1996 காலகட்டத்துல பத்திரிக்கையில மஞ்சு வாரியரைக் காணவில்லைனு ஒரு செய்தி வருது. அப்போ இந்த நியூஸைக் கொடுத்ததே அவங்க அம்மாதான்னும் செய்திகள் வெளியாச்சு. அந்த நேரத்துல அவங்க வெறும் 2 படங்கள் மட்டும்தான் நடிச்சிருந்தாங்க. இவங்களைக் காணவில்லைங்குற நியூஸ்ல பல வந்ததிகளும் உலா வருது. அப்படி வரும்போது பொதுவா ஒரு நடிகை புதுசா எண்ட்ரி கொடுக்குறப்போ அவங்க ப்யூச்சரை பாதிக்கும். ஆனா, மஞ்சு வாரியருக்கு அது ரிவர்ஸ்ல நடந்தது. அடுத்தடுத்து 5 படங்கள் வரிசைகட்டி நின்னது. மலையாள சினிமா உலகின் நடிப்பில் லேடி மோகன்லால், அழகில் லேடி மம்முட்டி, டயலாக் டெலிவரியில லேடி சுரேஷ்கோபி இப்படி பலராலும் வர்ணிக்கப்படுகிறவர், நடிகை மஞ்சு வாரியர். ஆனா, இப்படி எந்த வட்டத்துக்குள்ளயும் அடக்க முடியாத நடிப்பின் அரக்கினு சொன்னா, அதுவும் சரியாத்தான் இருக்கும். நடிப்போட சேர்த்து இவங்களோட கதையைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
இவங்க பூர்வீகம், கேரளாவுல இருக்க திருச்சூர். மஞ்சு வாரியர் அப்பா நாகர்கோவில்ல ஒரு பைனான்ஸ் கம்பெனியில வேலை பார்த்தார். அதனால 10 வயசு வரைக்கும் நாகர்கோவில்லதான் மஞ்சு வளர்ந்தாங்க. அதுக்கப்புறம் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆக அவங்க கண்ணூர்ல போய் செட்டில் ஆகியிருக்காங்க. மஞ்சுவை எப்படியாவது பெரிய ஆளா ஆக்கிடணும்னு அவங்க அப்பாவுக்கு ஆசை. அதனால சின்ன வயசுலயே க்ளாசிக்கல் டான்ஸ் கிளாஸ்ல சேர்த்திருக்காரு. அதில கலா திலகம் அப்படிங்குற மாநில விருதும் வாங்குறாங்க. அவங்க சினிமாவுக்கு வர்றதுக்கு பவுண்டேஷன் போட்டுக் கொடுத்ததே அப்பானு கூட சொல்லலாம். சினிமா வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னால தூர்தர்சன்ல ஒளிபரப்பான ‘மோகரவம்’ங்குற சீரியல்லதான் அறிமுகம் ஆனாங்க. டி.வியில இருந்து சினிமாவுல சாதிச்சவங்க வரிசையில மஞ்சுவுக்கும் இடம் உண்டு.
1995-ம் வருஷம் மஞ்சு வாரியர் சாக்ஷியம் படம் மூலம் துணை நடிகையா என்ட்ரி ஆகுறாங்க. அந்த படத்துல அவங்க நடிக்கும்போது வெறும் 17 வயசு. சின்ன வயசுலயே சினிமாவுக்குள்ள எண்ட்ரி கொடுத்த நடிகைகள்ல இவங்களும் ஒருத்தர். அடுத்த வருஷம் ‘சல்லாபம்’ அப்படிங்குற படத்துல ஹீரோயின் வாய்ப்பே கிடைச்சது. அந்த படத்துல இவருக்கு ஜோடி நடிகர் திலீப். இந்த ஜோடியோட கெமிஸ்ட்ரி அப்போ மக்கள் மத்தியில பிரபலமும் ஆச்சு. இந்த ஜோடி பிரபலமானதால அடுத்தபடமான தூவல் கொட்டாரம் படத்துல ரெண்டுபேரும் ஜோடி சேர்ந்து நடிச்சாங்க. இதற்குப் பிறகுதான் திலீப்-மஞ்சு வதந்திகள் வர ஆரம்பிச்சது. வதந்திகளை உண்மையாக்குற மாதிரியே ரெண்டுபேருக்கும் காதல் மலர ஆரம்பிச்சது.
ஹீரோயின்னா வெறும் மரத்தைச் சுத்தி டூயட் பாடிட்டு போற கேரெக்டர்னு இருந்த காலத்துல ரேவதி, ஊர்வசி, ஷோபனா மாதிரி இவங்களும் தன்னோட தனித்துவமான கேரெக்டர்ல தனிச்சு நின்னாங்க. தன்னோட 16 வயசுல 95-ம் வருஷம் ஒரு படம் மட்டும் பண்ணினவங்க, அடுத்த 4 வருஷத்துல மொத்தமா 20 படங்கள் முடிச்சிருந்தாங்க. ஆறாம்தம்புரான், கண்மடம், சம்மர் இன் பெத்தல்கேம், இரட்டை வேடத்துல நடிச்ச தயானு நிறைய படங்கள் இவங்களை விருதுக்கு எடுத்துட்டுப் போனது. இதோட உட்சபட்சமா ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ படத்துக்காக தேசிய விருதும் வாங்குறார். அப்பவும் இவங்களைப் பத்தி வதந்திகள் பரவிக் கிட்டேதான் இருந்தது. அப்போ சினிமா கெரியரொட உச்சத்துல இருந்த மஞ்சு வாரியர் இருந்த நேரம். தேசிய விருதோட சினிமா கெரியரின் முதல் அத்யாத்தை முடிச்சிட்டு நடிகர் திலீப்பை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிட்டாங்க. அப்போ அவங்களுக்கு வயசு வெறும் 21 தான். அதுக்குப் பின்னால கணவன்-குழந்தைனு செட்டில் ஆகிட்டாங்க. அப்போதான் மஞ்சுவாரியரோட தோழி காவ்யா மூலமா திலீப்- மஞ்சு தம்பதிக்குள்ள பிரச்னை ஆரம்பிச்சது.
மணவாழ்க்கையின் முதல் அடி!
திலீப்புக்கும், நடிகை காவ்யாவுக்கும் லவ் இருக்குனு மலையாள இண்டஸ்ட்ரிக்குள்ள வதந்திகள் பரவ ஆரம்பிச்சது. ஆரம்பத்துல மஞ்சுவாரியர் இதை எதையுமே நம்பலை. ஒரு கட்டத்துக்குமேல உண்மை தெரியவர மஞ்சு திலீப்கிட்ட இருந்து விலகி விவாகரத்தும் வாங்கிட்டு போயிடுறார். இது மஞ்சுவாரியரோட திருமண வாழ்க்கையில விழுந்த முதல் அடி. இதுல மஞ்சு வாரியருக்கு விழுந்த இன்னொரு அடினா அவங்க பொண்ணு ‘எனக்கு அம்மா வேணாம், அப்பாதான் வேணும்’னு சொல்லிட்டு திலீப்கூட போக, கேரளாவுல இருந்த முக்கியமான அரசியல்வாதியே ‘பொம்பள நல்லா இருந்தா ஏன், பொண்ணு அப்பாகிட்ட போகப் போகுது’னு வாய்க்கு வந்தபடி பேசினார். இதனால கொஞ்சம் மனசளவுல பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவங்களோட தைரியமான குணம் மறுபடியும் எதாவது செய்யணும்னு தோண வச்சது. அதுக்காக பல முயற்சிகள் எடுக்கிறார்.
மணமுறிவு வாழ்க்கையில இருந்து மீண்டு வர்றதுக்கு அவங்களுக்கு ஒரு முக்கியமான புத்தகம் காரணமா இருந்தது. அந்த புத்தகம் உலகத்துலயே கவனிக்கத்தக்க ஒரு நாட்டோட பிரதமர் எழுதினது. அத யோசிச்சு வைங்க. அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.
15 வருடங்களுக்குப் பிறகு ரீ-எண்ட்ரி!
‘நாம திருமண வாழ்க்கைக்குள்ள போனோம். நமக்கு அது செட் ஆகலை. நாம மறுபடியும் படம் நடிக்கலாமேனு முடிவு பண்ணி 15 வருஷ இடைவெளிக்கு அப்புறமா ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மூலமா திரும்பி வந்தாங்க. அந்த படத்துல தனிஒருத்தியா தான் நினைச்சதை முயற்சியால சாதிக்கிற கேரெக்டர். அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருந்தார், மஞ்சு. அடுத்த வருஷத்துல இருந்து 2022 வரைக்கும் வருஷத்துக்கு 3 படங்கள் நடிச்சிகிட்டிருக்கார். நம்ம தல படத்தோட சேர்த்து இப்போ அவங்க கையில இருக்குற படங்களோட எண்ணிக்கை மட்டும் 5. சொல்லப்போனா முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ்ல ரொம்பவே கஷ்டப்பட்டார் மஞ்சு. ஆனால், தன்னோட விடாமுயற்சியால லூசிபர், அசுரன்னு நடிச்சு, இப்போ இந்தியில அம்ரிக்கி பண்டிட், இந்தோ-அரபுல ஆயிஷாங்குற ஒரு படமும் இவங்க லைன்-அப்ல இருக்கு.
மஞ்சுவின் ஸ்பெஷல்!
நல்லா கவனிச்சா மஞ்சு வாரியரோட குரல்ல ஒரு தனித்தன்மை இருக்கும். அது என்னன்னா… அவங்க பேசி முடிக்கிறப்போ சவுண்ட் சிஸ்டத்துல வர்ற சில்னஸ் சவுண்ட் ஒண்ணு வரும். அந்த சில்னஸ் சத்தம் காதுவழியா போய் இதயத்துக்குள்ள உட்கார்ந்துக்கும். அது கேட்குறதுக்கு ரொம்பவே இனிமையா இருக்கும். அதே போல வீணை வாசிக்கிறது, பாடகர், டான்சர், தயாரிப்பாளர்னு ஏகப்பட்ட அவதாரங்களை எடுத்திருக்கார் மஞ்சு. அவரோட இன்னொரு பலம் போல்டான பாடிலாங்வேஜ். ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்துல ‘நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும்’னு பாரதி சொன்ன மாதிரி அவங்க நடந்து வரும்போது தியேட்டர்ல க்ளாப்ஸ் பறந்தது. செகண்ட் இன்னிங்ஸ்ல தைரியமான பெண்மணியா மொத்த படத்தையும் தாங்கி நின்னிருப்பாங்க.
போல்டான லேடி!
ஒரு நட்சத்திர ஜோடி பிரியும்போது அவர்கள் முன்னர் வைக்கப்படும் கேள்விகள் ஆயிரம் இருக்கும். அது மஞ்சுவுக்கும் இருந்தது. ஆனால் கணவர், குழந்தை தன்னை விட்டு போனாலும் எந்த இடத்துலயும் அவங்களை விட்டுக் கொடுத்த்து பேசியதே இல்லை. இங்கதான் மஞ்சு தனிச்சு தெரிஞ்சாங்க. ஏமாற்றப்பட்ட பெண்கள், `என்னை இப்படி ஏமாத்திட்டாங்க. அப்படி ஏமாத்தீட்டாங்க’னு சொல்வாங்க. இதை எதையுமே யார்கிட்டயும் சொல்லி வருத்தப்படவே இல்லை. தனிப்பட்ட மஞ்சு வாரியர் வாழ்க்கையில அவங்க அழுது எங்கயுமே பார்க்க முடியாது. சிரிச்ச முகமாத்தான் வலம் வந்துக்கிட்டிருக்காங்க. வாழ்க்கை எங்க கொண்டுபோகும், பார்த்துக்கலாம்னு தைரியமாவே வாழ்றாங்க மஞ்சு. இங்க ஒரு முக்கியமான விஷயம், மஞ்சுவும் திலீப்பும் பிரியும்போது மஞ்சுவுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்ல. ஆனா, இன்னைக்கு இவங்க நண்பர்களுக்கு ஒரு பிரச்னைனா முதல் ஆளா வந்து நிற்கிறது மஞ்சு வாரியர்தான். அதேபோல சக நடிகை திலீப்பால பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானப்ப, முதல்ல குரல் கொடுத்ததும் மஞ்சு வாரியர்தான். ‘கஷ்டம் வரும்போது எப்பவுமே தலைகுனிஞ்சு போகக் கூடாது’ங்குறதுதான் இவங்க பாலிசி. மனிதர்களுக்கு பிரச்னை எப்போ வேணாலும் வரலாம் ஆனா, அதுல இருந்து பீனிக்ஸ் பறவையா மீண்டு வரணும்ங்குறதுக்கு மலையாள உலகின் மகாராணி மஞ்சு வாரியார் மிகச் சிறந்த உதாரணம்.
வாழ்க்கையை மாற்றிய ‘பிடல் காஸ்ட்ரோ’ புத்தகம்!
மஞ்சு வாரியரோட லைப்ல ஒரு முக்கியமான புத்தகம் இருக்குனு சொன்னேன்ல அது என்னன்னா.. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ‘மை லைப்’ங்குற புத்தகம்தான் அது. இதை வாசிச்ச பின்னாடிதான் வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியம் மஞ்சுவுக்கு வந்திருக்கு. சொல்லப்போனா மை லைப் புத்தகம்தான் இன்னைக்கு அவங்க மஞ்சுவுக்கு போல்டான லைப் வாழ்றதுக்கு முக்கியமான காரணம்னு கூட சொல்லலாம். இதைப் பத்தி பிடல் காஸ்ட்ரோ மறைவு அன்னைக்குக் கூட மஞ்சு ஒரு செய்தி வெளியிட்டு இருந்தாங்க.
கடைசியா மகாராணிக்கு ஒரு சின்ன கவிதை ஒண்ணு,
அவள் கன்னங்கள் மருதாணிபோல சிவக்கும்
அவள் நெற்றியில் வைக்கும் குங்குமமும் குலுங்கி சிரிக்கும்
அவள் சிரிப்பில் தொட்டால் சிணுங்கியும் சிணுங்கும்
அவள் புருவங்களுக்கு மத்தியில் காந்த துருவங்களும் தோற்றுப்போகும்
அவளளவுக்கு யாரும் அழகாக இல்லை, அளவாகவும் இல்லை
மொத்தத்தில் அவள் சேலைக்கட்டி நடந்து வரும் ஒரு சோலை
வார்த்தையில் அடங்காத வர்ணனையே
உன்னை வர்ணிக்க முடியாத கம்பன் நான் தானே!
பல ஒருவரி கவிதைகளை ஒண்ணா செதுக்கி இவங்களைப் பத்தி சொல்லியிருக்கேன்… உங்க ஸ்டைல்ல மஞ்சுவுக்கு கவிதை சொல்லணும்னா அதை கமெண்ட்ல சொல்லுங்க.