இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் நல்ல இயக்குநர் என்ற பெயர் இண்டஸ்ட்ரிக்குள் வந்துவிட்டது. அடுத்த படமே பெரிய மார்கெட் உள்ள நடிகர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அந்த இயக்குநருக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால் 1970 – 1980 காலகட்டங்களில் இப்படி நடப்பதற்கான சாத்தியங்களே இல்லை. பல படங்கள் இயக்கிய இயக்குநர்களே தற்போது இண்டஸ்ட்ரியில் இல்லாமல் ஏதோவொரு வேலையை பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் துரை, தற்போது கல்யாண மண்டபம் வைத்திருக்கிறார். அந்த மண்டபத்தை வைக்க சொன்னவர் ரஜினி. அதுமட்டுமின்றி 1979-ல் இவர் இயக்கத்தில் வெளியான பசி, ஸ்டேட் அவார்ட், ஃபிலிம் ஃபேர் அவார்ட் மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. பொதுவாக 90ஸ் கிட்ஸுக்கு பரிச்சயமான பல பிரபலங்களை 2கே கிட்ஸுக்கு தெரியாது. அப்படி 90ஸ் கிட்ஸுக்கு தெரியாத 80ஸ் பிரபலம்தான் இயக்குநர் துரை.
யார் இந்த துரை :
1974-ல் தனது சினிமா பயணத்தை தொடங்கி 1990-லே முடித்துவிட்டார். இதற்கு இடையில் ஆர்.முத்துராமன், ரஜினி, கமல், சிவாஜி, மோகன் போன்ற பிரபல நடிகர்களை இயக்கியிருக்கிறார். அவளும் பெண்தானே, ஒரு குடும்பத்தின் கதை, ரகுபதி ராகவ ராஜாராம், சதுரங்கம், ஆயிரம் ஜென்மங்கள், பசி, நீயா, கிளிஞ்சல்கள் எனப் பல படங்களை இயக்கியிருக்கிறார். ரஜினியை வைத்து இயக்கிய ஆயிரம் ஜென்மங்கள் படம் மலையாத்தில் வெளியான யக்ஷகானம் படத்தை தழுவியது. இந்த இரு படங்களை வைத்துதான் சுந்தர் சி அரண்மனை படத்தை 2014-ல் இயக்கினார். இவரது சினிமா பாதையில் மிக முக்கியமான படம் பசி. ரொம்ப சென்சிட்டிவ்வான ஒரு விஷயத்தை பசி படம் பேசியிருக்கும். போக சென்னையோட மிக முக்கியமான இடங்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் எப்படி இருந்தது என ரியாலிட்டியோட பார்க்க கட்டாயம் இந்தப் படத்தை பார்க்கலாம். அந்த காலகட்டதில் இருந்து வளர்ந்தவர்களுக்கு இந்த படத்துடைய முக்கியத்துவம் கட்டாயம் தெரியும். சினிமாவை ரொம்ப ஆழமாகப் பார்த்தால் பல ஆச்சரியங்களை நமக்காகக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கிய முதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுமித்ரா. இந்தப் படம் 100 நாளைக்கும் மேல் அப்போது ஓடியது. நடிகை சுமித்ரா ரஜினி, கமல் ஆகிய இருவருடன் ஜோடி சேர்ந்தும் நடித்திருக்கிறார். அதே போல் இருவருக்கும் அம்மாவாகவும் நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன் வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மாவாக கூட நடித்துள்ளார்.
பிரபலங்களின் பாராட்டு
பசி படத்தை பார்த்துவிட்டு இவரை நேரில் அழைத்திருக்கிறார் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆர் ‘எப்படிபா இப்படி படம் எடுத்த’ என்று துரையை பாராட்டியுள்ளார். எம்ஜிஆரின் மனைவி ஜானகி, ‘ஐயா ரொம்ப சந்தோஷமா இருக்கார். நல்ல படம் எடுத்திருக்க. இது ஐயாவுக்கும் பிடிச்சிருச்சு. உனக்கு என்ன வேணுமோ அவர்கிட்ட கேளு’ என்று அவர் சொல்லியிருக்கிறார். `ஐயாவுடைய பாராட்டு போதும்’ என்று சொல்லியிருக்கிறார் துரை. வாசல் வரை துரையை வழியனுப்ப வந்த எம்ஜிஆர். மறுபடியும், ‘ரொம்ப நல்ல படம் எடுத்திருக்க. உனக்கு என்ன வேணுமோ கேளு’ என்று சொன்னார். அப்போது ஜானகி இவரைப் பார்த்து, `கேளு.. கேளு’ என்பதுபோல் சைகை செய்தார். எம்ஜிஆரைப் பார்த்து கண்ணீர் மல்க, ‘ஐயா உங்களைக் கட்டி பிடிச்சு, அதை ஒரு போட்டோ எடுத்துக்கவா’ என்று கேட்டார். எம்ஜிஆர் ஜானகியை பார்த்து ‘பார்த்தாயா துரையை… அவன் அப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும், தன்னுடைய `துணை’ படத்தின் கதையை எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார் துரை. அதற்கு அவர், ‘இந்த படத்தில் தம்பி சிவாஜி நடிச்சா நல்லா இருக்கும்’ என்று சொல்லியுள்ளார். பின் இதை சொல்லி சிவாஜியிடம் சொல்லும்போது, ‘அண்ணனே சொல்லிட்டாரா இது போதும் நான் நடிக்கிறேன்’ என சொல்லி நடித்துள்ளார் அவர். இதேபோல் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள் படத்தை எடுத்த சமயம், ஒரு விடுதியில் ஒரே ஒரு அறை மட்டும் கிடைத்துள்ளது. நீங்க இங்க படுத்துக்கங்க, நான் வராந்தாவில் படுத்துக்குறேன் என்று துரை சொல்லியிருக்கிறார். ஆனால் ஷூட்டிங் முடியும் வரை இருவருமே ஒரே அறையில்தான் தங்கியிருந்தனர். அவ்வப்போது ரஜினியுடன் பேசுவார் துரை. ரஜினி இவரிடம் ஒரு முறை, ‘சார் எப்பவுமே ஜாக்கிரதையா இருங்க. பணம் கையில தங்காது. சீக்கிரம் ஒரு கல்யாண மண்டபத்தை கட்டுங்க’ என்று சொல்லியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டுதான் கல்யாண மண்டம் கட்டியுள்ளார் இவர்.
ஐடியாலஜி
இவரைப் பொறுத்தவரை படத்தின் திரைக்கதையை எழுதுவதுதான் மிகவும் கஷ்டம். பொதுவாக இவர் படத்தின் கதைக்கு மெனக்கெடுவதை விட திரைக்கதையை எழுதுவதற்குத்தான் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வாராம். கதை சுவாசம் மாதிரின்னா திரைக்கதை முதுகெலும்பு மாதிரி என்பதுதான் இவரின் ஐடியாலஜி. சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு ஹீரோவுக்கு கதை சொல்லப்போயிருக்கிறார். அப்போது அந்த ஹீரோவின் அசிஸ்டென்ட்கள் அந்த கதையைக் கேட்டிருக்கிறார்கள். நான் கேட்டாலே சார் கேட்ட மாதிரிதான் என அந்த அசிஸ்டென்ட்கள் சொல்லியிருக்கிறார்கள். மிகுந்த ஆச்சர்யத்தோடு அங்கிருந்து வந்துவிட்டதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஷோபா
ஷோபாவின் நிஜப் பெயர் மகாலட்சுமி என்பதும், இவர் தனது 17 வயதில் தற்கொலை செய்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார் என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் இவர் நிகழ்த்திய சாதனை சாதாரணமானவை அல்ல. ஸ்லாப்ஸ்டிக் கிங்கான சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் ஷோபோ. அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். இள வயதிலேயே மெச்சூர்டான தோற்றம் அனைவருக்கும் வாய்க்காது. ஆனால் அது இவருக்கு வாய்த்திருந்தது. செந்தாழம் பூவில் பாடலில் ஜீப்பின் பின்னே நெற்றியில் வட்ட பெட்டு வைத்துக்கொண்டு, கம்பியை இறுக்கி பிடித்து அமர்ந்திருந்த இவருக்கு 16 வயது என்றால் யாராவது நம்ப முடியுமா. இதுபோல் பல படங்களில் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நாயகியானார். அந்த வரிசையில் பசி படம் இவருக்கு மிக மிக முக்கியமான படமாக அமைந்தது. 17 வயதில் யாரும் பெற்றிடாத சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை இவர் பெற்றார்.