`தவில் வித்வான் தங்கவேலு டு பன்னிக்குட்டி ராமசாமி’ – கவுண்டமணியின் டாப் 10 ரோல்கள்! பகுதி-1

நகைச்சுவையுடன் சேர்த்து படம் பார்க்கும் ரசிகனை சிந்திக்கவும் தூண்டிய தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் கவுண்டமனி நடித்தவற்றில் சிறந்து பத்து கதாபாத்திரங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)

தவில் வித்வான் தங்கவேலு – கரகாட்டக்காரன்

கவுண்டமணி-செந்தில் என்றாலே பெரும்பாலான தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிதான். ‘இவரு பெரிய கப்பல் வியாபாரி’, ‘நீ வாங்குற அஞ்சு, பத்துக்கு இதெல்லாம் தேவைதானா..?’, ‘அது ஏண்டா என்னப் பாத்து அந்த கேள்விய கேட்ட?’, ‘நாதஸ் திருந்திட்டானா..!’  ‘ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாக’, ‘என்னடி கலர் கலரா ரீல் விடுற’ என இந்தப் படம் முழுக்க அவர் பேசிய டயலாக்குகளில் கிட்டத்தட்ட எல்லாமே இன்று அன்றாட வாழ்க்கையில் நாம் சகஜமாக பயன்படுத்தும் டயலாக்குகள் ஆகிவிட்டன. ‘இவனுங்க மட்டும்தான் பிறந்தானுங்களா இந்தியாவுல.. நாமளெல்லாம் அனாவசியமா பொறந்தோமா’  எனப் போகிறபோக்கில் பிறந்த நாள் கொண்டாடும் சினிமாக்காரர்களையும் ஒரு காட்டு காட்டியிருப்பார் கவுண்டமணி.

கண்ணாயிரம் – நடிகன்

வயதான வேடம் போட்டு நடிக்கும் சத்யராஜ், திருடன் கவுண்டமணியிடம் வசமாக மாட்டிக்கொள்ள, படம் முழுக்க.. ‘பாட்டிம்மா.. பாட்டிம்மா..’ என சத்யராஜை வைத்து செய்திருப்பார் கவுண்டமணி. ஒரு இடத்தில் சத்யராஜ், கவுண்டமணியை ‘ச்சே.. கேவலம் நீ ஒரு திருடன்தான’ என சொல்ல, அதற்கு கவுண்டமணி, ‘எங்களுக்கும் மானம் மாரியாத்தா, வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம் எல்லாம் இருக்குய்யா’ என சொல்வதுடன், ‘நீ உங்கம்மாவை காப்பாத்துறதுக்காக வேஷம் போட்டேங்கிறதுக்காக உனக்கு மட்டும் என்ன வெள்ளி கம்பி ஜெயில்லயா போடுவாங்க..’ என தன்னுடைய பாணியிலேயே பதிலடி தந்திருப்பார்.  ‘வுல்லன் டுமாரோ.. டுடே புளியம் பிரியாணி’ என இந்தப் படத்தில் அவர் பேசிய டயலாக் இன்றும் பல யூத்களின் ஃபேவரைட் வசனமாக இருந்துவருகிறது. ஒரு சீனில், சத்யராஜ், ‘உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..’ எனக் கேட்க, ‘அங்கபாரு யாருமே இல்ல போய் பேசிட்டு வா’ என கவுண்டர் கொடுத்து தான் என்றுமே கவுண்டரில் மகான் என்று நிரூபித்திருப்பார் கவுண்டமணி.

‘ராமைய்யா’ – கிழக்கே போகும் ரயில்

கவுண்டமணியின் சினிமா கரியரில் முதன்முதலாக ஒரு முழு நீள வெயிட் கேரக்டர் அமைந்த படம் இது. படம் முழுக்க, தன் மனைவியின் தங்கையான ராதிகாவை, ‘பாஞ்சாலி..பாஞ்சாலி.. உங்க அக்கா வீட்ல இல்லையே’ என குழைந்து குழைந்து ஜொள்ளுவிடும் டிபிக்கல் APU-வாக அசத்தியிருப்பார் கவுண்டமணி.  இந்த ஜொள்ளு மேட்டரெல்லாம் மனைவி காந்திமதிக்கு ஒரு கட்டத்தில் தெரிந்துவிட, ‘வளர்த்த பூணைன்னு உன்ன பாலுக்கு காவலுக்கு வெச்சேன் பாரு’ என சொல்லி திட்ட,’வளர்த்த பூணைதானே கொஞ்சமா குடிச்சுக்கிட்டா தப்பில்ல’ என அந்த சிச்சுவேசனிலும் கவுண்டர் போட்டு அசத்தியிருப்பார் கவுண்டமணி.

முத்து – மன்னன்

கவுண்டமணி எல்லோரையும் கலாய்ப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியையுமே விட்டுவைக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான். ‘ஏம்பா நீ இன்னும் கும்பிடு போடுறத நிறுத்தலையா..’, ‘ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்திப்பா, ஓட்ட கண்ணாடியைப் மாட்டுக்கிட்டு எப்படிதான் நிக்கிறியோ’  என ரஜினியை வார் வாரென வாரியிருப்பார் கவுண்டமணி. உண்ணாவிரதக் காட்சியில், ‘தண்ணியிலே இருக்கும் மீன் கருவாடு ஆகலாம்..’ என மனோரமாவிடம் ஜபர்தஸ்து காட்டிவிட்டு கடைசியில், ‘விடமாட்டேங்குறானுங்கம்மா’ என மாடுலேசனை மாற்றுவதெல்லாம் கவுண்டமணியால் மட்டும்தான் முடியும்.

பன்னிக்குட்டி ராமசாமி – சூரியன்

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை,  வெட்டி உதார், யாரைப் பார்த்தாலும் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது என ‘பன்னிக்குட்டி ராமசாமி’ கேரக்டர் மூலம் சமகால அரசியல்வாதிகளின் பந்தா டார்ச்சர்களை செய் செய்யென கவுண்டமணி வைத்து செய்த படம் ‘சூரியன்’. ‘என்னடா நாரயணா’, ‘ஒரே குஷ்டமப்பா’,  ‘நாராயணா..கொசுத்தொல்லை தாங்கமுடியலடா மருந்தடிச்சு கொல்லுங்கடா’, ‘காந்தக்கண்ணழகி’, ‘அரசியெல்லாம் இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘போய் கூப்புல உட்காரு’ போன்ற வசனங்கள் எல்லாம் தரமான மீம் மெட்டிரீயல்களாக சோசியல் மீடியாவில் இன்றும் உலவிவருகிறது.

Also Read – கவுண்டமணி – செந்தில் காமெடிகளில் யாரு வின்னர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top