மேற்குவங்கத் தேர்தலில் மொத்தமுள்ள 292 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. ஆனால், நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா, பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவர் மேற்குவங்க முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
எம்.எல்.ஏ ஆகாமல் முதல்வராக முடியுமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (4) பிரிவின்படி ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் பதவியில் இருந்தால், அவரது பதவி காலாவதியாகிவிடும். அதாவது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாமல் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ பதவியேற்க முடியும். பதவியேற்ற பின்னர், 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏவாக வேண்டும். இதேபோலவே, தேர்தல் வெற்றிபெறாமலேயே ஒருவர் பிரதமராகப் பதவியேற்கவும் சட்டத்தில் வழி இருக்கிறது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 75 (5) பிரிவு இதுகுறித்து விளக்குகிறது. கடந்த 2004-ல் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இராணி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்.பியானார்.
தேர்தல் வெற்றி இல்லாமல் முதல்வரானவர்கள்!
இந்திய அரசியல் வரலாற்றில் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் பலர் முதல்வராகப் பொறுப்பேற்ற வரலாறு இருக்கிறது. சமீபத்திய உதாரணம் உத்தரகாண்ட் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரத்சிங் ராவத். கடந்த 2011ம் ஆண்டு மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி முதல்முறையாகப் பொறுப்பேற்றபோது, அவர் எம்.எல்.ஏ அல்ல. கொல்கத்தா தெற்கு தொகுதி எம்.பியாக இருந்த அவர், முதல்வராகப் பொறுப்பேற்றபின்னர், எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்.
- சுதந்திரத்துக்குப் பிறகு 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் பாம்பே மாகாண (இன்றைய மகாராஷ்டிரா – குஜராத்) சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட காங்கிரஸின் மொரார்ஜி தேசாய் தோல்வியடைந்தார். ஆனால், அவருக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்த செல்வாக்கு காரணமாக, காங்கிரஸ் தலைமை அவரையே முதலமைச்சராக்கியது. பின்னர், இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்.
- அதே ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக ராஜாஜி பொறுப்பேற்றார். தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று கருதி ராஜாஜி அதைத் தவிர்த்துவிட்டார். பின்னர், மெட்ராஸ் சேம்பர் ஆஃப் கமர்ஸூக்கு (Madras Chambers of Commerce) ஒதுக்கப்பட்ட ஒரு இடம் மூலம் மேலவை உறுப்பினரானார் ராஜாஜி.
- கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரேம்குமார் துமல் தோல்வியடைந்தார். அதன்பின்னர், புதுமுகமான ஜெய்ராம் தாக்குரை பா.ஜ.க முதல்வராக்கியது.
- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பளித்தார். இதனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2015 மே மாதத்தில் தள்ளுபடி செய்யவே, 23-05-2015-ல் எம்.எல்.ஏவாக இல்லாமலேயே ஜெயலலிதா முதல்வரானார்.
இடைத்தேர்தலில் தோற்றால்?
சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாதவர் முதல்வராகவோ, அமைச்சராகவோ பொறுப்பேற்ற பின்னர் ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அவர்கள் அந்தப் பதவியில் தொடர முடியாது. முதல்வராகப் பொறுப்பேற்றவர் இடைத்தேர்தலில் தோற்ற வரலாறும் இருக்கிறது. 1970-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் உ.பி முதல்வராக இருந்த திரிபுவன் நாராயண் சிங் தோல்வியடைந்தார். இதையடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2009-ல் சிக்கலான ஒரு சூழல் ஜார்க்கண்டில் எழுந்தது. அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஹேமந்த் ஷிரோனின் தந்தையான ஷிபு ஷோரன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிதாக முதல்வராக நியமிக்கப்பட்டு பதவியில் தொடர்ந்து வந்தார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் தொடர் அழுத்தத்தால், ஷிபு ஷோரன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில், ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல்வராகவோ, அமைச்சராகவோ ஒருவரை மீண்டும் நியமிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மம்தா நிலை என்ன?
மேற்குவங்க முதல்வராகப் பதவியேற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். மேற்குவங்கத்தில் சட்ட மேலவை இல்லை. அம்மாநிலத்தில் கடந்த 1969ம் ஆண்டு மேலவை கலைக்கப்பட்டது.