பி.வி.சிந்து

ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம்… வெண்கலம் வென்ற பி.வி.சிந்து – கடந்துவந்த பாதை!

ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் He Bing Jiao-வை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் கடந்துவந்த பாதை…

2016 ரியோ ஒலிம்பிக் மகளிர் பிரிவு ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினாவோடு மோதினார் பி.வி.சிந்து. அந்தப் போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும், வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பினார். அதனால், இப்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. 130 கோடி இந்தியர்களின் கனவோடு டோக்கியோவுக்குப் பறந்தார் பி.வி.சிந்து. அரையிறுதியில் பி.வி.சிந்துவுக்கு எதிரான போட்டியில் சீன வீராங்கனை Tai Tzu-Ying வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வென்று சாதனை படைத்திருக்கிறார் சிந்து.

பி.வி. சிந்து – ஒலிம்பிக்குக்கு முன்பு…

பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாம் நிலை வரை எட்டிப் பிடித்த பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்குக்கு முன்பாக நடந்த ஸ்விஸ் ஓபனில் வெள்ளி வென்றிருந்தார். அதையடுத்து, ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரின் அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். இதையடுத்து, ஆறாம் நிலை வீராங்கனையாக Group J-வில் இடம்பெற்றார். அந்தப் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான இஸ்ரேலின் Ksenia Polikarpova, ஹாங்காங்கின் Cheung Ngan Yi ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் – குரூப் ஸ்டேஜ்

முதல் சுற்றில் இஸ்ரேலின் Ksenia Polikarpova-வை 21-7, 21-10 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார். இரண்டாவது போட்டியில் பி.வி.சிந்துவுக்கு ஹாங்காங்கின் Cheung Ngan Yi சவாலாக விளங்குவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி 21-9, 21-16 என்ற நேர்செட்களில் வீழ்த்தி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்று

டோக்கியோ ஒலிம்பிக்குக்காக ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்ட பி.வி.சிந்து பதக்கத்தோடு இந்தியா திரும்ப வேண்டும் என்ற உத்வேகத்தோடே விளையாடினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை Mia Blichfeldt-ஐ 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த அவர், காலிறுதியில் ஜப்பானைச் சேர்ந்த உலகின் நான்காம் நிலை வீராங்கனை Akane Yamaguchi-யை எதிர்க்கொண்டார். உள்ளூர் வீராங்கனையானையான Akane முதல் சுற்றில் பின் தங்கியிருந்தாலும் இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுக்க முயற்சித்தார். ஆனால், அவரை 21-13, 22-20 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றார் பி.வி.சிந்து.

அரையிறுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்துவுக்கு அக்னிப் பரீட்சையாக அமைந்த போட்டி அரையிறுதி. இதில், சீன தைபேயைச் சேர்ந்தவரும் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனையுமான Tai Tzu Ying-ஐ எதிர்த்து விளையாடினார். களத்தில் இரண்டு பேரும் ஆக்ரோஷமாக விளையாடவே போட்டி பரபரப்பாக நடந்தது. ஆனால், பி.வி.சிந்துவை எளிதாக செட்டிலாக விடாமல் போக்குகாட்டிய Tai Tzu Ying, 40 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார். 18-21, 12-21 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார்.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

வெண்கலம்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கக் கணவு தகர்ந்தாலும், வெண்கலத்துக்கான போட்டியில் சீனாவின் He Bing Jiao-வை எதிர்க்கொண்டார் சிந்து. தோல்வியிலிருந்து மீண்ட சிந்து, இந்தப் போட்டியில் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய பி.வி.சிந்து, `இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைவதா.. இல்லை தங்கத்தைத் தவறவிட்டுவிட்டோமே என கவலைப்படுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறேன்’ என்றார். இதன்மூலம், ஒலிம்பிக்கின் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

2024 ஒலிம்பிக்கில் தங்கம் நனவாகட்டும் இந்தியாவின் மகளே… வாழ்த்துகள் பி.வி.சிந்து!

Also Read – ஒலிம்பிக்கில் முதல்முறை… அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி – ஆஸ்திரேலியா வீழ்ந்தது எப்படி?

1 thought on “ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம்… வெண்கலம் வென்ற பி.வி.சிந்து – கடந்துவந்த பாதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top