பொதுவாக புதிதாக வரும் இளம் ஹீரோக்கள் தங்களது படங்களில் அப்போதைய டாப் ஹீரோக்களின் துதி பாடுவதுண்டு. இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ அவர்களது ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்பது எதார்த்தம். அவ்வாறு விஜய், அஜித் இருவரும் நடிக்க வந்தபோது, இருவருக்குமே திரையுலகில் ஒரு பிடிமானம் தேவைப்படவே இருவரும் குறிவைத்தது ரஜினியையும் ரஜினி ரசிகர்களையும்தான்.
விஜய் ஒருபுறம் ‘இளைய தளபதி’ என பட்டம் வைத்துக்கொண்டு, தனது படங்கள் அனைத்திலும் தவறாமல் ரஜினி ரெஃபரன்ஸ் வரும்படி பார்த்துக்கொண்டார். விஜய் ஒருபுறம் ‘இவன் பார்த்தா சின்ன ரஜினிடா’ என பாடி ஆட, மறுபுறம் அஜித்தோ, ஒருபடி மேலே போய், ‘வான்மதி’ படத்தில் ரஜினி ரசிகராகவே நடித்து ஒரு காட்சியில் ரஜினியின் அரசியல் வருகை என்ன மாற்றத்தை தரும் என விவரித்தும் நடித்திருந்தார்.
இப்படி, பிடிமானம் இல்லாமல் தவித்துவந்த இருவரும் அடுத்த சிலவருடங்களில் தங்களது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டனர். அதன்பிறகு அஜித் தனது படங்களில் ரஜினி ரெஃபரன்ஸ் வராமல் பார்த்துக்கொண்டார். குறிப்பாக ‘ஆஞ்சநேயா’ புரோமோஷனில் அஜித், ‘நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என ஓப்பனாக பேட்டிக் கொடுக்க, அது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் விஜய் மட்டும் தனது படங்களில் தொடர்ந்து ‘எனக்கு பாபாவை பிடிக்கும்’, எது படையப்பாவா, நம்ம தலைவர் படம் நான் உடனே பார்க்கணும், ‘எத்தனை ரஜினி படம் பார்த்திருக்கேன்’ என வசனங்கள் பேசி தன்னை ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில் விஜய்யின் கரியர் மெல்ல உச்சத்துக்குச் செல்ல ஆரம்பித்தது. யாராலும் நெருங்கமுடியாத முந்தைய ரஜினி பட வசூல் சாதனைகளை விஜய்யின் படங்கள் முறியடிக்கத் தொடங்கியது. இதன் உச்சமாக விஜய் துணிச்சலாக ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்துடன் தனது ‘சச்சின்’ படத்தை மோதச் செய்தார். இது ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினிக்கே சற்று கசப்பாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, விஜய்க்கு நேரடி போட்டியாளரான அஜித்துக்கு ஓப்பனாக ஆதரவு கொடுக்க ஆரம்பித்தார் ரஜினி. இதன்மூலம் விஜய்க்கு டஃப் கொடுக்கமுடியும் என ரஜினி நினைத்தார். அஜித்தும் இதைப் பயன்படுத்திக்கொண்டு அவரது ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்து நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படமான ‘ஆழ்வார்’ போஸ்டரைப் பார்க்கும்போது ஒரு வைப்ரேஷனை உணர்வதாக ஓப்பனாக பேட்டி கொடுத்தார் ரஜினி. ‘பரமசிவன்’, ‘அசல்’ பட பூஜைகளுக்கெல்லாம் ரஜினிதான் சிற்ப்பு விருந்தினர். அப்போதைய முதல்வர் கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாயொன்றில் அஜித், ‘விழாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்துறாங்கய்யா’ என மேடையிலேயே ஓப்பனாக பேசி, அது அஜித்துக்கு பல பிரச்சனைகளை உண்டு பண்ணியபோதெல்லாம் ரஜினிதான் பக்கபலமாக நின்று அஜித்தை கலைஞரின் வீட்டுக்கே அழைத்துப்போய் சமரசம் செய்துவைத்தார்.
இந்தக் காலகட்டத்திலெல்லாம் விஜய் ரஜினியின் ரெஃபரன்ஸ்களை மெல்லக் குறைத்துக்கொண்டு கமலுடன் இணக்கமாக ஆரம்பித்தார். ரஜினி புகழ்ந்த ‘ஆழ்வார்’ படத்துடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற ‘போக்கிரி’ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு கமல் வந்திருந்து விஜய்யை புகழ்ந்து தள்ளினார். அதைத் தொடர்ந்து ஜாக்கி சான், அமிதாப் பச்சன் கலந்துகொண்ட ‘தசாவதாரம்’ படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு தமிழ் சினிமா சார்பில் கமல் அழைத்தது விஜய்யைத்தான். இவ்வாறு தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்கள் அப்போது ரஜினி – அஜித் & கமல் – விஜய் என மறைமுகமாக இரு அணிகளாக பிரிந்திருந்தார்கள்.
சரியாக ‘வில்லு’ படத்திலிருந்து எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸ்களைத் தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பித்த விஜய், இன்றுவரை கமலுடனும் நெருக்கமாக இருந்துவருகிறார். வருடந்தோறும் கமல் தனது பிறந்தநாளன்று மிக நெருக்கமானவர்களுக்கு மட்டும் தரும் பார்ட்டியில் விஜய் தவறாமல் கலந்துகொள்வதுண்டு. ‘மெர்சல்’ படம் வெளிவந்து அது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் காப்பி என சலசலப்பு ஏற்பட்டபோது அந்தப் படத்தை கமலைப் பார்க்கவைத்து, ‘அபூர்வ சகோதர்கள்’ பட போஸ்டர் பின்னணியில் கமலுடன் விஜய்யும் அட்லீயும் இருக்கும் போட்டோ வெளியானதெல்லாம் தற்செயலான நிகழ்வல்ல.
அதேசமயம் ரஜினி- அஜித் நட்பு முன்பிருந்த அளவுக்கு நெருக்கமாக இல்லாமல் போக ஆரம்பித்து நாளடைவில் ஏனோ இருவருக்குமிடையே தொடர்பே இல்லாமல் போனது. இதற்கிடையில் ரஜினியின் ‘பேட்ட’ – அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதிக்கொண்டதும் குறிப்பாக ‘பேட்ட’ டிரெய்லர் முதலில் வெளியாகட்டும் என காத்திருந்து அஜித், தனது ‘விஸ்வாசம்’ படத்தின் டிரெய்லரில் ரஜினியைக் குறிவைப்பதுபோல இருக்கும் வசனங்களை வைத்ததும் இரு தரப்பு ரசிகர்களுக்கிடையே கொதிப்பைத் தந்தது. அதைத் தொடர்ந்து ரஜினியின் ‘அண்ணாத்த’ அஜித்தின் ‘வலிமை’ படங்கள் ஹைதராபாத்தில் நடக்கும்போது இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே ஏரியாவில் நடக்காமல் பார்த்துக்கொண்டார் அஜித். அதாவது ‘அண்ணாத்த’ படக்குழு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு வைத்திருந்தால், அப்போது ‘வலிமை’ படக்குழு அங்கு செல்லாது. இவ்வாறுதான் தற்போது ரஜினி – அஜித் உறவு நீடித்துவருகிறது.
இந்த டாப் ஸ்டார்களின் நட்பும் மோதல் போக்கும் இப்படித்தான் இனிவரும் காலங்களிலும் நீடிக்கப்போகிறதா அல்லது கடந்த காலங்களைப்போல மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சுருங்க சொல்லவேண்டுமென்றால் தக்கென பிழைக்கும்.. மத்தபடி நத்திங் பர்செனல், ஜஸ்ட் எ பிஸ்னெஸ்.
Also Read : NSG கமாண்டோக்களின் டிரெய்னிங் எப்படியிருக்கும் தெரியுமா?