பழைய திட்டத்துக்கும் அக்னிபாத் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?  

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வரும் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட படைகளில் வீரர்களைப் பணியமர்த்த அக்னிபாத் என்கிற புதிய திட்டம் குறித்து கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியானது முதலே வட இந்தியாவில் பல இடங்களில் இளைஞர்கள் கடும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். ரயில்கள் எரிப்பு, பேருந்துகள் மீது தாக்குதல், போலீஸ் தடியடி என வன்முறை பல இடங்களில் வெடித்தது. அக்னிபாத் திட்டம் என்ன சொல்கிறது… ஏன் இந்தத் திட்டத்துக்கு அவ்வளவு எதிர்ப்பு – அரசு என்ன சொல்கிறது என அந்தத் திட்டம் பற்றிதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப் போறோம்.

அக்னிபாத் திட்டத்தைப் பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, பாதுகாப்புத் துறையில் இப்போ எப்படி வேலைக்கு எடுக்குறாங்கன்றதைத் தெரிஞ்சுக்கலாம். தற்போது இருக்க நடைமுறைப்படி, ராணுவம், துணை ராணுவம், கப்பல் படை, விமானப் படையில் சேரும் வீரர்கள், தங்களின் 60 வயது வரை பணியாற்றலாம். தகுதி, சீனியாரிட்டி அடிப்படையில் அவங்க பல்வேறு ரேங்கிங்கிலும் பணியாற்றி ஓய்வுபெறலாம். இதுதான் இப்போ இருக்க நடைமுறை.

சரி இப்போ அக்னிபாத்துக்கு வருவோம். கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படைக்கு ஆள் சேர்க்கும் பணிகள் பல காரணங்களால் தொய்வடைந்து இருந்தது. இதனால், ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்காகத் தயாராகி வந்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் அக்னிபாத் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தத் திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள், பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் ஒப்பந்த வீரர்களாகப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். நேரடியாகக் கல்வி நிலையங்கள் அல்லது ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் அவர்களுக்கு முதலில் 6 மாதங்கள் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். அதன்பிறகு, 3.5 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

ஆரம்பகாலத்தில் அவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், நான்காவது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியம் அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படாது. இதில், 30% அளவுக்குப் பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்போடு பணி நிறைவுக்குப் பின்னர் ரூ.11.7 லட்ச ரூபாய் சேவை நிதியாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 46,500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியானது. பணி காலத்தில் வீரர் ஒருவர் வீர மரணமடையும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியும், அவர் பணியாற்ற வேண்டிய காலத்துக்கான ஊதியமும் அளிக்கப்படும். அதேபோல், ஊனமடைந்து விட்டால், வட்டியுடன் சேர்த்து சேவை நிதி வழங்கப்படும். அதேபோல், ஊனத்தைப் பொறுத்து ரூ.46 லட்சம் வரை நிதி வழங்கப்படும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். அதேபோல், உடற்தகுதியைப் பொறுத்தவரை தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவுகோலே பயன்படுத்தப்படும்.

நான்காண்டுகள் முடிந்தபிறகு, 25% வீரர்கள் தொடர்ந்து பணியில் அமர்த்தப்படுவார்கள். மீதமிருக்கும் 75% பேர் வெளியேறுவார்கள். அக்னிபாத் திட்டத்தில் பணிக்கு சேரும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்றழைக்கப்படுவார்கள். பாதுகாப்புத் துறை பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, 10% இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்திருக்கிறது. எதிர்ப்பைத் தொடர்ந்து வயது வரம்பு இந்த ஆண்டுக்கு மட்டும் 23 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஏன் இந்தத் திட்டம்?

பாதுகாப்புத் துறையில் தற்போது ஊதியம், ஓய்வூதியம் போன்றவைகளுக்கு அதிக அளவில் செலவீனங்கள் ஆவதாகக் கூறப்படுகிறது. நவீனப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் இந்த செலவீனங்களைக் குறைக்கவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எதிர்ப்பு ஏன்?

ராணுவத்தில் ஒப்பந்த வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதால், அதன் திறன் ஒட்டுமொத்தமாக பாதிப்படையும் என்பது இதை எதிர்ப்பவர்கள் வைக்கும் முதன்மையான வாதமாக இருக்கிறது. அதேபோல், இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலானோர் நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றப்படுவார்கள் என்பதால், வேலைவாய்ப்பின்மை பெருகும். அப்படி வெளியேறுவோரைத் தீவிரவாத அமைப்புகள் அணுகவும் வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கின்றன. இதுவரை 16.5 முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கு 15 ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். ஆனால், புதிய அக்னிபாத் திட்டம், பழைய நடைமுறையை மொத்தமாக ரீப்ளேஸ் செய்யும். நிரந்தர வேலை இல்லை, பென்சன் போன்ற பலன்கள் இல்லை என்பதால் இளைஞர்களிடையே இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. ஒப்பந்த அடிப்படையிலான வேலையால், நான்காண்டுகளுக்குப் பிறகு நாங்கள் வேலைக்கு என்ன செய்வோம் என்பதே போராடும் இளைஞர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. நான்காண்டுகள் முடிந்த பிறகு அரசின் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், வரி பிடித்தம் இல்லாமல் கொடுக்கப்படும் 11.7 லட்ச ரூபாய் அவர்கள் புதிய தொழில்களைத் தொடங்க உதவிகரமாக இருக்கும் என்பது அரசின் பதில்வாதமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

`இது ராணுவப்படைக்கு அடிக்கும் சாவுமணி. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய திட்டம் என்பதால், இதில் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லை என்பதால், நடைமுறைப்படுத்தி, அலசி கவனமுடன் ஆராய்ந்து குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா.

அக்னிபாத் திட்டத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – பிரம்மாஸ்திரா டீம்… பாலையாகிட்ட இருந்து கத்துக்கங்க! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top