துரைமுருகன்

ராகுல் கொடுத்த 50 தொகுதிகளின் பட்டியல்! – காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்

* சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகள் நடத்திய முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ` குறைந்தபட்ச மரியாதையைக் கூட திமுக தலைமை தரவில்லை’ எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

* நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த அணியில் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மேலிட பிரதிநிதி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர்.

* தி.மு.க தரப்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, `பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது’ என்றவர், வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

* `பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?’ என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசினோம். “ நாடாளுமன்றத் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றதால், அதற்கேற்ப 50 தொகுதிகளைப் பெற வேண்டும் என்பது எங்களின் நோக்கமாக இருந்தது. இதற்கேற்ப வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளில் பட்டியலை துரைமுருகனிடம் கொடுத்தோம். அவர்களோ, `கடந்த சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களைக் கொடுத்தோம். அதில், 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றீர்கள். உங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் எல்லாம் அதிமுகவே வென்றது. எனவே இந்தமுறை 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை’ எனக் கூறிவிட்டனர்.

* இந்தத் தகவலால் மேலிட பிரதிநிதி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அதிருப்தியடைந்தார். ஏனென்றால் `ராகுல் கொடுத்தனுப்பிய பட்டியலின்படி சில தொகுதிகளில் வேண்டுமானால் குறைக்கப்படலாம்’ என நினைத்தார். திமுக தரப்பு உறுதியாக இருந்தால் அவரால் எதையும் பேச முடியவில்லை. தவிர, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ் என சோனியாவின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் வந்தபோதும், அவர்களை வரவேற்க ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் தேவையில்லை என ஐபேக் பிரதிநிதிகள் கூறியதைக் கேட்டு திமுக தலைமை செயல்படுவதாகவே பார்க்கிறோம்” என்றார்.

* அவர் தொடர்ந்து பேசுகையில், “ ராகுல்காந்தியின் கொங்கு மண்டலப் பயணமும் தென்மண்டலப் பயணமும் எங்கள் கட்சிக்கு அதிக வலுவைக் கொடுத்துள்ளது. திமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லையென்றால், வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படலாம். நாங்கள் அணியில் இருப்பதுதான் திமுகவுக்கு வலிமை. அதனை அவர்கள் உணர்ந்தது போலத் தெரியவில்லை” என்கிறார் கொதிப்புடன்.

* “காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்துத்தான் பாடுபடுகிறோம். ஆனால், அவர்களின் தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறது. கடந்த 2016 தேர்தலில் திமுக ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கும் அவர்கள்தான் காரணம். இதை உணர்ந்து தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டுகிறார் ஸ்டாலின்” என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top