தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றிய விவாதம் எழுந்திருக்கிறது. `நான்கு ஆடுகள் மட்டுமே வைத்திருப்பதாகச் சொல்லும் அண்ணாமலை ரூ.5 லட்சம் மதிப்புள்ள இந்த வாட்சை அணிந்திருக்கிறார். ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியதும், அதற்கு அண்ணாமலை பதிலளித்ததும் நாமெல்லோரும் அறிந்ததே… அப்படி அந்த ரஃபேல் வாட்சில் என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Bell & Ross நிறுவனம் தயாரித்திருக்கும் ரஃபேல் வாட்ச். BR 03-94 என்றழைக்கப்படும் லிமிடெட் எடிஷன் வாட்சான இது மொத்தமே 500 என்ற எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில், தான் 149-வது வாட்சைக் கட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. வாட்சின் முக்கியமான அம்சமே பிரான்ஸில் இருந்து இந்தியா வாங்கியிருக்கும் ரஃபேல் போர் விமானத்தைத் தயாரித்திருக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டிருப்பதுதான். ஆனால், அண்ணாமலை சொன்னதுபோல் டஸால்ட் ஏவியேஷன் இந்த வாட்சைத் தயாரிக்கவில்லை. பெல் அண்ட் ராஸ் நிறுவன என்ஜினீயர்கள், டஸால்ட் விமானிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். பிரான்ஸின் மிகச்சிறந்த தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களைக் கொண்டாடும் வகையில், டிசைன் தொடங்கி அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்கள். ஏவியேஷன் செக்டாரில் பயன்படுத்தப்படும் செராமிக்கைக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஸ்டீலை விட எடை குறைவானதாகவும், அதேநேரம் வைரத்தை விட வலுவானதாகவும் இருக்கும். போர் விமானங்களின் மூக்குப் பகுதி மேல் பகுதி போன்றவற்றை இந்த மெட்டீரியலைக் கொண்டே உருவாக்குவார்கள்.
Also Read – அமைச்சர் உதயநிதியைச் சுற்றியிருக்கும் இரண்டு பேர்.. இரண்டு டீம்!
ரஃபேல் போர் விமானத்தின் கலர் காம்போ, காக்பிட்டில் இருக்கும் டிசைன் என போர் விமானத்துக்கு நெருக்கமாக இதன் டிசைன் அமைந்திருக்கிறது. சுருக்கமாக, ரஃபேலின் டி.என்.ஏ உங்கள் கைகளில் என்கிறது பெல் அண்ட் ராஸ் நிறுவனம். அந்த வாட்சின் விலை ரூ.5 லட்சம் என அமைச்சர் செந்தில் பாலாஜி, இல்ல இல்ல நான் ரூ.3.5 லட்சத்துக்குத்தான் வாங்கினேன் என அண்ணாமலையும் சொல்லியிருக்கிறார்கள். சரி வாட்சோட விலை என்னனு தெரிஞ்சுக்க Bell & Ross நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்குப் போனோம். இந்த ஸ்பெஷல் எடிஷன் வாட்சோட விலை 6,200 அமெரிக்க டாலர்கள்னு அங்க போட்டிருந்தாங்க. இதை இன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் மதிப்புக்கு மாத்துனா தோராயமா ரூ.5,12,622 வரும். இவ்வளவு விலை அதிகம் வைத்து விற்கப்பட காரணங்கள்னு பார்த்தா மேலே நாம சொன்ன இரண்டு பாயிண்டுகள்தான். வாட்சோட டயல்ல பார்த்தீங்கன்னா, அரைமணி நேரத்தை அளவிடும் குறியீட்டோடு, 3 மணியைக் குறிக்கும் இடத்தில் சிம்பாலிக்காக ரஃபேல் போர் விமானத்தின் படமும் இடம்பெற்றிருக்கின்றன. Rafale BR 03-94 என்கிற எழுத்துகளும், ஸ்ட்ராப்பில் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தைக் குறிக்கும் BR என்கிற எழுத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த வாட்ச் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டுச்சு… இப்போ நீங்க நினைச்சா இந்த வாட்சை வாங்க முடியுமா… இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
BR 03 RAFALE என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச் கறுப்பு நிற ஸ்ட்ராப்புடன் வருகிறது. மெட்டாலிக் ஃபினிஷ் மற்றும் ஆன்டி-ரெப்ளக்டிவ் கோட்டிங்கோடு வருகிறது. கூடுதல் ஸ்ட்ராப் என்கிற வகையில் சிந்தடிக் ஸ்ட்ராப் 120 அமெரிக்க டாலர்கள், கறுப்பு நிற ரப்பர் ஸ்ட்ராப் 125 அமெரிக்க டாலர்கள் என்கிற விலையில் அந்த நிறுவனத்தாலேயே விற்கப்படுகிறது. அதேபோல், வாட்சைக் கழற்றுவதற்கான பிரத்யேக 2 டூல்ஸ் கொண்ட காம்போவையும் 100 அமெரிக்க டாலர்கள் என்கிற விலையில் வாங்கலாம்.
நீருக்குள் 100 மீ ஆழத்திலும் வாட்டர் ரெஸிஸ்டெண்ட் கொண்டது இந்த வாட்ச் என்கிறது தயாரிப்பு நிறுவனம். 42 மி.மி கேஸ் பார்க்கவே எளிமையாக, அதே நேரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அரிய பொருட்களை சேகரிக்கும் கலெக்டர்ஸோட கலெக்ஷன்ல இருக்கத் தகுதியானது இந்த வாட்ச். இதைத்தான் அண்ணாமலையும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். `இது என்னோட தனிப்பட்ட விஷயம். பெர்சனல். என்னோட உயிர் போற வரைக்கும் இந்த வாட்சைக் கட்டியிருப்பேன்’னும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த வாட்சோட சீரிஸ் வரிசையில Auto, Black Matte, BLACK STEEL, BLUE STEEL, GREY LUM, PHANTOM-னு இன்னும் நிறைய வாட்சுகளை Bell & Ross கம்பெனி தயாரிச்சு விற்குறாங்க. இந்த சீரிஸ் வாட்சோட குறைந்தபட்ச விலையே ஜஸ்ட் 2.80 லட்சம்தாங்க.
ரஃபேல் விமானத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வாட்சை சுவிட்சர்லாந்தின் பெல் அண்ட் ராஸ் கம்பெனி கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸில் அறிமுகப்படுத்தியது. 500 என்கிற அளவில் லிமிடெட் எடிஷனாகக் கொண்டுவரப்பட்ட இந்த வாட்ச், 2021-லிலோ அல்லது 2022-லிலோ விற்பனைக்குக் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அண்ணாமலை வாட்ச் பற்றி விவாதம் எழுந்திருப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!