ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட குழப்பங்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வில் கடும் சரிவை ஏற்படுத்தின. இதற்கிடையில், அவருடைய குடும்பத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பட்ட மரணங்களும், ஓ.பி.எஸ்ஸை விரக்தியின் விளிம்பிற்குக் கொண்டு சென்றன. சமீபகாலமாக அவர் தேனி அருகில், போடிமெட்டுவில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தங்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். அங்கு அவருக்கு சமையல் செய்து கொடுக்கவும், வீட்டுப் பராமரிப்பிற்கும் என இரண்டு பேர் மட்டுமே தங்கி உள்ளனர். இந்த நிலையில், ஓ.பி.எஸ்ஸூக்கு ஒரே ஆறுதலாக இருந்தவர் அவர் மனைவி விஜயலெட்சுமி மட்டுமே. இந்நிலையில், இன்று காலை விஜயலெட்சுமியும் மரணமடைந்த துயரம் ஓ.பி.எஸ்ஸைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஓ.பி.எஸ் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று, பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோதும், எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், முதலமைச்சராகப் பொறுப்பேற்றக் கொண்டபோதும், விஜயலெட்சுமி, லைம்லைட்டுக்கு வந்ததில்லை. தேனி, பெரியகுளம் பகுதியில் உள்ள அ.தி.மு.க-வினரில், ஓ.பி.எஸ்ஸூக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே விஜயலெட்சுமியைத் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் மூன்றுமுறை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட போதும், அந்த நிகழ்ச்சிகளிலும், ஓ.பி.எஸ் மனைவி விஜயலெட்சுமி பங்கேற்றதில்லை.
மீடியா வெளிச்சத்தில் விஜயலெட்சுமி
முதன்முதலில் விஜயலெட்சுமி மீது மீடியா வெளிச்சம்பட்டது கடந்த 2012-ஆம் ஆண்டுதான். அந்தக் காலகட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயலெட்சுமி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலெட்சுமியின் உடல்நிலையை விசாரித்து ஆறுதல் சொன்னார்.
அதன்பிறகு, 2017-ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்த நேரத்தில், குடியரசு தின விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஓ.பி.எஸ் கொடியேற்றியபோது, அவருடன் மேடையில் அமர்ந்திருந்தார் விஜயலெட்சுமி. அதன்பிறகு, ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராகத் திரும்பி தர்மயுத்தம் நடத்திய நேரத்தில், பெரியகுளத்தில் உள்ள அவரது தோட்டத்தில், விஜயலெட்சுமி பெயரில் இருந்த கிணறு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அந்த நேரத்தில், ஓ.பி.எஸ்ஸின் மனைவி விஜயலெட்சுமியின் பெயர் மீடியாக்களில் சில நாட்கள் தொடர்ந்து அடிபட்டது. அதன்பிறகு, விஜயலெட்சுமி ஒ.பி.எஸ்ஸூடன் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் உடல்நலக் குறைபாடு, கட்சியில் ஓ.பி.எஸ்ஸின் செல்வாக்கில் ஏற்பட்ட சரிவு, மகன்களின் எதிர்காலம் பற்றிய கவலை என விஜயலெட்சுமி மனதளவில் சோர்ந்து போய் இருந்தார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயலெட்சுமி, இன்று காலமானார். அவருடைய உடல் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 6 மாதத்தில் இது ஓ.பி.எஸ் குடும்பத்தில் நிகழ்ந்த மூன்றாவது மரணம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம், ஓ.பி.எஸ்ஸின் மாமியார் வள்ளியம்மாளும், மே மாதம் ஓ.பி.எஸ்ஸின் தம்பி பாலமுருகனும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி குறுகிய காலத்தில், குடும்பத்திற்குள் தொடர்ந்து நிகழும் மரணச் சம்பவங்கள் ஓ.பி.எஸ் குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.