ஸ்பானிஷ் ஓவியரான பாப்லோ பிகாசோவின் `Woman sitting by a window (Marie-Therese)’ என்ற ஓவியம் நியூயார்க்கில் 103.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.755 கோடி. என்னது 755 கோடியானு வாயப் பிளக்காதீங்க… நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்!
நியூயார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டி ஏல மையம் இந்த ஓவியத்தை ஏலத்துக்கு கொண்டு வந்தது. 1932-ம் ஆண்டில் வரைந்து முடிக்கப்பட்ட இந்த ஓவியம் 90 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. கமிஷன், ஃபீஸ் ஆகியவை சேர்ந்த்து இந்த ஓவியத்தின் மொத்த விலை 103.4 மில்லியன் அமெரிக்க டாலர். 19 நிமிடத்தில் இந்த ஓவியம் ஏலம் விடப்பட்டுள்ளது. ஓவியத்தில் பெண் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த பெயிண்டிங் 55 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், மே 13-ம் தேதி நடந்த ஏலத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்கு ஏலம் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கொரோனா நோய்த்தொற்று இருந்தபோதிலும் கலையின் மதிப்பும் பிகாசோவின் மதிப்பும் கொஞ்சமும் குறையவில்லை என கலையின் மீது ஆர்வம் உள்ளவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே ஓவியம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் 28.6 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது 44.8 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. பிகாசோவின் ஆசை நாயகி மேரி தெரேஸ் வால்டர் தான் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளார். பிகாசோவும் அவரின் ஆசை நாயகியும்தான் இந்த ஓவியத்தின் சிறப்பே.
பிகாசோவின் ஐந்து ஓவியங்கள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவரின் `Women of Algiers’ என்ற ஓவியம் சுமார் 179.4 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது பிகாசோவின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்பனையான ஓவியங்களில் பிகாசோவின்
Woman sitting by a window (Marie-Therese)’ என்ற ஓவியமும் ஒன்று.
கிளாட் மொனாட்டின் `மியூல்ஸ்’ தொடரின் ஓவியம் ஒன்றும் 110.7 மில்லியன் டாலர்களுக்கு நியூயார்க்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விலைபோனது. கடந்த செவ்வாய்க் கிழமையன்று அமெரிக்க ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் ஓவியமும் கிறிஸ்டி ஏல மையத்தில் இருந்து சுமார் 93.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
Also Read : `The Ellen DeGeneres Show’-வில் என்ன ஸ்பெஷல்… 19 வருடங்களுக்குப் பின் முடிய என்ன காரணம்?