தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான்: அமெரிக்காவின் 20 ஆண்டு போர் தொடங்கிய தருணம் எது.. 1999-2021 டைம்லைன்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடைசி அமெரிக்க வீரரும் வெளியேறியிருக்கும் நிலையில், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன். அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு ஏன் படையை அனுப்பியது… 1999-2021 டைம்லைன் ஒரு பார்வை.

1999 அக்டோபர் 15 – அல்கொய்தா, தாலிபான்!

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் 1999-ம் ஆண்டு அக்டோபர் 15-ல் அல்கொய்தா, தாலிபான்கள் போன்ற அமைப்புகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இதையடுத்து, அந்த அமைப்புகளுக்கான நிதியுதவி, ஆயுதங்கள் பரிமாற்றம் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது. அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடனின் தீவிரவாத நடவடிக்கைகளை அடுத்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அவற்றை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.

2001 செப்டம்பர் 9 – அகமது ஷா மசூத் படுகொலை

அகமது ஷா மசூத்
அகமது ஷா மசூத்

தாலிபான்களுக்கு எதிராக மிகத்தீவிரமாகச் செயல்பட்டு வந்த நார்தர்ன் அலையன்ஸ்’ கூட்டமைப்பின் தலைவர் அகமது ஷா மசூத்தை அல்கொய்தா அமைப்பு படுகொலை செய்தது. பஞ்சீரின் சிங்கம் என்று பெயர் பெற்றிருந்த அகமது ஷா மசூத் கொரில்லா போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இது தாலிபான்களுக்கு எதிரான கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அத்தோடு, ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததும் இதன்மூலம் உறுதியானது. வெளியுறவுக் கொள்கை நிபுணர் பீட்டர் பெர்ஜன்,நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் தாக்குதல் நடத்தப்படுவதற்கான தொடக்கப் புள்ளி’ என்று குறிப்பிட்டார்.

2001 செப்டம்பர் 11 – இரட்டைக் கோபுரத் தாக்குதல்

இரட்டை கோபுரத் தாக்குதல்
இரட்டை கோபுரத் தாக்குதல்

அல்கொய்தா தீவிரவாதிகள் நான்கு கமர்ஷியல் விமானங்களைக் கடத்தி உலகப் பொருளாதார மையம் அமைந்திருந்த நியூயார்க்கின் இரட்டை கோபுரம், வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றின் மீது மோதச் செய்தனர். நான்காவது விமானம் பென்சில்வேனியா மாகாணத்தில் இருக்கும் ஷாங்ஸ்வில்லி எனும் மைதானத்தில் மோதியது. இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். அல்கொய்தா அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டாலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கூட அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. எகிப்தைச் சேர்ந்த முகமது அட்டா, இந்த கும்பலுக்குத் தலைவனாகச் செயல்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் அமெரிக்கா வெகுண்டெழுந்தது. `தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கொதித்தார். அல்கொய்தா தலைவர்களை ஒப்படைக்காவிட்டால், அவர்களுக்கு நேரும் கதிதான் உங்களுக்கும் என ஆப்கானிஸ்தான் அரசைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்.

2001 செப்டம்பர் 18 – போரின் தொடக்கம்!

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் மீது போர் தொடுப்பதற்கான கூட்டு நடவடிக்கை தொடர்பான சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டார். தீவிரவாதத்தைத் துடைத்தெறிவதற்காக நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி ஆப்கானிஸ்தானில் நுழைய சட்டப்பூர்வமான அதிகாரத்தை இது வழங்கியதாக அறிவித்தது புஷ் அரசு.

2001 அக்டோபர் 7 – முதல் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதரவுப் படைகள் மீது இங்கிலாந்து ஆதரவுடன் அமெரிக்க ட்ரோன்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கின. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் ராணுவரீதியான ஆதரவு கொடுக்கத் தயாராகின. அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாத கேம்ப்களை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழிக்கத் தொடங்கின. தாலிபான்களுக்கு எதிரான நார்தர்ன் அலையன்ஸ் உள்ளிட்ட உள்ளூர் படைகள் ஆதரவோடு இது நடைபெற்றது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் தாலிபான்களை உள்ளூர் படையினரே நேருக்கு நேர் எதிர்க்கொண்டு போரிட்டனர்.

2001 நவம்பர் – பின்வாங்கிய தாலிபான்!

ஆப்கானிஸ்தானின் Mazar-e-Sharif பகுதியில் 2001 நவம்பர் 9-ல் நடந்த போரில் அடைந்த தோல்விக்குப் பிறகு தாலிபான்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

2001 டிசம்பர் – தப்பிய ஒசாமா பின்லேடன்!

ஒசாமா பின்லேடன்
ஒசாமா பின்லேடன்

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் காபூலுக்குக் கிழக்கே இருக்கும் டோராபோரா மலைப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய குகை ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2001 டிசம்பர் 3- 17 தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தீவிரவாதிகளுடனான சண்டையை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உள்ளூர் படை, ராணுவ வீரர்கள் நடத்தினர். ஆப்கான் ராணுவம் அந்தக் குகையைக் கைப்பற்றுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு (2001 டிசம்பர் 16) குதிரை ஒன்றில் ஏறி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பியதாகக் கூறப்படுகிறது. பின்லேடன் அந்தப் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், இந்தத் தாக்குதலை அமெரிக்க ராணுவம் முன்னெடுக்கவில்லை.

2001 டிசம்பர் 5 – இடைக்கால அரசு!

2001 நவம்பரில் தாலிபான்களிடம் இருந்து தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்ட பின்னர், ஹமீத் கர்சாய் தலைமையில் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலும் இதை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஈரான் அரசு உதவியது.

2001 டிசம்பர் 9 – தாலிபான்கள் தோல்வி!

தாலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் நகரை விட்டுத் தப்பியோடிய நிலையில், ஆப்கனில் தாலிபான்களில் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அல்கொய்தா தீவிரவாதிகள் மலைப்பகுதிகளில் ஒளிந்திருந்தனர்.

2002 ஏப்ரல் 17 – ஆப்கனை மீள்கட்டமைப்போம்!

ஜார்ஜ் புஷ்
ஜார்ஜ் புஷ்

விர்ஜீனியா ராணுவ மையத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், `ஆப்கனை மீண்டும் கட்டமைக்க உதவுவோம். இதன்மூலம், தீவிரவாதைத்தை முற்றிலும் ஒழித்து அமைதி திரும்ப உதவுவோம்’ என்று பேசினார். அமெரிக்க நாடாளுமன்ற 2001 – 2009 வரையில் ஆப்கானிஸ்தானுக்கு 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியையும் அங்கீகரித்தது.

2002 நவம்பர் – அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை!

ஐ.நா உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம் ஒருங்கிணைத்தது.

2003 மே 1 – முக்கியமான போர் முடிவு!

காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட், `முக்கியமான போர் முடிவுக்கு வந்துவிட்டது’ என்றார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் டாமி, ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோர் போரின் முக்கியமான கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல், மீள்கட்டமைப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

2003 ஆகஸ்ட் 8 – சர்வதேச படைகள்!

ஆப்கானிஸ்தானில் இருக்கும் பல்வேறு நாட்டுப் படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலான பொறுப்பு The North Atlantic Treaty Organization எனப்படும் NATO வசம் ஒப்படைக்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே அந்த அமைப்பு முதல்முறையாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

2004 ஜனவரி – ஆப்கன் அரசியலமைப்பு!

ஆப்கன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த 502 உறுப்பினர்களும் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டனர். நாட்டின் பல்வேறு இனக் குழுக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

2004 அக்டோபர் – புதிய அதிபர்!

ஹமீத் கர்சாய்
ஹமீத் கர்சாய்

வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதல் அதிபர் என்ற பெருமையை ஹமீத் கர்சாய் பெற்றார். 1969ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுவாகும்.

2004 அக்டோபர் 29 – பின்லேடன் வருகை!

ஒசாமா பின்லேடன்
ஒசாமா பின்லேடன்

அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அதிபரை எச்சரிக்கும் வகையில் ஒசாமா பின்லேடன் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ஆப்கன் தேர்தல் நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒருநாள் முன்னர் இந்த வீடியோ வெளியானது. அந்தத் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வென்று, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானார். அந்த வீடியோவில் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒசாமா கூறியிருந்தார்.

2005 மே 23 – கூட்டறிக்கை!

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இருநாடுகளும் உற்ற நண்பர்கள் என்கிறரீதியில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானின் ராணுவ தளவாடங்கள், துருப்புகளை அமெரிக்கப் படைப் பயன்படுத்திக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கர்சாய் குறிப்பிட்டார்.

2006 ஜூலை – அதிகரித்த வன்முறை!

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. 2005-ல் 27 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை, 2006-ல் 139 ஆக அதிகரித்தது. ரிமோட் வெடிகுண்டுத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் 1,677 அளவுக்கு அதிகரித்தது.

2007 மே – தாலிபான் கமாண்டர் கொலை!

தாலிபான்களின் முக்கிய தளபதியான முல்லா தாதுல்லா, ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தற்கொலைப் படைத் தாக்குதலின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட அவர் கொல்லப்பட்டது முக்கிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

2008 ஆகஸ்ட் 22 – அமெரிக்கத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் தவறுதலாக ஆப்கனைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை ஐ.நா விசாரணைக் குழு கண்டுபிடித்தது. சொந்த நாட்டு மக்களையே காக்கத் தவறிவிட்டார் என அதிபர் ஹமீத் கர்சாய் மீது விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல், ஃபாரா மாகாணத்தில் நடந்த தவறால் 140-க்கும் மேற்பட்ட அப்பாவி ஆப்கானியர்களை அமெரிக்க ராணுவம் கொன்றதாகவும் சர்ச்சை எழுந்தது.

2009 பிப்ரவரி 7 – ஒபாமா வருகை!

ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பிறகு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஒபாமா ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் முந்தைய அதிபரின் அடிச்சுவடியை அப்படியே பின்பற்றினார். ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா உதவும் என்றார் அவர்.

பராக் ஒபாமா
பராக் ஒபாமா

2009 டிசம்பர் 1 – படைகள் அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கான கொள்கையை மாற்றுவதாக அறிவித்து 9 மாதங்கள் கழித்து, அந்நாட்டில் ஏற்கனவே இருக்கும் 68,000 படை வீரர்களோடு, கூடுதலாக 30,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப இருப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஒபாமா அறிவித்தார்.

2011 மே 1 – ஒசாமா கொலை!

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பொறுப்பாளியான ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் அவர் பதுங்கியிருந்த கட்டடத்துக்குள் புகுந்து அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன. இதையடுத்து, போர் முடிந்துவிட்டதாகப் பேச்சு எழவே, ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

2012 மார்ச் – ஆப்கான் – அமெரிக்கா பதற்றம்!

அஷ்ரஃப் கனி
அஷ்ரஃப் கனி

அமெரிக்காவோடு சமாதானப் பேச்சு நடத்துவதற்காக கத்தாரில் புதிய அலுவலகம் தொடங்குவதாக 2012 ஜனவரியில் தாலிபான்கள் அறிவித்தனர். ஆனால், தங்களின் முக்கிய கோரிக்கையான சிறைபிடிக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா தவறிவிட்டதாகக் கூறி முதற்கட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக தாலிபான்கள் அறிவித்தனர். ஆப்கானிஸ்தானின் கிராமங்களில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படை வீரர்கள் 14 ஆப்கானியர்களைக் கொன்றதாகப் புகார் எழுந்தநிலையில், வெளிநாட்டுப் படைகள் கிராமங்களை விட்டு வெளியேறி ராணுவத் தளங்களில் இருக்க வேண்டும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் வேண்டுகோள் விடுத்தார். இது ஆப்கானிஸ்தான் அரசு – அமெரிக்கா இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

2014 மே 27 – ஒபாமா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் முதற்கட்டமாக 9,800 வீரர்கள் நாடு திரும்ப இருப்பதாகவும் அதிபர் ஒபாமா அறிவித்தார்.

2014 செப்டம்பர் 21 – ஆப்கானிஸ்தான் உடன்பாடு!

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட அஷ்ரப் கனி, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அப்துல்லா அப்துல்லாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

2017 ஏப்ரல் 13 – ஐ.எஸ் எழுச்சி!

ஐ.எஸ் இயக்கம் மீது தாக்குதல்
ஐ.எஸ் இயக்கம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் புதிதாக வளர்ந்துவந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இருப்பிடம் இருந்ததாகவும், அதைத் தாக்கி அழித்ததாகவும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் இயக்கம் இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக அறிவித்தது.

2017 ஆகஸ்ட் 21 – போர் நீளும்!

அமெரிக்காவின் ஆர்லிங்க்டனில் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஆப்கானிஸ்தானில் இருந்து வீரர்களைத் திரும்பப் பெறுவதுதான் எனது நோக்கம் என்றாலும், அது தீவிரவாதிகளின் புகலிடமாக மாற வழிவகுக்கும்’ என்று பேசினார்.

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்

2018 ஜனவரி – தாலிபான்கள் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் புறநகர்ப் பகுதியில் தொடர் தாக்குதல்களை தாலிபான்கள் நிகழ்த்தத் தொடங்கினர். கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றில் 115 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2019 பிப்ரவரி – அமைதிப் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா – தாலிபான்கள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தை எட்டியது. அமெரிக்க பிரதிநிதி ஜல்மய் காலிசாத் – தாலிபான்களின் பிரதிநிதி முல்லா அப்துல் கானி பரதர் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

2020 பிப்ரவரி 29 – அமைதி ஒப்பந்தம்!

அமெரிக்கா - தாலிபான் அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா – தாலிபான் அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா – தாலிபான்கள் இடையே தோஹாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆப்கானிஸ்தானைத் தீவிரவாத செயல்களுக்கான தளமாகப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளோடு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

2021 ஏப்ரல் 14 – அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறல்!

தாலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கப் படைகள் மே 1-ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

2021 ஆகஸ்ட் 15 – ஆப்கானிஸ்தான் அரசு கவிழ்ந்தது!

அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றத் தொடங்கினர். ஆகஸ்ட் 15-ல் சண்டையே இல்லாமல் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு கவிழ்ந்ததாக அறிவித்தனர். சுதந்திரம் கிடைத்து விட்டதாகவும் அறிவித்துக் கொண்டனர்.

2021 ஆகஸ்ட் 31 – கடைசி வீரர்!

கடைசி அமெரிக்க வீரர்
கடைசி அமெரிக்க வீரர்

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து அமெரிக்காவின் கடைசி வீரராக கமாண்டர் கிறிஸ் வெளியேறினார். அந்தப் புகைப்படம் வைரலானது. இதையடுத்து, முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்து, கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Also Read – Kabul Falls: இரண்டே வாரங்கள்; சண்டையே இல்லாமல் காபூலைப் பிடித்த தாலிபான்கள்… ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top