ஒவ்வொரு பெண்ணும் நிதி சுதந்திரத்தோடு இருக்க வேண்டும்… ஏன்… அதற்கான 5 காரணங்கள்.
நிதி சுதந்திரம்
தங்கள் பொருளாதாரத் தேவைகளைத் தாங்களே நிவர்த்தி செய்துகொள்ளும் வகையிலான நிதி சுதந்திரத்துடன் (Financial Freedom) இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் இலக்காகவே இருக்கும். நிதி சுதந்திரத்தோடு இருப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறரைச் சார்ந்திருக்கும் தேவையைக் குறைப்பதோடு, ஆரோக்கியமான சூழலுக்கும் அடிப்படையாக அமையும். ஆண்களைப் பொறுத்தவரை கரியரில் ஃபோகஸ் செய்ய அட்வைஸ் செய்யும் சமூகம், பெண்களை வீடு மற்றும் அது சார்ந்த பொறுப்புகளில் கவனம் செலுத்தச் சொல்லும். இன்றைய சூழலில் பெண்கள், எல்லாத் துறைகளிலும் தங்களின் பங்களிப்போடு சாதனை புரிந்து வருகிறார்கள். வருவாய் ஈட்டுவது என்பது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மட்டுமல்ல… ஒரு கட்டத்தில் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கவும் முக்கியமானது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதி சுதந்திரம் முக்கியம்… ஏன் – 5 காரணங்கள்
திருமணம்
பொதுவாகப் பெண்கள், பொருளாதாரரீதியாக ஆண்களையே சார்ந்திருப்பர். ஆனால், அந்த நிலை இன்று எல்லா இடங்களிலும் இல்லை என்றே சொல்லலாம். பெண்கள் எத்தனையோ பேர், கடினமாக உழைத்து வருவாய் ஈட்டுகிறார்கள். தங்களின் தேவைகளோடு, குடும்பத்தினரின் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்கள். திருமணம் என்று வருகையில், தம்பதிகள் இருவருமே தங்கள் பாட்னர்களைத் தங்களுக்கு இணையானவர்களாக மதிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. நிதி சுதந்திரத்தோடு நீங்கள் இருக்கையில், உங்கள் பாட்னர் உங்களுக்கு அந்த இடத்தை நிச்சயம் அளிப்பார். இதையெல்லாம் விட, நீங்கள் சொந்தமாக சம்பாதிக்கும் சூழலில், நிதி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாது குடும்ப விவகாரங்களில் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையும், அதுபற்றிய முடிவுகளையும் சுதந்திரமாக எடுக்க முடியும்.
தன்னம்பிக்கை
நிதித் தேவைகளில் சுதந்திரமாக இருப்பது, உங்களின் தன்னம்பிக்கை லெவலை அதிகரிக்கும். அத்தோடு உங்கள் பெர்சனல் கோல்களை அடையவும் அது உதவி செய்யும். நிதி சார்ந்து மட்டுமல்லாமல், உணர்வுகள், சமூக, பணியிடத்தில் சுதந்திரமாக இருப்பது, வாழ்வில் ஒரு வெற்றிபெற்ற உணர்வையும், திருப்தியையும் கொடுக்கும். உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதற்கான அளவீடுகளையும் அது மாற்றும். சுதந்திரமாக இருப்பது தன்னம்பிக்கை லெவலை மட்டுமல்ல; வாழ்வை நீங்கள் அணுகும் முறையிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொடுக்கும்.
Cost of Living
சொந்தமாக சம்பாதிக்கத் தொடங்குகையில் விலைவாசி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை எளிதாக சமாளிக்க உதவும். பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி எல்லாவகையான பொருட்களின் விலையும் கடந்த ஆண்டுகளை விட எகிறி வருகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்படியான சூழலில் வசதியான வீடு, உங்கள் குழந்தைகளுக்கான கல்வி என அடிப்படைத் தேவைகளுக்கே பெரிய தொகையை நீங்கள் செலவிட வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில், சொந்தமாக நீங்கள் ஈட்டும் வருவாய் நிச்சயம் உங்களுக்குக் கைகொடுக்கும். வீட்டின் அன்றாடத் தேவைகள் மட்டுமல்லாது; குடும்பத்தின் நீண்டகால திட்டங்களுக்கும் உங்கள் ஊதியம் பூஸ்டாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முன்மாதிரி
நிதி சார்ந்த விஷயங்களில் சுதந்திரமாக இருந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள், நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்பிரேஷன் கொடுக்கும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டு சிறுவயது முதலே அவர்கள் தன்னம்பிக்கையோடு வளரத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தில் இலக்குகளோடு பயணிக்கவும், அதை எட்டிப்பிடிக்கவும் உதவி செய்யும். ஒரு பெண் தன்னம்பிக்கையோடு பயணிக்கையில், இந்த சமூகத்தில் எத்தனையோ விஷயங்களை சாதிக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள். தங்களின் தாயை முன்மாதிரியாகக் கொண்டு பெண் குழந்தைகளும் வருவாயின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தாங்களும் அவரைப் போலவே வளர வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவார்கள்.
தனித்த அடையாளம்
குடும்ப வாழ்வில் மனைவியாக, தாயாக வாழ்நாளைக் கழிக்கும் பெண்களில் பலர் தங்கள் அடையாளங்களையே தொலைத்துவிடுகிறார்கள். அதேநேரம், சொந்தமாக வருவாய் ஈட்டுவது உங்களுக்கான அடையாளத்தைக் கொடுப்பதோடு, மற்றவர்களுக்கான ஒரு ரோல் மாடலாக உங்களை முன்னிறுத்தும். இந்த சமூகத்தில் உங்களுக்கான தனித்த அடையாளத்தையும் முன்னிறுத்தவும் நிதி சுதந்திரம் தளம் அமைத்துக் கொடுக்கும்.
Also Read – பெண்களே நீங்கள் அடித்து உடைக்க வேண்டிய 7 Beauty Standards!