பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை ரொம்பவே பாதித்திருக்கிறது. வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சதமடித்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது தெரியுமா மக்களே? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விவாதம் பெரிய அளவுக்கு சூடுபிடித்திருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து ரூபாய் அளவுக்கு விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க-விடம் இதுகுறித்த கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இதுபற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரிக்கணக்கை விவரித்ததுடன், தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் வரிக்குறைப்புக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இந்த ஸ்டேட்மெண்டையடுத்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.32.90, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.31.80 சுங்கவரியாக மத்திய அரசு விதிக்கிறது. இதுதவிர மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கின்றன. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். உதாரணமாக, பெட்ரோலுக்கு அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநில அரசு விற்பனை வரி/வாட் வரியாக 36% + ரூ.4.5 + 1% செஸ் வரி விதிக்கிறது. தமிழகத்தில் இந்தக் கணக்கு 15% + ரூ.13.02/ஒரு லிட்டருக்கு. இதேபோல், டீசலுக்கான வரி விதிப்பிலும் ராஜஸ்தானே முன்னணியில் இருக்கிறது. டீசலுக்கு 26% + ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,750 சாலை மேம்பாட்டு வரியாகவும் அங்கு வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் டீசலைப் பொறுத்தவரை 11% + ரூ.9.62 வரி விதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மூலமாக மத்திய அரசுக்கு வரும் வருவாய் கடந்த ஆறு ஆண்டுகளில் 300% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2014-15 நிதியாண்டில் பெட்ரோலுக்கான சுங்க வரி மூலம் மட்டும் மத்திய அரசுக்குக் கிடைத்த வருமானம் ரூ.29,729 கோடி. அதே நிதியாண்டில் டீசலுக்கான சுங்கவரி வருமானம் ரூ.42,881 கோடியாக இருந்தது. இதே வருமானம், 2020-21 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ரூ.2.94 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இயற்கை எரிவாயுவுக்கான சுங்க வரியையும் சேர்த்து 2014-15 நிதியாண்டில் மத்திய அரசின் சுங்கவரி வருமானம் ரூ.74,158 கோடி. அதேநேரம், ஏப்ரல் 2020 – ஜனவரி 2021 இடையிலான காலகட்டத்தில் மட்டும் இதே வருமானம் ரூ.2.95 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச்சில் மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்த பதிலில் இடம்பெற்றிருந்த தகவல்கள் இவை. பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் சுங்கவரி மூலம் கிடைக்கும் வரி வருவாய் மத்திய அரசின் மொத்த வருமானத்தில் 5.4% ஆக 2014-15-ல் இருந்தது. அதுவே, நடப்பு நிதியாண்டில் 12.2% ஆக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
2014-ம் ஆண்டு ஒரு லிட்டருக்கு மத்திய அரசு விதித்த சுங்க வரி ரூ.9.48. தற்போது ரூ.32.90. அதேபோல், 2014-ல் டீசலுக்கு விதிக்கப்பட்ட சுங்கவரி ரூ.3.56-லிருந்து ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நவம்பர் 2014 – ஜனவரி 2016 இடைப்பட்ட காலத்தில் மட்டும் 9 முறை பெட்ரோல், டீசலுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் மட்டும் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.11.77, டீசல் மீது லிட்டருக்கு ரூ.13.47 கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கென நீங்கள் கொடுக்கும் மொத்தத் தொகையில் சுமார் 53% வரிகள்தான்.
ஜூன் 21 கணக்கின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.98.40. டீசல் ஒரு லிட்டர் ரூ.92.58 என்ற விலையில் விற்கப்படுகிறது. கொடைக்கானல், கடலூரின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயையும் கடந்திருக்கிறது.
டெல்லியில் ஜூன் 16-ம் தேதி கணக்கின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.66-க்கு விற்கப்படுகிறது. அதன் பிரேக்-அப் இதுதான். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவல் அடிப்படையில்…
Also Read – முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகள் குழு… 5 நிபுணர்கள் யாரெல்லாம்?