மைக் டைசன்

மைக் டைசன் புலி வாங்கிய கதை தெரியுமா?!

பூமியிலேயே மிகவும் ஆபத்தான மனிதர், இரும்பு மனிதர் என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் குத்துச்சண்டை வீரர், மைக் டைசன். 1985 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச குத்துச்சண்டை களத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மைக் டைசன். மிகவும் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றவர், அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் போன்ற பல சாதனைகளை தன்வசம் வைத்திருந்தார். விளையாட்டுத்துறையில் மிகவும் பிரபலமாக விளங்கிய சாம்பியன் இவர். இவரைப் பற்றி அவர்களது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு ஃபேவரைட் ஆன விஷயங்கள் குறித்தும் பலரும் அறிவர். ஆனால், அவர் வளர்த்த புலியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க, மைக் டைசன் புலிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம். வாங்க…

மைக் டைசன் கென்யாவுடன்
மைக் டைசன் கென்யாவுடன்

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மூன்று வங்காளப் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். அந்த புலிகளுக்கு போரிஸ், ஸ்டோர்ம் மற்றும் கென்யா என்று பெயர் வைத்திருந்தார். இதில் கென்யா என்ற புலி மைக் டைசனின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது எனவும் ஒரே கட்டிலில் புலியுடன் மைக் டைசன் தூங்கியதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வளர்த்த கென்யா என்ற புலியை சுமார் ரூபாய் 71,000 டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த புலிக்காக மாதம் ரூபாய். 4,000 டாலர்கள் செலவிட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அத்துமீறி மைக் டைசன் வீட்டுக்குள் நுழைந்த ஒருவரை இந்தப் புலி கொடூரமாக தாக்கியதைத் தொடர்ந்து அதனை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்காக மைக் டைசன் சுமார் ரூபாய் 2,50,000 டாலர் இழப்பீடும் செலுத்த வேண்டிய சூழ்நிலை வந்தது.

கென்யா புலியைப் பற்றி மைக் டைசன் பேட்டி ஒன்றில் பேசும்போது, “ஒரு காலத்தில் எனக்கு செல்லப் புலி ஒன்று இருந்தது. அவள் பெயர் கென்யா. அவள் சுமார் 550 பவுண்டுகள் எடை உடையவள். எனக்கு அவளிடம் மிகுந்த பாசம் இருந்தது. நான் அவளுடன் தூங்கினேன். எனது அறையில் வைத்திருந்தேன். சுமார் 16 ஆண்டுகள் என்னுடன் இருந்தாள், அவள் ஒரு மான்ஸ்டர். அவளுடைய அளவை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவளுக்கு வயதாகிவிட்டதால் அவளைப் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவளுடைய கண்களும் இடுப்பு பகுதியும் பாதிப்படைந்தது. அதுமட்டுமல்ல அவள் ஒருவரின் கையை பலமாக தாக்கினாள்” என்று தெரிவித்திருந்தார். மைக் டைசன் புலிகளை வாங்கிய சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. அவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் இருக்கும்போது குட்டிகளாக அந்தப் புலியை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக் டைசன் மற்றும் கென்யா
மைக் டைசன் மற்றும் கென்யா

மைக் டைசன் புலிகளை வாங்கியது தொடர்பாக பேசும்போது, “நான் அந்த நேரத்தில் சிறையில் இருந்தேன். அப்போது எனது கார் டீலருடன் ஒருநாள் பேசினேன். பேசும்போது.. கார்களை விற்றுவிட்டு குதிரைகளை வாங்கப் போவதாக தெரிவித்தார். `கார்களை விற்றுவிட்டு குதிரைகளை வாங்கலாமா?’ என்று அவரிடம் கேட்டேன். என்னிடம் நிறைய கார்கள் இருந்தன. அதில் சில கார்களை விற்றுவிட்டு குதிரைகளை வாங்க முடிவு செய்தேன். அவர் என்னிடம் `சிங்கம், புலிகளைக்கூட வாங்க முடியும்’ என்றார். நான் உடனே `எனக்கு சில புலிகளை வாங்கி தர முடியுமா?’ என்று கேட்டேன். அவர் `ஆஸ்டன் மார்டின் அல்லது ஃபெராரி கார்களுக்கு அடுத்தபடியாக உங்களிடம் ஒரு புலி இருக்கிறது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இது மிகவும் அருமையாக இருக்கும்’ என்றார். எனக்கு சில புலிக்குட்டிகளை வாங்கக் கூறினேன். நான் வீட்டுக்கு செல்லும்போது எனக்காக புலிகள் காத்திருந்தன” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : வறுமையால் குழந்தையை விற்ற தாய் – தொடரும் அவலம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top