முல்லைப் பெரியாறு அணை – திடீர் சந்தேகம் கிளப்பும் கேரளா.. மறுக்கும் தமிழகம் – என்னதான் பிரச்னை?

கேரளாவில் இருந்தாலும், 126 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமை, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் போன்றவை தமிழகத்துக்கே சொந்தமானவை. முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா திடீரென கோரிக்கை விடுத்து வருகிறது… தமிழகம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பின்னணி என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்…

முல்லைப் பெரியாறு அணை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தேக்கடியில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெரியாறு ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயே பொறியாளர் கர்னல் பென்னி குயிக்கால் கட்டப்பட்ட இந்த அணையே தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பாசனத்துக்கும் முக்கிய நீராதராமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு – கேரள மாநிலங்களில் முல்லைப் பெரியாறு அணையை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையான நிகழ்வு. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்பது கேரளாவின் வாதம். அதேபோல்,அணை பலமாகவே இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அமைத்த தொழில்நுட்பக் குழுக்களே, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை அளித்திருக்கிறார்கள். இதனால், புதிய அணை தேவையில்லை’ என்பது தமிழகத்தின் வாதம். அதேபோல், நீர்மட்டத்தை அணையின் முழு கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்தினால் சுற்றுவட்டார மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கேரளா வாதிட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் கேரளா, தமிழ்நாடு சார்பில் தங்களது வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். கடந்த 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேரளாவில் பெய்த பெருமழையால் அணை வேகமாக நிறைந்தது. அப்போது, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் தமிழக அதிகாரிகள் அணையைத் திறந்துவிட்டதாகக் கேரளா குற்றம்சாட்டியது. அதேநேரம், தமிழகத்தின் அனுமதி பெறாமலேயே கேரளா அணையைத் திறந்துவிட்டதாகவும் இதனால், அணை மீதான தமிழகத்தின் உரிமை பறிபோய்விட்டதாகவும் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இப்போது என்ன பிரச்னை?

இந்த வழக்குகள் விசாரணையின்போது மத்திய நீர்வள ஆணையமும் அணையின் மேற்பார்வைக் குழுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கைகள் புதிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த நிலை அறிக்கையில், அணையின் உறுதித் தன்மையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரளா வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. `கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் முதன்முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் தமிழகத்தின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அணைப் பகுதிகளில் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்காத கேரள அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் வலுவான வாதங்கள் தமிழக அரசு சார்பில் வைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் முல்லைப் பெரியாறு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் உள்ளிட்ட தகவல்களைப் பெற கேரள அரசின் சார்பில் பொறியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பேசியதையடுத்து, கேரள நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், செயற் பொறியாளர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையிலான குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணை மற்றும் அதன் ஷட்டர்களை பார்வையிட்டு சென்றதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது’ என்று அ.தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

தமிழக அரசு என்ன சொல்கிறது?

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த 2010, 2012 ஆண்டுகளில் மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவைத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமானப் பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் அதிகாரம் படைத்த குழு (Empowered Committee) முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திருக்கிறது. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என்பதே தமிழ்நாடு அரசின் வாதமாக இருக்கிறது.

Also Read – நீட் விலக்கு மசோதா: ஆளுநர் சட்டப்பேரவையின் முடிவை நிராகரிக்க முடியுமா- அடுத்தது என்ன?

3 thoughts on “முல்லைப் பெரியாறு அணை – திடீர் சந்தேகம் கிளப்பும் கேரளா.. மறுக்கும் தமிழகம் – என்னதான் பிரச்னை?”

  1. Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top