கணக்குகள் மூலம் அதை சரிக்கட்டினார் நிக். இதை பேரிங்க்ஸ் வங்கி அதிகாரிகள் கண்டுபிடிக்காத நிலையில், அது அவருக்கு தைரியத்தைக் கொடுத்தது.
நஷ்டத்தை ஈடுகட்ட முதலீடுகளை இரு மடங்காக்கி விளையாடத் தொடங்கிய நிக் லெஸனின் கணக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக தவறத் தொடங்கின. 1994 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிக் லெஸனின் செயல்பாடுகளால் பேரிங்ஸ் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 200 மில்லியன் பவுண்டுகள். அப்போதே அவரது தவறுகளைக் கண்டுபிடித்திருந்தால், பேரிங்ஸ் வங்கி திவாலாகாமல் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள். அந்த காலகட்டத்தில் நஷ்டத்தை மறைத்து இங்கிலாந்து வரித்துறை அதிகாரிகளிடம் பேரிங்ஸ் வங்கிக்கு 102 மில்லியன் பவுண்ட் லாபம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டினார் நிக் லெஸன். எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என முன்னைவிட ஆவேசமாக செயல்பட்ட நிக் லெஸன், இறுதியாக 1995 பிப்ரவரியில் மொத்த இழப்புகளையும் ஈடுகட்டும் வகையில், மிகப்பெரிய முதலீட்டை ஜப்பான் பங்கு வர்த்தகத்தில் செய்தார். ஆனால், 1995ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ஜப்பானின் ஹான்ஷின் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் அந்நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்துப் போட்டது.
Also Read : ஆண்கள் தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்! #ScientificallyProved
நிக் லெஸன் முதலீடு செய்த பணம் மொத்தமாகப் பறிபோனது. 1995ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குப் பறந்த நிக் லெஸன், `I’m Sorry’ என்ற குறிப்பை எழுதிவைத்துவிட்டு கிளம்பினார். ஆடிட்டர்கள் இந்த மோசடியைக் கண்டுபிடித்தபோது நிக் லெஸனால், பேரிங்ஸ் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 827 மில்லியன் பவுண்ட் (இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.8,542 கோடி) என்று கணக்கிடப்பட்டது. இதனால், பேரிங்ஸ் வங்கி ஆட்டம் கண்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை இழந்த பேரிங்ஸ் வங்கியால் அதிலிருந்து மீளமுடியவில்லை. 1995ம் ஆண்டில் திவாலான நிலையில், டச்சு வங்கியான ஐ.என்.ஜி, பேரிங்ஸ் வங்கிய ஒரு பவுண்ட் விலையில் கையகப்படுத்தியது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க பேரிங்ஸ் வங்கி, ஒரே ஒரு ஊழியரின் தவறால் திவாலானது நிதித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது. பின்னர் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் நகரில் கைது செய்யப்பட்ட நிக் லெஸன், சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது கதைRouge Trader’ என்ற பெயரில் நாவலானது. இதற்காக 2,00,000 பவுண்ட் காப்புரிமை நிக் பெற்றார். அதன்பின்னர், திரைப்படமாகவும் வெளியானது. படத்துக்காக 7 மில்லியன் பவுண்டுகள் நிக் லெஸனுக்குக் கொடுக்கப்பட்டது.