யார் இந்த பூங்குழலி… அவருக்கு சமுத்திரகுமாரினு ஏன் பெயர் வந்துச்சு… கோடியக்கரையில் இருந்து தனியாகவே இலங்கைக்குப் படகுவிடத் தெரிந்த பூங்குழலி மனிதர்களையே வெறுப்பது ஏன் தெரியுமா… தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.
யார் இந்த பூங்குழலி?
கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரான தியாகவிடங்க கரையரின் அன்பு மகள் பூங்குழலி. சிறு வயது முதலே கடலோடு வளர்ந்த பூங்குழலி, காற்றைப்போல மென்மையும் கடலைப்போல வலிமையும் நிறைந்தவள். கொள்ளிவாய் பிசாசுகளைத் தனது காதலர்களாக உருவகித்து வாழ்பவள். மனிதர்களின் குணம் அடிக்கடி மாறும் என்பதால், மனிதர்களே இல்லாத பிரதேசத்தில் வாழ வேண்டும் என்று கனவு காண்பவள். வீரமிக்க பூங்குழலி பாடல் பாடுவதில் கைதேர்ந்தவள். `அலைகடலும் ஓய்ந்திருக்க…’ என்று பூங்குழலி பாடும் பாடல் பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களின் ஆதர்ஸமான பாடல்.
வந்தியத்தேவன் மனதுக்கு நெருக்கமான தோழி. இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மருக்கு வந்தியத்தேவன் குந்தவையின் ஓலையைக் கொண்டு செல்கையில், அவனை அழைத்துச் சென்று உதவுவாள். மேலும், கோடியக்கரை காடுகளில் புதைமணலில் சிக்கிக் கொள்ளும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவது பூங்குழலிதான். அதேபோல், அருள்மொழி வர்மரும் வந்தியத்தேவனும் கடலில் தத்தளிக்கையில் அவர்களைக் காப்பாற்றி சோழ அரசுக்கு மாபெரும் சேவை செய்பவள். அதேபோல், கடும் சுரக்காய்ச்சலால் அருள்மொழிவர்மர் அவதிப்படுகையில் அவரை நாகை சூடாமணி விஹாரத்துக்குக் கொண்டு சேர்த்து சிகிச்சைக்கு உதவுவாள். ஊமை ராணி மந்தாகினி தேவியின் பிரியத்துக்குரிய மருமகள். இவரது தந்தையான தியாகவிடங்கர், மந்தாகினியின் சகோதரர். காற்றைப்போல யார் கைகளிலும் சிக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரியும் பூங்குழலி, மிகுந்த மனதைரியம் உடையவள்.
தன்னைத் தாக்க வந்த சிறுத்தையையும் மீனின் வால் கொண்டு தாக்கிக் கொல்லும் வீரம் செறிந்த பெண். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் குந்தவை, நந்தினி, வானதி, மணிமேகலை உள்ளிட்ட மற்றெந்த பெண் கதாபாத்திரங்களில் இருந்தும் பூங்குழலி வேறுபட்டவள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலி அழகும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவள். மனிதர்களைக் கண்டாலே கோபம் கொள்ளும் கோபக்காரி. பல இடங்களில் பூங்குழலி கொடுக்கும் தகவல் முக்கியமான முடிவுகளை எடுக்க உதவும்.
Also Read: `பொன்னியின் செல்வன்’ நாவல் Vs படம்… எதெல்லாம் எப்படி மாறியிருக்கு?
சோழ இளவரசன் அருள்மொழிவர்மரின்பால் மனதைப் பறிகொடுத்தவர். அவர், தனக்கு சமுத்திரகுமாரி என்று பெயர் வைத்ததாக வந்தியத்தேவனிடம் சொல்பவள். அருள்மொழிவர்மரின் தந்தை சுந்தரச் சோழர், தனது அத்தை மந்தாகினி தேவியைக் கைவிட்டதாக எண்ணும் பூங்குழலி, ஒரு நாள் அரியணை ஏறும் அரசரை மணந்து மகாராணியாக வீற்றிருக்க வேண்டும் என்று சபதம் ஏற்பாள். அருள்மொழிவர்மருடன் யானையில் பயணிக்கும்போது, அந்தக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆனால், சேந்தன் அமுதனின் தூய்மையான அன்பால், தனது சபதத்தை விடுத்து அவரைத் திருமணம் செய்ய முன்வருவாள். காலத்தின் சூழலால் மதுராந்த உத்தமச் சோழராக சேந்தன் அமுதன் சோழ அரியணை ஏற, மகாராணியாக பூங்குழலியின் சபதம் நிறைவேறும்.
ஒரு பேட்டியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், பொன்னியின் செல்வன் நாவலின் பூங்குழலி கேரக்டரில் இயக்குநர் மணிரத்னத்துக்கு ஈர்ப்பு இருந்ததாகப் பகிர்ந்திருப்பார். அதேபோல்தான், பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த கேரக்டராக பூங்குழலி இருப்பார். சரி, நீங்க சொல்லுங்க பூங்குழலி கேரக்டரை உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும்… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க!
விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அருண்மொழியை சேந்தன் அமுதனும் பூங்குழலியும் படகில் நாகை செல்லும் கால்வாயில், அதிகாலை காட்சிகளின் வர்ணணை நெஞ்சைவிட்டகலாது!தலைமை
புத்த பிட்சுவிடம் இளவரசரை ஒப்படைத்தபின் பிரியா விடை பெறும் பூங்குழலியை மீண்டும் கதையில் எங்கே சந்திப்போம் என இதயம் துடிக்கும்!