தனுஷ் - யுவன்

தனுஷ் – யுவன் காம்போ செய்த 7 தரமான சம்பவங்கள்!

இப்போதான் DNA எனப்படும் தனுஷ் – அனிருத் டிரெண்ட் எல்லாம். அதே பத்து ,பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் தனுஷ் – யுவன் காம்போ என்றால் அதற்குதான் தனி மவுசு. அப்படி அந்த காம்போ சேர்ந்து செய்த ஏழு தரமான சம்பவங்கள் பற்றி இங்கே.

துள்ளுவதோ இளமை

தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு இசையமைத்ததே யுவன்தான். ‘கண் முன்னே எத்தனை நிலவு’, ‘நெருப்பு கூத்தடிக்க’, ‘வயது வா வா ’  என அந்தப் படத்திற்காக யுவன் போட்ட மொத்த பாடல்களுமே பொறுக்கியெடுத்த முத்துக்கள்தான். படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்தப் பாடல்கள் மிகப்பெரிய வைரல் ஆனதுடன், அந்தப் படத்திற்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாகவும் அமைந்தது.

காதல் கொண்டேன்

‘துள்ளுவதோ இளமை’ ஹிட்டுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘காதல் கொண்டேன்’ ஆல்பமும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ‘தேவதையைக் கண்டேன்’, ‘தொட்டு தொட்டு’, ‘காதல் காதல்’ என அந்த ஆல்பத்தின் மொத்த பாடல்களும் அப்போதைய ரிங் டோன் மெட்டீரியல்கள். இதில் குறிப்பாக ‘தேவதையே கண்டேன்’ பாடல் வயது வித்தியாசமின்றி பெரியவர்களையும்  முணுமுணுக்கவைத்தது. 

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

இன்றைக்கு என்னவோ தனுஷ் பாடுகிற‘ரவுடி பேபி’ போன்ற பாடல்கள் எல்லாம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகலாம். ஆனால் இதற்கெல்லாம் ‘வெத..!’ யுவன் போட்டது. எஸ்.. தனுஷை முதன்முறையாக யுவன் பாடவைத்தது ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில்தான்.  இந்தப் படம் என்னவோ அப்போது மிகப்பெரிய தோல்வி அடைந்திருந்தாலும் தனுஷ் பாடிய ‘நாட்டுசரக்கு’ பாடல் இன்றும் காரம் குறையாமல் சுறுசுறுக்கிறது.

புதுப்பேட்டை

தனுஷ் – யுவன் காம்போவிலேயே மிகப்பெரிய சம்பவம் என்றால் அது நிச்சயம் ‘புதுப்பேட்டை’ ஆல்பம்தான்.  அப்போது வழக்கத்திலிருந்த சினிமா பாடல்களின் பாணியிலிருந்து சற்று விலகி யுவன் இசையமைத்த இந்தப் பட பாடல்கள் வெளியானபோது, ‘எங்க ஏரியா உள்ள வராதே’ பாடலைத் தவிர்த்து  மற்ற பாடல்கள் வெகுஜன மாஸ் ஆடியன்ஸை பெரிதாக கவரவில்லை.  ஏன் சிலர் திட்டக்கூட செய்தார்கள். ஆனால் வருடங்கள் ஆக, ஆக ஒயின்போல இன்றும் இந்த படத்தின் மொத்தப் பாடல்களுக்கும் சுவை கூடிக்கொண்டே இருப்பதுதான் யுவனின் ஸ்பெஷல் மேஜிக்.  

யாரடி நீ மோகினி

பெரும் எதிர்பார்ப்புடன்‘யாரடி நீ மோகினி’ பட ஆடியோ ரிலீஸாக, ஆர்வத்துடன் சிடி வாங்கிக்கேட்ட தன் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்பரைஸ் கொடுத்திருந்தார் யுவன். ஆல்பத்தின் தொடக்கத்திலேயே ஒரு சிறு மழை தூறல் சத்தம் வர, அதைத்தொடர்ந்து யுவனின் கிறக்கமான குரலில் ‘ can you feel her.. is your heart speaks to her.. can you feel the love..? yes..!’ என வந்து அதன்பிறகு உதித் நாராயணின் குரலில் ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ என பாடல் தொடங்க சிலிர்த்துபோனார்கள் யுவன் ரசிகர்கள்.  

நெஞ்சம் மறப்பதில்லை

தனுஷ் – யுவன் கூட்டணியை பல வருடங்களாக ரொம்பவே மிஸ் செய்துவந்த ரசிகர்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்த ஆல்பம்தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. செல்வராகவன் இயக்கத்தில்  யுவன் இசையில் உருவான இந்தப் படத்தின் ஆல்பத்தில்  ‘மாலை வரும் வெண்ணிலா’ என்ற பாடலை தனக்கேயுரிய பாணியில் ஸ்பெஷலாக பாடியிருப்பார் தனுஷ். பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் அடிக்கவில்லையென்றாலும் இந்தப் பாடலை பிடித்துப்போனவர்களுக்கு அவர்களுடைய ரொம்ப பிடித்த பாடல்களின் பட்டியலில் இந்தப் பாடல் என்றும் இருக்கும்.

மாரி-2

வெகு காலம் இணையாமல் இருந்த தனுஷ் – யுவன் கூட்டணி இந்த படம் மூலம்தான் மீண்டும் இணைந்தது. எதிர்பார்ப்புக்கேற்ப இந்தக் கூட்டணி ‘ரவுடி பேபி’ எனும் உலக லெவல் வைரல் பாடல் ஒன்றைக் கொடுத்தார்கள். அந்தப் பாடலைப் பொறுத்தவரைக்கும் ‘கொஞ்சம் பொறு.. மிஷின் நிக்கட்டும்’ என்னும் கதையாக இன்னும் வியூவ்ஸ்களை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறது. 

இதுபோக, ‘புதுப்பேட்டை’  படத்திற்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் – யுவன் இந்த மூன்று பேரும் ஒன்றாக இணையும் ‘நானே வருவேன்’ படத்திலும் நிச்சயம் ஒரு தரமான சம்பவம் இருக்கும் என அடித்து சொல்லலாம். 

Also Read – சோதனையில் இருந்த ரஜினிக்கு சாதனையைக் கொடுத்த சந்திரமுகி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top