மனச்சான்று, கீச்சுக்கருத்து, முப்பாட்டன் – சீமான் தமிழுக்கு பண்ண சேவைகள்!

கீச்சுக் கருத்துகள், உன்குழாய், மலர் வணக்க நாள்.. இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா… முப்பாட்டான், அய்யன்னுலாம் சீமான் யாரைச் சொல்றாரு… பேசுறது, எழுதுறதுனு எல்லாமே தங்கிலீஷ்ல மாறுன காலத்துல தமிழ்ல உள்ள சில அழகான சொற்களை சீமான்தான் திரும்ப புழக்கத்துக்கு கொண்டு வந்தாரு. ஆயிரம் விஷயத்துக்காக அவரை கலாய்க்கலாம். ஆனால், இந்த விஷயத்துல மனுஷன் பண்ணது தரமான சம்பவம்னுதான் சொல்லணும்.

Seeman
Seeman

இந்தியாவிலேயே மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்கள்ல தமிழ்நாடு முக்கியமானது. சும்மா, எதுக்கெடுத்தாலும் இந்தி படி, இந்தி படினு சொல்ற பா.ஜ.கவேகூட, தமிழ்நாட்டில்  தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும்னுதான் போராட்டம் பண்றாங்க. சம்பவம் என்னனா, அதைப் பண்ணத்தெரியாம பண்ணி அடி வாங்கி கட்டிக்கிறாங்க. அதாங்க, சமீபத்தில் நாமக்கல்லில் பா.ஜ.க சார்பில் தமிழ் மொழிக்காக நடத்தப்பட்ட போராட்டம் வேறொரு காரணத்துக்காக கவனம் பெற்றிருக்கிறது. அது என்னவென்றால், தமிழ் மொழியை ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பிடிக்கப்பட்டிருந்த பதாகைதான் அதற்குக் காரணம். போராட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க தொண்டர் ஒருவர் ஐந்து சொற்கள் எழுதப்பட்டிருந்த ஒரு பதாகையை ஏந்தியிருந்தார். அதில், 3 சொற்கள் `கட்டாயமாக்கு’ என்பதுதான். ஆனால், அந்த மூன்று சொற்களுமே எழுத்துப்பிழையோடு இருந்ததுதான் வைரல் கண்டெண்ட். தமிழுக்காக நடத்தும் போராட்டத்திலேயே உங்களால் எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் எழுத முடியவில்லையா என்கிற கோணத்தில் நெட்டிசன்கள் தமிழக பா.ஜ.கவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பும் சரி… சுதந்திரத்திற்குப் பின்பும் சரி… தமிழ்நாட்டைப் பொறுத்தவரை… அங்கிலேயர்கள் எதிர்ப்பு அரசியல், சிந்தாந்த அரசியல், வர்க்க அரசியல், கொள்கை அரசியல், மத அரசியல் என்பனவற்றோடு, மொழி அரசியல் என்பதே முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. அந்த அரசியலை சரியாகக் கையாண்ட திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்ததும், அந்த இடத்தில் கோட்டைவிட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற முடியாமல் போனதும், தங்களின் வாக்கு வங்கியையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது.  

சரி தமிழ்நாட்டோட மொழி அரசியல் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

தமிழில் புராணக் குப்பைகளைத் தவிர வேறோன்றுமில்லை… அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞானம், மருத்துவ அறிவு பற்றிய விளக்கங்கள் தமிழில் இல்லை. அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார்தான், இந்தி எதிர்ப்புப் போரை வீரியமாக தமிழகம் முழுவதும் நடத்தி, திருக்குறள் மாநாடுகளையும் நடத்தினார். அவரின் தளபதியாக இருந்த பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் போன்றவர்கள் மேடைப் பேச்சில் தமிழ் மொழியை தனித்துவமாகப் பயன்படுத்தினார்கள். அடுக்குமொழியிலும், அலங்காரத் தமிழிலும், உணர்ச்சி கொப்பளிக்கும் தீந்தமிழிலும் அவர்கள் பேசியது தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தது என்றாலும், அந்த தமிழ் மேடைப் பேச்சாளர்களுக்கு உரியாதாகவே மாறியது. பொதுமக்களிடம் பெரியதாக புழக்கத்துக்கு வரவில்லை. அந்த நேரத்தில் தனித் தமிழ் இயக்கம் கண்டவர்கள், தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிட இயக்கத்தினர் பயன்படுத்தும் தமிழ் மணிப்பிராவாள நடைத் தமிழ். அது வட மொழிக் கலப்பில் உள்ளது. அது தூய தமிழ் இல்லை என்ற பிரசாரத்தை முன் வைத்து, தனித் தமிழில் பேசவும், எழுதவும் ஆரம்பித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அது தூய தமிழ் பாமர ர்களுக்கும் சென்று சேர்க்க கூடியதாக இருந்தாலும், சிறிய குழு நடவடிக்கையாக மட்டுமே இருந்தது.

Seeman
Seeman

1990-களுக்குப் பிறகு, அந்த இயக்கங்கள் எல்லாம் நீர்த்துப்போன நேரத்தில், பொதுத் தமிழ் என்ற வகையில், தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் ஒரு புதிய தமிழ் 2000-த்துப் பிறகு தோன்ற ஆரம்பித்தது. அதை தங்கிலீஸ் என்று கேலிப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை நாளிதழ், பொங்கு தமிழ் அறக்கட்டளை போன்றவை தங்கிலீஸாக இருந்த மொழிப் பயன்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது.  குறிப்பாக, இருசக்கர வாகனம், கார் என்பதை மகிழுந்து, கிரிக்கெட் போட்டி என்பதை மட்டையாட்டப் போட்டி, ஏரோபிளேன், விமானம் என்று இருந்ததை வானூர்தி, ஹெலிகாப்டர் என்பதை உலங்கு வானூர்தி என்று புழக்கத்தில் கொண்டு வந்தன. அது ஆரம்பத்தில் கேலியாகப் பேசப்பட்டாலும், பிறகு பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதையே பயன்படுத்த ஆரம்பித்தன. ஆனால், அதுவும் பெரிய தாக்கத்தை பொதுமக்களிடம் சேர்ப்பிக்கவில்லை.  

இந்த நேரத்தில் 2010-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  சீமானின் நாம் தமிழர் கட்சி, மீண்டும் மொழி அரசியலைக் கையில் எடுத்து புதிய பாய்ச்சலில் பயணிக்கத் தொடங்கியது. அந்தக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான சீமான் மேடைப் பேச்சில் அன்றாடம் நாம் ஆங்கிலத்தில் குறிப்பிடும் பொருட்களை எளிய தமிழில் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார். அதை அவர் இயல்பாக செய்த முறையும், அந்தப் பேச்சுகள் சமூக வலைதளத்தின் மூலம் பல கோடி மக்களை சென்று சேர்ந்ததும், தமிழ் பேச்சு, எழுத்து வழக்கில் புதிய மாற்றத்தை சிறிய அளவிலாவது கொண்டு வந்தது. அது எந்த அளவுக்குப் போனது என்றால், சீமான் எப்படி சில சொற்களை, சில வார்த்தைகளை, சில பொருட்களை, சில தலைவர்களை, சில நிகழ்வுகளை தனித் தமிழ் வார்த்தைகளில் பேசுவாரோ… அப்படியே மற்ற அரசியல் கட்சியின் தலைவர்களும் பேச வேண்டிய சூழல் உருவானது. அப்படி நாம் தமிழர் பயன்படுத்தி பழக்கத்தில் கொண்டு வந்த சில சொற்கள்…

Also Read – சர்தார்… இந்தியாவுக்குச் சொல்லும் பாடம் என்ன?

தம்பி… என்ற சொல். அது திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. அந்த வார்த்தை தமிழகத்தில் அண்ணாவால் பரவாலாகக் கவனம் பெற்றது. ஆனால், அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவரான கலைஞர் உடன்பிறப்பே என்று தன் கட்சித் தொண்டர்களை அழைக்க ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க-வினரே தம்பி என்பதை பயன்படுத்த மறந்துவிட்டனர். ஆனால், தற்போது சீமான் அடிக்கடி தன் கட்சியினரை தம்பி என்று அழைப்பதும், மேடைகளில் பேசுவதும் மீண்டும் அந்தச் சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுக்கும் விதமாகவும்…. இன்றைக்கு தம்பி என்றாலே,.. அது நாம் தமிழர் கட்சியினர் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு மாறிவிட்டது.

அதுபோல், மறைந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு மலர் வளையம் வைத்தோ… மாலை போட்டோ மரியாதை செய்வது அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் புரோட்டோகால். அந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது…    —– நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது என்றோ அஞ்சலி செலுத்தப்பட்டது என்றோ தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால், நாம் தமிழர் வந்த பிறகு மலர் வணக்க நாள் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். அதையொட்டி தற்போது பல்வேறு இயக்கங்களும்  மலர் வணக்க நாள் என்றே அஞ்சலி நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றன.

Seeman
Seeman

அதுபோல், ரத்த தான முகாம்கள் என்று பயன்படுத்தப்பட்டு வந்த் குருதிக் கொடை நாள் என்று மாற்றி சொல்ல ஆரம்பித்தனர். யூ-ட்யூப் என்பதை  நாம் தமிழர் தம்பிகள், உன் குழாய் என்று மாற்றி பேச ஆரம்பித்து அது மிகப்பெரிய கேலிக்குள்ளானாலும், இன்று உன் குழாய் என்றால் அது யூ-ட்யூப்தான் என்று புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.

சர்வீஸ் ரோடு என்பதை இணக்கச் சாலை என்று பயன்படுத்த ஆரம்பித்ததும் நாம் தமிழர் கட்சியினர்தான். அதுபோல், தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று இருந்ததை , கலைஞர் காலத்தில் அய்யன் திருவள்ளுவர் என்று மாற்றினார். அதையடுத்து பலரும், அய்யன் திருவள்ளுவர் என்றே பேசி வந்தனர். ஆனால், பெரும்பாட்டன் திருவள்ளுவர் என்றும், முருகக் கடவுளை முப்பாட்டன் முருகன் என்றும் பேச ஆரம்பித்து, அது இன்று பெரியளவில் 2கே கிட்ஸ்களிடம் கூட பரவலாக பயன்படுத்தும் அளவுக்கு வந்துவிட்டது. அதுபோல், பெருமாள், திருமால் வழிபாட்டை மாயோன் வழிபாடு என்று மாற்றியதும், திருமால் எங்களின் முப்பாட்டன் மாயோன் என்று சொல்லி அதை தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தியதும் சீமான்தான். இன்னும் மனச்சான்று, கீச்சுக் கருத்துகள், எரிகாற்று உருளை, திரள் நிதி, உண்ணாநிலைப் போராட்டம், கிளித் தட்டு (கோகோ), வலையொளி போன்ற இன்னுமே நிறைய வார்த்தைகளை நாம் தமிழர் கட்சியும் சீமானும் புழக்கத்தில் கொண்டுவர முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அப்படி நாம் தமிழர் கட்சியும் சீமானும் புழக்கத்தில் கொண்டு வந்த வார்த்தையில் உங்களுக்குப் பிடிச்ச வார்த்தை எது… ஏன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top