மனம் திருந்தியவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் சொன்ன குட்டிக் கதை அ.தி.மு.க-வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க கிறிஸ்துமஸ் விழா
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரி முதியோர் இல்லத்தில் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், முதியோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கு மதிய உணவும் பரிமாறப்பட்டது. பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கல்வி, மருத்துவத்தை அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவர்கள்தான் என்று புகழாரம் சூட்டினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலனுக்காக அ.தி.மு.க செய்த நன்மைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். ஜெருசலேம் புனிதப் பயணத்தைத் தொடங்கி வைத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசுதான் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான பயணக் கட்டணத்தைக் குறைத்தது, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள் வழங்கியதும் அ.தி.மு.க அரசுதான் என்று பேசினார்.
மேலும், மனம் திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என இயேசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஓ.பி.எஸ் கூறுகையில், “இயேசு சொல்கிறார்.நான் அன்னவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே பூமிக்கு வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு; அதுவே ஏற்புடையது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அ.தி.மு.க-வைக் கைப்பற்ற சசிகலா முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலேயே ஓ.பி.எஸ் இந்த குட்டிக் கதையை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சொன்னதாக சலசலப்பு ஏற்பட்டது.
சசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓ.பி.எஸ் சொன்ன குட்டிக் கதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், “சசிகலாவுக்கு மன்னிப்பே இல்லை என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக இருக்கிறார்கள். சசிகலாவுக்காக ஓ.பி.எஸ் அந்தக் குட்டிக் கதையைச் சொல்லவில்லை. பாமரர்களுக்காக சொன்ன கதையை சசிகலாவோடு பொருத்திப் பார்க்கக் கூடாது’’ என்று விளக்கமளித்திருக்கிறார். அதேநேரம், ஓ.பி.எஸ் சசிகலாவைத் திரும்ப கட்சியில் சேர்த்துக் கொள்ளும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்தக் கதையைச் சொன்னதாக அ.தி.மு.க-வில் ஒருதரப்பினர் பேசி வருகிறார்கள்.
Also Read – Thangamani: தங்கமணிக்கு ஸ்கெட்ச் ஏன்… ரெய்டும் பின்னணியும்!