Justice For Kerala Girls

வைரலாகும் ஜஸ்டிஸ் ஃபார் கேரளா கேர்ள்ஸ் – பின்னணி என்ன?

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பெரியார் பகுதியில் சுரக்குளம் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். சுரக்குளம் எஸ்டேட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆறு வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தகவல்கள் வெளியானது. அல்லது அறையில் விளையாடும்போது அங்கிருந்த கயிற்றில் தவறுதலாக சிக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வந்தனர்.

கேரளா பாலியல் வன்கொடுமை
கேரளா பாலியல் வன்கொடுமை

காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் உள்ளூர் பிரமுகரான அர்ஜுன் என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அவரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அர்ஜூனிடம் நடத்திய விசாரணையில் சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறுமியை மூன்று வயது முதலே பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு அர்ஜூன் நன்கு பழக்கமானவர். இவர்களின் வீடுகள் அருகில் இருப்பதால் சிறுமி அவ்வப்போது அர்ஜூனின் வீட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்துள்ளார். அப்போது இனிப்புகள் வழங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி அர்ஜூன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது சிறுமி இறந்துள்ளார். இதனால், பதற்றமடைந்த அர்ஜூன் சிறுமி தற்கொலை செய்துகொண்டதுபோல தூக்கில் தொங்க விட்டுள்ளார். சிறுமியின் இறுதி சடங்களிலும் அழுது நடித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கேரளாவில் அதிகரித்து வருவதையடுத்து சமூக வலைதளங்களில் #JusticeForKeralaGirls என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக ஆரம்பித்தது. தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறியும் அம்மாநில அரசு இந்த பிரச்னைகள் மௌனமாக இருப்பது தொடர்பாகவும் கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. இந்த ஆண்டு மே மாதம் வரைக்கும் சுமார் 886 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 1,159 குடும்ப வன்முறை வழக்குகள் உட்பட சுமார் 5000-க்கும் மேற்பட்ட வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக கேரளாவில் சுமார் 12,659 வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து பா.ஜ.க ஐ.டி பிரிவின் தலைவர் அமித் மால்வியா, “சி.பி.ஐ.எம்-ன் கேரளா மாடல், மாநிலத்தை பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆகியுள்ளது. பெண்களுக்கு எதிராக 75,180 குற்றங்களும் குழந்தைகளுக்கு எதிராக 20,497 குற்றங்களும் நடைபெற்றிருக்கின்றன. தலித் பெண்கள் எளிதாக டார்கெட் செய்யப்படுகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

#JusticeForKeralaGirls
#JusticeForKeralaGirls

சி.பி.ஐ.எம் நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த மாதம் கோழிக்கோடு பகுதியில் இரண்டு சி.பி.ஐ.எம் நிர்வாகிகள் மீது காவல்துறையில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மீது குற்றச்சாட்டைக் கூறிய பெண் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவங்கள் அனைத்துமே பரபரப்பை ஏற்படுத்தியதோடு சி.பி.ஐ.எம் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தின. தற்போது இந்த வழக்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கானது தமிழகத்தின் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஹாசினி கொலை வழக்குடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. 

Also Read – கேரளாவை உலுக்கிய மாணவி விஸ்மயா மரணம்… என்ன நடந்தது?

1 thought on “வைரலாகும் ஜஸ்டிஸ் ஃபார் கேரளா கேர்ள்ஸ் – பின்னணி என்ன?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top