நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
மிருகசீரிடம் நட்சத்திரம்
எத்தகைய செயலிலும் முழு முயற்சியுடன் இறங்கும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் சவால்களை எதிர்க்கும் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். சொந்த முயற்சியில் மட்டும் வெற்றிக் காண நினைப்பவர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாய், செவ்வாயும், முதல் மற்றும் இரண்டாம் பாதத்தின் ராசி அதிபதியாய், சுக்கிரனும், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் ராசி அதிபதியாய் புதனும், நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் சூரியனும், இரண்டாம் பாதத்தில் புதனும் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், நான்காம் பாதத்தில் செவ்வாயும் வலம் வருகின்றன.
இந்நட்சத்திரக்காரர்கள், முருகப்பெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் எனபது நம்பிக்கை. கோயில்களுக்குச் செல்லும் போது ஜாதி மல்லி கொண்டு பூஜை மேற்கொண்டால் நன்மை உண்டாகும். இந்நட்சத்திரக்காரர்கள் நந்திதேவரை வழிப்பட்டு பரிகாரங்கள் செய்துவர தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும். இந்நட்சத்திரத்தை ஜனவரி மாத காலங்களில் இரவு பத்து மணிக்கு மேல் வானில் நம்மால் பார்க்க முடியும். மிருகசீரிட நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சமாக கருங்காலி மரம் இருக்கிறது. இம்மரத்தினை வணங்கி வர பாவங்கள் நீங்கி எதிபாராத நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். பழனி, திருக்கண்ணபுரம் திருத்தலங்களில் வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
எண்கண் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள்
இந்நட்சத்திரக்காரர்கள், தங்களுடைய தோஷங்கள் நீங்கி சகல நன்மைகளும் உண்டாக எண்கண் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு அடிக்கடியோ அல்லது இந்நட்சத்திரத் தினங்களிலோ கட்டாயம் சென்று வர வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருத்தலமானது, திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் அமைந்துள்ளது. கோயில் நடை தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் பெருமாள் கருடன் மீது அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். வேறெங்கிலும் காண முடியாத இக்காட்சியானது மிகவும் சக்தி வாய்ந்த்தாகப் பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சமீவனம் என்றழைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் பிருகு என்ற முனிவர் பெருமாளை நினைத்து தவம் மேற்கொண்டு இருந்தார். அச்சமயத்தில் சோழ அரசர்களில் ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதற்காக பெரும் ஒலி எழுப்பியபடி அவ்வழியாக சென்றார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலையவே, கடுமையான கோபம் கொண்ட முனிவர், உன் முகம் சிங்கத்தின் முகம் போல் மாறட்டும் என அரசனுக்கு சாபம் விடுத்தார். முனிவரின் சாபப்படி அரசனின் முகம் மாறவே தனக்கு சாப விமோட்சனம் தரும் படி முனிவரிடம் மன்றாடினார். முனிவர் மனம் இறங்கவே சாபம் நீங்க மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில் தைபூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி பெருமாளுக்கு வழிபாடு செய்தல் வேண்டும் என கூறினார். அதன்படி செய்து அரசன் சாப விமோட்சனம் அடைந்தான். அப்போதிலிருந்து இத்திருத்தலமானது, ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் என அழைக்கப்பட்டது. எனவே இத்திருத்தலமானது மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது.