வெள்ளைக் கொடி

மலேசியாவில் காட்டப்படும் மூன்று வகை கொடிகள்.. பின்னணி என்ன?

கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிப்படைந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இதனால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த மாதத்தில் அதிகபட்சமாக 7,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் மட்டும் சுமார் 1,500 பேர் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் வருமானம் ஈட்டும் குடும்பத்தினர் கடுமைடாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், #benderaputi என்ற பிரசாரத்தை மேற்கொண்டனர். அதாவது, வெள்ளைக்கொடி பிரசாரம். இதன்மூலம் தங்களது நிதி நெருக்கடி பிரச்னைகளை மற்றவர்களுக்கு மக்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவலின் அடுத்த அலையை கட்டுப்படுத்த மலேசியாவில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் வெள்ளைக்கொடி பிரசாரமானது கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசியால் கடுமையாக பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் வேறு உதவிகள் தேவைப்படும் குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி வெள்ளைக்கொடியை அசைக்கவோ அல்லது தங்களது வீடுகளுக்கு வெளியே வெள்ளைக் கொடியை வைக்கவோ ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த வெள்ளைக் கொடியை மற்றவர்கள் காண்பதன் வழியாக உதவி தேவைப்படுபவர்களுக்கு அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்கள் அல்லது மற்ற மக்கள் உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளைக்கொடி பிரசாரத்தைப் போலவே கருப்புக்கொடி பிரசாரமும் மலேசியாவில் இயங்கி வருகிறது. கருப்புக்கொடியை காட்டுவதன் மூலம் மக்கள் மலேசிய அரசாங்கத்தின் மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பிரசாரத்தின் வழியாக பிரதமர் முஹைதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்றும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

வெள்ளைக்கொடி
வெள்ளைக்கொடி

பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை எதிர்ப்பதற்கு அடையாளமாகவும் அவசரகால நிலையை அகற்ற வேண்டும் என்றும் Sekretariat Solidariti Rakyat என்ற குழு கோரிக்கை விடுத்தது. இதன் தொடர்ச்சியாகவே மக்கள் கருப்புக் கொடிகளை காட்டத் தொடங்கினர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்புக் கொடி பிரசாரத்தால் காவலர்கள் வெள்ளைக்கொடி பிரசாரம் செய்யும் மக்களையும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. வெள்ளைக்கொடி மற்றும் கருப்புக்கொடி பிரசாரங்களைப் போலவே #benderamerah என்ற சிவப்புக்கொடி பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவளிக்க முடியாமல் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்த சிவப்புக்கொடி பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. Malaysian Animal Association இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

கருப்புக்கொடி
கருப்புக்கொடி

உலகம் முழுவதும் வெள்ளை கொடிகள் சரணடைதலின் அடையாளமாக அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லது எதிரிகளை தாக்க விரும்பவில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. `white flag’ என்ற சொற்றொடரானது கேம்பிரிட்ஜ் டிக்‌ஷனரியிலும் இடம்பெற்றுள்ளது. பல நாடுகளில் ராணுவ விதிகளில் வெள்ளைக் கொடியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவில் வெள்ளைக்கொடி என்பது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. கனடாவில் வெள்ளைக் கொடி என்பது பேச்சுவார்த்தை மற்றும் சரணடைய விரும்புவதைக் குறிக்கிறது. இந்த நிலையில் மலேசிய மக்கள் இதனை தற்போது உணவு, மருந்து உள்ளிட்ட அவசர உதவிக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக உதவி தேவைப்படுபவர்களின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

சிவப்புக்கொடி
சிவப்புக்கொடி

கோலாலம்பூர் அருகில் அமைந்திருக்கும் செலங்கர் மாகாணத்தில் உள்ள பெட்டாலிங் ஜயா என்ற பகுதியைச் சேர்ந்த ஹதீஜா என்ற பெண்மணிதான் முதன்முதலில் வெள்ளைக்கொடியைப் பறக்க விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்வழியாக அவருக்கு உடனடி உதவிகளும் கிடைத்துள்ளன. இதனையடுத்து, சமூக வலைதளங்களின் வழியாக இந்த பிரசாரம் வேகமாக பரவியது. இதுதொடர்பாக ஹதீஜா பேசும்போது, “செல்வந்தர்கள், அமைச்சர்கள் அல்லது பிரபலமானவர்கள் எங்களுக்கு உதவ முன் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், அருகில் வசிப்பவர்களே உதவி செய்ய வந்தனர்” என்று ஆச்சரியத்துடன் பேசினார். ஹதிஜாவின் கணவர் ருஸ்னி கஹ்மன் கடந்த ஆண்டு தன்னுடைய வேலையை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மரிய சின் அப்துல்லா பேசும்போது, “வெள்ளைக் கொடியை காண்பிக்க மிகவும் மன தைரியம் தேவை. ஏனென்றால், நிலைமையை உங்களால் சமாளிக்க முடியாது என்ற உண்மையை எல்லோரிடமும் இதன் வழியாக தெரிவிக்கிறார்கள். ஆனால், இதை நான் பாஸிட்டிவாகவே எடுத்துக்கொள்கிறேன். உண்மையில் இது நாட்டுக்கு தேவைப்படும் ஒன்று. உங்களுக்கு உதவி தேவை என்பதை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவ முன்வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read : SBI OTP Scam: ஓடிபி மோசடி… எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top