பிரதமர் மோடி தலைமயில் ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றது. இதன்பிறகு அமைச்சரவையில் எந்தவித மாற்றங்களோ அல்லது விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் நேற்று மாற்றமும் விரிவாக்கமும் செய்யப்பட்டது. சில மாநிலங்களில் சில ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், பா.ஜ.க செல்வாக்கு குறைந்த மாநிலங்களில் அக்கட்சியை வலிமையாக்குவது போன்றவற்றை மனதில் வைத்து பா.ஜ.க தலைமையானது தற்போது அமைச்சர்களை நியமித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில், காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை மாதவராவ் சிந்தியா கடந்த காங்கிரஸ் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் ஜோதிராதித்யா இடம்பிடித்ததையடுத்து அவரது பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. இவரைப் பற்றிய தகவல்களைதான் இந்தக் கட்டுரையின் வழியாக தெரிந்துகொள்ளப் போகிறோம்!
மத்தியப் பிரதேச அரசியல் களத்தை கலக்கிய ஜோதிராதித்யா சிந்தியா 1971-ம் ஆண்டு பிறந்தார். ஹார்வர்ட் மற்றும் ஸ்டேன்ஃபர்ட் போன்ற உயர்ந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர். அம்மாநிலத்தில் உள்ள குவாலியர் எனும் பகுதியை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், ஜோதிராதித்ய சிந்தியா. இந்த அரச குடும்பத்தின் கடைசி மகாராஜா ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா. இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியமானத் தலைவராக திகழ்ந்தார். மாதவராவ் சிந்தியா தன்னுடைய 26-வது வயதில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 9 தேர்தல்களில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் மற்றும் குணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தனது தந்தையின் தேர்தல் வெற்றிக்காக தனது பதின்ம வயதில் இருந்தே தேர்தல் களத்தில் இறங்கி செயல்பட்டார். இதன் வழியாக தனது முகத்தை மக்கள் மனதில் பதிய வைத்து வந்தார்.
மாதவராவ் சிந்தியாவுக்காக பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டிருந்தாலும் தனது தந்தையின் இறப்புக்கு பின்னரே அரசியல் களத்தில் இறங்கினார். 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து 2002-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தங்கள் குடும்பம் பலமுறை வெற்றிபெற்ற தொகுதியான குணா தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றி அவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விதையைப் போட்டது என்றே கூறலாம். இந்த வெற்றியைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அரசில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக ஜோதிராதித்ய சிந்தியா மாறினார். தொடர்ந்து 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இதனால், 2007-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராகவும் 2009 முதல் 2012 வரை மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சராகவும் இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை இணையமைச்சராகவும் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நடந்து முடிந்த அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அம்மாநிலத்தின் முதல்வராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அதற்காகக் கடுமையான முயற்சிகளை அவர் எடுத்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால், அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. இதற்கு அடுத்து கட்சியின் தலைமைப் பதவி கிடைக்குமா என்று அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அவரது சொந்தத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். இதனா, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், தற்போது மத்திய இணையமைச்சர் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவர்… ரேஸில் முந்துவது யார்?