டோக்கியோ ஒலிம்பிக்கின் 49 கிலோ எடைபிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பளுதூக்கும் போட்டியின் 49 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்றவர் சீன வீராங்கனை Zhihui Hou. தங்கம் வென்று இரண்டு நாட்களுக்குப் பின்னர் இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஊக்க மருந்து சோதனை முடியும்வரை டோக்கியோவிலேயே அவரைத் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு வேளை தடை செய்யப்பட்டிருந்த மருந்துகளை அவர் எடுத்திருந்தது நிரூபணமானால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். போட்டி விதிகளின்படி வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்குத் தங்கப் பதக்கம் கிடைக்கும்.

Snatch, Clean மற்றும் Jerk என்ற 2 சுற்றுகளாக பளுதூக்கும் போட்டி நடக்கும். இதில் 49 கிலோ எடைபிரிவில் Clean மற்றும் Jerk சுற்றில் 116 கிலோ எடையைத் தூக்கி அசத்திய மீராபாய் சானுவிடமே அதிக பளுதூக்கிய உலக சாதனை இருக்கிறது. ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவை முந்திய சீன வீராங்கனை Zhihui Hou, Snatch சுற்றில் 94 கிலோ எடையைத் தூக்கி ஒலிம்பிக்கில் புதிய சாதனையைப் பதிவு செய்தார். அதேபோல், Clean மற்றும் Jerk சுற்றில் 116 கிலோ பளுவைத் தூக்கியிருந்தார். அதேநேராம், Snatch-ல் 87 கிலோவையும் Clean மற்றும் Jerk சுற்றில் 115 கிலோ எடையையும் மீராபாய் தூக்கியிருந்தார். இறுதிச் சுற்றில் 117 கிலோ எடையைத் தூக்க முயற்சித்தார். ஆனால், முடியவில்லை.
புள்ளி கணக்கில் முதலிடத்தில் இருந்த சீன வீராங்கனை தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தோனேசியாவின் Windy Cantika மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றிருந்தார்.
பதக்கம் வென்று இரண்டு நாட்களுக்குப் பிறகு சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆனால், உரிய விதிகளைப் பின்பற்றியே இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளி வென்று தாயகம் திரும்பியிருக்கும் மீராபாய் சானுவுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஏ.டி.எஸ்.பியாக நியமித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.