ஆரம்பத்துலயே ஒரு விஷயம் தெளிவா சொல்லிடுறோம்…
‘பொன்னியின் செல்வன், பாகுபலி மாதிரி இருக்காது’னு தயாரிப்பாளர் தொடங்கி எல்லார்கிட்டயும் மணிரத்னம் சொல்லிட்டார். அதனால, இது என்னடா கம்பேரிசன்னு உங்களுக்குத் தோணலாம். தப்பில்ல.. ஆனா, பொன்னியின் செல்வ்வனின் அதிதீவிர வாசகனா, பாகுபலியை ரசிச்சுப் பார்த்தவனா சில விஷயங்களை உங்களுக்கு சொல்லலாம்னு தோணுச்சு. அதான் இந்த வீடியோ!

பொன்னியின் செல்வன் Vs பாகுபலி
பொன்னியின் செல்வன் கேரக்டர்களோட ரெஃபரென்ஸை பாகுபலியின் நிறைய இடத்தில் பார்க்க முடியும். சீனியர் பாகுபலியோட கேரக்டர்ல, பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மரோட பாதிப்பு ரொம்ப ஹெவியா இருக்கும். யானைகள் பாஷை பேசத் தெரிஞ்சவராவும், அதை அடக்கத் தெரிஞ்சவராகவும் அருள்மொழிவர்மர் கேரக்டரை கல்கி வடிவமைச்சிருப்பார். அப்படியான ஒரு காட்சி பாகுபலி படத்திலும் வரும். ராஜமாதா சிவகாமி தலையில் தீச்சட்டி ஏந்தி கோயிலுக்கு நடந்துபோகும்போது குறுக்கே வரும் மதம்பிடித்த யானையின் தலையில் மஞ்சளைக் கொட்டி அதன் மதத்தை அடக்குவதோடு, யானை மீதேறி மக்களின் பாராடுகளைப் பெறுவார் பாகுபலி. அதேபோல், பாகுபலி கட்டப்பா கேரக்டருக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனே பெரிய பழுவேட்டரையர்தான்னு சொல்லலாம். பழுவேட்டரையர் அதிகாரத்தில் இருப்பார். கட்டப்பா, அடிமையாக இருந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பார்.
பாகுபலி படத்தை எடுக்குறதுக்கு முன்னாடியே 2011-ல பொன்னியின் செல்வன் நாவலைப் படிங்கனு ரசிகர் ஒருத்தர் ட்விட்டர்ல சொல்ல, அதுக்கு ராஜமௌலி கொடுத்திருந்த பதில் டிரெண்டாச்சு… அதேபோல பாகுபலியோட முக்கியமான சீன் ஒண்ணோட இன்ஸ்பிரேஷன் பொன்னியின் செல்வன் நாவல்ல வர்ற முக்கியமான கட்டம்தான்… அது என்னனு தெரிஞ்சுக்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மக்களே..!

பாகுபலி போஸ்டர்களில் முக்கியமான இடத்தைப் பிடித்தது ராஜமாதா சிவகாமி, ஆற்றில் மூழ்கியபோதும் ஒற்றைக் கையில் குழந்தையாக இருக்கும் ஜூனியர் பாகுபலியைக் காப்பாற்றுவதுதான். அது பொன்னியின் செல்வன் தாக்கத்தில்தான் உருவானது என்றே சொல்லலாம். காரணம், நாவலின் தலைப்புக்குக் காரணமே பொன்னி நதி எனப்படும் காவிரி நதியில் விழும் குழந்தை அருள்மொழி வர்மரை காவிரித் தாயே கையில் எடுத்துக் கொடுத்து காப்பாற்றியதாக சோழ நாடே நம்பும். அதனால்தான், அருள்மொழி வர்மருக்கு பொன்னியின் செல்வன் என்கிற பெயர் ஏற்படும். அருள்மொழி வர்மரைப் போலவே, பாகுபலியும் சிறுவயதில் தாயை இழந்திருப்பார். தாயை இழந்த அருள்மொழி வர்மர், எப்படி தனது அக்கா குந்தவையிடம் பாசமாக இருப்பாரோ, அப்படி ராஜமாதா சிவகாமி தேவி மீது பாகுபலி பாசமாக இருப்பார். போர்க்களங்களில் எதிரிகளைப் பந்தாடுவதில் இருவருமே வல்லவர்கள். மக்களின் அபிமானமும் இவர்களுக்குத்தான் அதிகம் இருக்கும். அரியணைக்கு உரிமை இவர்களுக்கு நேரடியாக இருக்காது. இருவருமே தேடிவந்த அரியணையை தூக்கி எறிவார்கள். அருள்மொழி வர்மர், தனது சித்தப்பா மதுராந்தகத் தேவருக்காகவும் பாகுபலி, இளவரசி தேவசேனாவை மணப்பதற்காகவும் அரியணையை விட்டுக் கொடுப்பார்கள்.

அருள்மொழிவர்மரின் மூத்த சகோதரராக ஆதித்த கரிகாலன் இருப்பதுபோல், பாகுபலியின் மூத்த சகோதரராக பல்வாள் தேவன் இருப்பார். ஆதித்த கரிகாலன் நந்தினியின் மேல் உயிராக இருப்பார்; பல்வாள் தேவன், தேவசேனா மீது மோகம் கொண்டிருப்பார். ஆதித்த கரிகாலன் கேரக்டரை அப்படியே பல்வாள் தேவனோட பொருத்திப் பார்க்க முடியாது என்றாலும், கோபக்காரர்கள், அரியணை உள்ளிட்ட சில விஷயங்களில் ஒற்றுமைகளைப் பார்க்க முடியும். ஆதித்த கரிகாலன் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டிருக்க மாட்டார். பாகுபலியோட மெயின் வில்லனே பல்வாள்தேவன்தான். அதேபோல், சோழ சாம்ராஜ்யத்தின் ராஜாமாதா போன்ற அந்தஸ்தில் இருப்பார் மதுராந்தகத் தேவரின் தாயாரான செம்பியன் மாதேவி. அவரின் சம்மதமின்றி எந்தவொரு பெரிய முடிவையும் அருள்மொழிவர்மரின் தந்தையும் பேரரசருமான சுந்தரச் சோழர் எடுக்கவே மாட்டார். தீவிர சிவபக்தையான அவரை ஒரு விஷயத்தில் சமாதானப்படுத்தத் தனது நண்பரும் முதன்மை அமைச்சருமான அநிருத்த பிரம்மராயரையே அனுப்பி வைப்பார். ஆனால், மகிழ்மதியின் அரியணை ஏறும் வம்சத்தில் வந்த பிங்கலத் தேவரின் ஊனத்தால் பேரரசாரகும் பாகுபலியின் தந்தை விக்ரம் தேவா துரதிருஷ்டவசமாக உயிரிழந்துவிடுவார். இளவரசர்கள் இருவரும் சிறுவயதாக இருப்பதால் ராஜமாதா சிவகாமி தேவியின் ஆளுகையின் கீழ்தான் பல ஆண்டுகளாக மகிழ்மதி இருக்கும். `இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்’ என்ற பவர்ஃபுல் டயலாக்கோடு அதிகாரமிக்கவராக இருப்பார் ராஜமாதா சிவகாமி தேவி.

நேரமிருந்தால் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் நாவலையும் சிவகாமியின் சபதம் நாவலையும் படிங்கனு ராஜமௌலியை Quote செய்து ரசிகர் ஒருவர் 2011-ம் ஆண்டு ட்வீட் செய்திருந்தார். அதற்கு, 2011 ஜூன் 30-ம் தேதி பதிலளித்திருந்த ராஜமௌலி, `பொன்னியின் செல்வன் நாவல் படித்தேன். மிகச்சிறந்த நாவல், டிராமா மற்றும் கேரக்டர்கள்’ என்று பதில் ட்வீட்டியிருந்தார். பொன்னியின் செல்வன் டிரெய்லர் ரிலீஸானபோது, பாகுபலியோடு அந்தப் படத்தை கம்பேர் பண்ணி சோசியல் மீடியாவில் கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது, ராஜமௌலியின் இந்த ட்வீட் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இப்போ சொல்லுங்க…. பாகுபலிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் ஒற்றுமை இருக்குன்னு நினைக்கிறீங்களா… இல்லையா?!