உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்

Maanadu | Sri Kal Bhairav: உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்தில் என்ன சிறப்பு… தல வரலாறு!

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகியிருக்கும் `மாநாடு’ படத்தில் டைம்லூப் மெயின் கான்செப்டாகப் பேசப்பட்டிருக்கிறது. பின்னணியில் உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம் பற்றிய தகவல்கள் காட்டப்படுகின்றன. உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்தின் தல வரலாறு என்ன?

உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்

சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுபவர் காலபைரவர். அஷ்டபாலகர்களில் முதன்மையானவரான காலபைரவர் சிவாலயங்களில் ஷேத்திரபாலகராக அமைந்திருப்பார். ஆனால், வெகுசில இடங்களில் மட்டுமே காலபைரவர் மூலவராக இருப்பார். அந்தவகையில், ரொம்பவே பிரசித்திபெற்ற ஆலயம் மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜயினி மாவட்டத்தில் இருக்கும் காலபைரவர் ஆலயம். சிவபெருமானின் மூர்க்கமான அம்சமாகக் கருதப்படும் காலபைரவர், இந்த ஆலயத்தில் சிரசு வடிவில் காட்சியளிக்கிறார். காலபைரவரின் வாகனமான நாய்க்கும் கறுப்பு வடிவில் இங்கு சிலை இருக்கிறது. காலபைரவருக்கு வலதுபுறத்தில் பாதாள பைரவி சந்நிதி இருக்கிறது.

உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்
உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்

இங்கு பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பூமாலை, கறுப்புக் கயிறு, ஊதுபத்தி போன்றவற்றுடன் மதுபானமும் இடம்பிடித்திருக்கிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் கடைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. பக்தர்கள் அளிக்கும் மதுபானத்தைத் தட்டில் ஊற்றி, காலபைரவரின் சிலைக்கு அருகே கொண்டுசெல்லப்படும்போது, தட்டில் இருக்கும் மதுபானம் உறிஞ்சப்படுகிறது. மீதமிருக்கும் மதுபானம் பக்தர்களுக்குத் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. காலபைரவர் சிலை எப்படி மதுபானத்தை உறிஞ்சுகிறது என்பதைக் கண்டுபிடிக்க உள்நாட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த எத்தனையோ பேர் முயன்றும் இதுவரை அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கோயிலின் சிறப்பாக இந்த மர்மம் நீடிக்கிறது.

தல வரலாறு

இந்தக் கோயில் முதல்முதலாக பாத்ராசென் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலில் சிவன், விஷ்ணு, பார்வதி தேவியின் படங்களும் சுவர்களில் வரையப்பட்டிருக்கிறது. பழமையான கோயில் சிதிலமடைந்தநிலையில், அதன் எஞ்சிய பாகங்களில் மேல் இப்போதைய கோயில் கட்டப்பட்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்திருக்கிறான். சிவபெருமான் தன் முன்னால் தோன்ற காலதாமதமானதால், சிதையின் நடுவே அமர்ந்து தீவிரமாகத் தவம்புரியத் தொடங்கியிருக்கிறான். இதையடுத்து, அந்தகாசுரன் முன்னர் தோன்றிய சிவபெருமானிடம் பல அரிய வரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்
உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்

வரம் கிடைத்தபின்னர் இந்திரன் முதலான தேவர்களை எதிர்த்து போர் தொடுத்ததோடு, அவர்களுக்குப் பல்வேறு வகைகளில் தொல்லைகளும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறான் அந்தகாசுரன். இதனால், சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். தன்னால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரத்தைப் பெற்றுவிட்டு அந்தகாசுரன் செய்துகொண்டிருந்த மூர்க்கத்தனங்களால் சினமடைந்த சிவன், தனது அம்சமான காலபைரவரை உருவாக்கினார். அந்தகாசுரனின் படைகளைத் தாக்கி அழித்த காலபைரவர், தனது சூலாயுதத்தால் அந்தகாசுரனையும் அழித்தார். இதனால், மகிழ்ச்சியடைந்த தேவர்கள் முதலானோர் சிவபெருமானுக்கும் காலபைரவருக்கும் நன்றி தெரிவித்தனர். ஐப்பசி மாத தேய்பிறை தினத்தன்று காலபைரவர் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் என கோயில் களைகட்டுகிறது.

மராட்டிய மன்னரின் தலைப்பாகை

உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்
உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்

மூன்றாம் பானிபட் போரில் (1761) மராட்டியப் படைகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், மராட்டியப் படைகளின் தளபதி மஹத்ஜி ஷிண்டே காலபைரவருக்கு ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறார். மராட்டியப் படைகள் வெற்றிபெறுவதற்காக காலைபைரவருக்குத் தனது தலைப்பாகையை அணிவித்ததாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். போரில் வென்றபிறகு கோயிலைப் புதுப்பித்து நற்பணிகளையும் மராட்டியப் படைகள் மேற்கொண்டிருக்கின்றன. மூலவரான காலபைரவர் இப்போதும் அணிந்திருக்கும் மாராட்டிய பாணியிலான தலைப்பாகைக்குப் பின்னணியில் உள்ளூர் மக்கள் செவிவழியாக இந்த வரலாற்றைச் சொல்கிறார்கள்.

Also Read – கமலும் விஜயகாந்தும் ஒரே படத்துல… இதை நீங்கப் பார்த்திருக்கீங்களா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top