பிரேம்ஜி

இதெல்லாம் பிரேம்ஜி பாடிய பாடல்கள் தெரியுமா?

காமெடி நடிகராக அறியப்படும் பிரேம்ஜி ஒரு இசையமைப்பாளர். அடிப்படையில் இவர் ஒரு பாடகரும்கூட. யுவன் சங்கர் ராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிக்கொண்டே யுவன் இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் சில பாடல்களை பாடியிருக்கிறார் பிரேம்ஜி. நமக்கு நன்கு பரிச்சயமான பல பாடல்களில் பிரேம்ஜியின் குரலும் இடம்பெற்றிருக்கிறது. அவைப் பற்றி பார்க்கலாமா? 

பிரேம்ஜி
பிரேம்ஜி

இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் பிறந்த கன்றுக்குட்டி பிரேம்ஜி என்பதால் அவருக்கு இயல்பாகவே இசை ஆர்வம் இருந்தது. சிறுவயதிலேயே குழந்தை பாடகராக இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார் பிரேம்ஜி. குறிப்பாக ‘அஞ்சலி’ படத்தில் இடம்பெற்ற ‘அஞ்சலி..அஞ்சலி’, ‘இரவு நிலவு’ போன்ற அந்தப் படப் பாடல்கள் எல்லாமே பிரேம்ஜி, யுவன் உள்ளிட்ட இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பாடியதுதான். என்றாலும் அவரை முதன்முதலாக ஒரு முழுப் பாடகராக அறிமுகப்படுத்தியது என்னவோ ஹாரிஸ் ஜெயராஜ்தான். அதற்கு முன்னதாக கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களின் இடையே வரும் ராப் வரிகளை பாடும் ராப் பாடகராக பிரேம்ஜி இருந்திருந்தாலும் தனி பாடலாக எதுவும் பாடியதில்லை. அந்தவகையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘12B’ படத்தில் வரும் ‘ஆனந்தம்’ எனும் ராப் பாடல்தான் பிரேம்ஜி பாடிய முழு தனி பாடல்.  அதன்பிறகு சில தெலுங்கு பாடல்கள் பாடிய பிரேம்ஜி, ‘ராம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வரும் ‘பூம் பூம் ஷக்கலக்க’ பாடலை அவருடன் இணைந்து பாடினார்.

பிரேம்ஜி
பிரேம்ஜி

விஜய் நடித்து மணிசர்மா இசையில் உருவான ‘திருப்பாச்சி’ பட ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சி’ பாடலில் வரும் ‘ஓ மை கடவுளே’ ராப் வரிகள் பிரேம்ஜி பாடியதுதான்.’அறிந்தும் அறியாமலும்’ படத்தில் வரும் ‘தீப்பிடிக்க தீப்பிடிக்க..’ பாடல் யுவன் இசையில் பிரேம்ஜி பாடிய முதல் தனிப்பாடல். இந்தப் பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தப் பாடலின் ஹிட்டைத் தொடர்ந்து யுவனின் இசையிலும் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் நிறைய பாடல் பாடத் தொடங்கினார் பிரேம்ஜி. ‘சென்னை-28’ படத்தில் இடம்பெற்ற ‘சரோஜா சாமான் நிக்கோலோ’, & ‘ஜல்சா பண்ணுங்கடா’, ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தில் வரும் ‘ஓரம்போ நைனா’ போன்ற பாடல்களெல்லாம் அப்போது பாடியதுதான். மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘சத்யம்’ படத்தில் ‘அட கட கட’ பாடலை பாடினார் பிரேம்ஜி. ‘மங்காத்தா’ படத்தில் வரும் ‘மச்சி ஓப்பன் த பாட்டில்’ தொடக்கமே பிரேம்ஜி குரலுடையது. ‘வேல்’ பட ‘ஆயிரம் ஜன்னல் வீடு’, ‘புதுப்பேட்டை’ பட ‘எங்க ஏரியா உள்ள வராதே’, ‘பட்டியல்’ பட ‘கண்ணை விட்டு’ போன்ற பிரபல ஹிட் பாடல்களில் ஆங்காங்கே பிரேம்ஜியின் குரல் எட்டிப் பார்த்திருக்கும். பிரேம்ஜி இசையமைப்பில் ஜெய் நடிப்பில் உருவான ‘அதுவொரு காலம் அழகிய காலம்’ எனும் சூப்பர் ஹிட் பாடலை பாடியது பிரேம்ஜிதான் என்பது பலருக்கும் தெரியாதது.

பாடல்கள் பாடியதுடன் யுவன் சங்கர ராஜா இசையமைத்த பாடல்கள் சிலவற்றின் நார்மல் வெர்சனை ரீமிக்ஸ் செய்து தானே பாடி அதே ஆல்பத்தில் இடம்பெறவும் செய்திருக்கிறார் பிரேம்ஜி. ‘வல்லவன்’ பட ஆல்பத்தில் செம்ம ஹிட்டடித்த ‘லூசுப்பெண்ணே’ பாடல் ரீமிக்ஸையும், ‘சென்னை-28’ படத்தில் ‘ஜல்சா பண்ணுங்கடா’ பாடல் ரீமிக்ஸையும் ‘மங்காத்தா’ பட ‘விளையாடு மங்காத்தா’ பாடல் ரீமிக்ஸையும் இசையமைத்து பாடியது பிரேம்ஜிதான்.  இன்றும் அஜித் ரசிகர்களின் மந்திரமாக இருந்துவரும் ‘மங்காத்தாடா’ வார்த்தை பிரேம்ஜியின் குரல்தான் என்பது கூடுதல் தகவல்.

Also Read : ஒலிம்பிக்கில் இரண்டாவது பதக்கம்… வெண்கலம் வென்ற பி.வி.சிந்து – கடந்துவந்த பாதை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top