யார் இந்த சபரீசன்… தி.மு.க-வின் Master Mind ஆனது எப்படி? #Explainer

10 ஆண்டுகள் வனவாசம் போயிருந்த தி.மு.க, சாம-பேத-தான-தண்டங்களைப் பிரயோகித்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார்; அமைச்சரவை அமைக்கப்பட்டுவிட்டது; தேடித்தேடி கச்சிதமான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்; பார்த்துப் பார்த்துத் திட்டங்கள் கையெழுத்தாகின்றன; சீனியர் அமைச்சர்கள், ‘வில்லங்கம் எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது’ என்ற பதட்டத்தில் உள்ளனர்; ஜூனியர் அமைச்சர்கள் சுற்றிச் சுழன்று நல்லபெயர் வாங்கும் ஆர்வத்தில் பணியைத் தொடங்கியுள்ளனர்; ஆலோசனை மேல் ஆலோசனை நடத்தி, ஆட்சி அதிகாரம் நடத்தப்படுகிறது; இத்தனையும் மு.க.ஸ்டாலின் கண்ணசைவில் நடக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம், அந்த கண்ணசைவுக்கு காரணமானவர்கள் இருவர் என்கின்றனர் தி.மு.க-வின் உள்ளும் புறமும் அறிந்தவர்கள்!

இருவரில் ஒருவரில் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா என்ற துர்கா! மற்றொருவர் மு.க.ஸ்டாலினின் மருமகனும், தி.மு.க-வின் மாஸ்டர் மைண்ட் ஆகவும் உருவெடுத்துள்ள சபரீசன்.

MK Stalin - Sabareesan

மு.க குடும்பத்திற்குள் சபரீசன் வந்ததெப்படி?

மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். இவர்களுக்கு நடைபெற்றது காதல் திருமணம் என்பதும், முன்னாள் சபாநாயகரும், தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜனின் தந்தையுமான, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மூலம், சபரீசன் குடும்ப சம்பந்தம், மு.க குடும்பத்திற்கு வந்தது என்பதும் பொதுவாக அனைவரும் அறிந்த தகவல்!

ஆனால், பெரிதும் அறியப்படாத தகவல், சபரீசன் மு.க. குடும்பத்துடன் அறிமுகமாவதற்கு ஒரு வகையில் முதல் காரணம் உதயநிதிதான் என்கின்றனர்.

சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோதே, உதய நிதிக்கும், சபரீசனுக்கும் அறிமுகம் இருந்துள்ளது. கல்லூரி முடிந்தபிறகு, உதயநிதி அமெரிக்கா சென்றார். அதேபோல், மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த சபரீசன் அமெரிக்காவில் உதயநிதியைச் சந்தித்து, இருவரும் அதன்பிறகு நட்பானார்கள். அதோடு, தனியாக அறை எடுத்துத் தங்குமளவுக்கு நண்பர்களாக ஆனார்கள். இந்தப் பின்னணியில்தான் சில திருப்புமுனைகளுக்குப் பிறகு சபரீசன் – செந்தாமரை திருமணப் பேச்சு எழுந்திருக்கிறது.
சபரீசனின் குடும்பத்தினர், அன்றைய சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர் கலைஞரிடம் விஷயத்தைச் சொல்லி, “நல்ல குடும்பம்” என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். “பழனிவேல் ராஜனே சொன்ன பிறகு, தயங்க வேண்டாம்” என்று கலைஞர் சொன்ன பிறகு, ஸ்டாலின் அந்த சம்பந்தத்திற்கு சம்மதித்தார். இப்படி, உதயநிதி மூலம் மு.க.குடும்பத்திற்கு அறிமுகம் ஆன சபரீசன், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் சர்டிபிகேட் பெற்று, கலைஞரின் பரிந்துரையில்தான், மு.க.ஸ்டாலினின் மருமகன் ஆனார்.

மாப்பிள்ளை சார் ஆன மருமகன்!

Stalin - Sabareesan - Udhayanidhi with Family

2011-க்குப் பிறகே, சபரீசனின் பெயர் பொதுவெளியிலும், ஊடகங்களிலும் மெல்ல அடிபடத் தொடங்கியது. 2016 சட்டமன்றத் தேர்தலில், மு.க.ஸ்டாலினின், ‘முடியட்டும்… விடியட்டும்…’ தேர்தல் பரப்புரையின் போது, தி.மு.க காரர்களிடம் சபரீசன்தான் இனி எல்லாம் என்ற எண்ணம் பரவியது. அதையடுத்து, மு.க.ஸ்டாலினின் மருமகன், கட்சிக்காரர்களுக்கு , ‘மாப்பிள்ளை சார்’ ஆனார். ஆனால், உண்மையில் சபரீசனின் களப்பணிகள் அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 2007-11 காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்டார். அப்போதே சபரீசன் மு.க.ஸ்டாலினின் நிழலாகப் பின் தொடரத் தொடங்கிவிட்டார். அதே சமயத்தில், அத்தை துர்காவின் ஆழமான நம்பிக்கைக்குரியவராகவும் சபரீசன் மாறினார். அதனால், மு.க.குடும்பத்திற்குள் சபரீசன் தடம் ஆழமாகப் பதியத் தொடங்கியது. அந்த ஆரம்ப காலங்களில் சில சர்ச்சைகள் வெடித்தாலும், சத்தமில்லாமல் அவை முடித்தும் வைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த சபரீசனின் தனித் திறமைகள்!

தனது மருமகன் என்ற காரணத்திற்காக மட்டும், மு.க.ஸ்டாலின், சபரீசனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துவிடவில்லை. தான் நினைப்பதை செயலில் முடித்துக் காட்டும் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவரை அவர் தேடிக் கொண்டிருந்தார். அந்த சமயம் ஏற்கெனவே கட்சியில் இருந்தவர்கள், ஸ்டாலினைக் காட்டிலும் கலைஞருக்கே அதிக விசுவாசிகளாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தனர். அதுபோல், அவர்கள் அனைவருக்கும், ஸ்டாலினிடம் இருப்பதைப்போலவே, அழகிரி, கனிமொழி, செல்வி, மாறன் சகோதரர்களிடமும் தொடர்புகள் இருந்தன. அதனால், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், தனக்கே தனக்கான விசுவாசிகளாக இல்லை என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். அதேபோல், தன்னிடம் விசுவாசிகளாக இருப்பவர்கள், நவீன காலத்திற்கு ஏற்ற திறமைசாலிகளாக இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார். தெரிந்தோ… தெரியாமலோ… அந்த இடத்தை சபரீசன் இட்டு நிரப்பத் தொடங்கினார். அவர் தொட்ட வேலைகள் அனைத்தும் புள்ளி விபரங்களாக, பக்கா ஸ்கெட்சாக, நேர்த்தியான ஃபினிசிங்கோடு இருந்தது. அதோடு, தன் மாமனாருக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் விசுவாசத்தைக் காட்டுபவராகவும் சபரீசன் இருந்தார். அதுதான், மு.க.ஸ்டாலினை அவரை முழுமையாக நம்ப வைத்தது. அதன்பிறகு, அனைத்து இடத்திலும் சபரீசனை முன்னிலைப்படுத்தத் தொடங்கினார் மு.க.ஸ்டாலின். அதன்பிறகுதான் சபரீசனின் வேலைகள் வேகம் பிடிக்கத் தொடங்கின.

MK Stalin - Sabareesan

ஆல் இன் ஆல் சபரீசன்!

மு.க.ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தால், சபரீசனும் அங்கு இருப்பார். மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியோடு விருந்து சாப்பிட்டால், அந்த மேஜையில் சபரீசனுக்கும் கட்டாயம் இடம் இருக்கும். மு.க.ஸ்டாலின் சார்பில், பி.ஜே.பியோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? சபரீசன்தான் அதை நடத்துவார்… அதிகாரிகளுடன் ஆலோசனையா, சபரீசனையும் ஸ்டாலின் துணைக்கு வைத்துக் கொள்வார்… அமைச்சர்கள் நியமனமா, சபரீசனிடம் கேட்டுக் கொள்வார்… மு.க.குடும்பத்திற்குள் எத்தனையோ பிள்ளைகளும், மாப்பிள்ளைகளும், மருமகன்களும், பேரப்பிள்ளைகளும் இருந்தாலும், சபரீசனின் சில அசாத்திய குணாதிசயங்கள்தான், அவரை இந்தளவிற்கு ஸ்டாலினை நம்ப வைத்தது.

டேட்டா கால்குலேட்டர் சபரீசன்!

மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சன் சைன் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார். அப்போது, அந்த வேலையைக் கையில் எடுத்த சபரீசன், தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் எத்தனை, அவற்றின் தரம் என்ன? என்னென்ன கல்வித் திட்டங்கள் உள்ளன? புதிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? உலகில் உள்ள தலைசிறந்த பள்ளிக்கூடங்கள் எப்படி நடக்கின்றன? என்பதை எல்லாம் புள்ளிவிபரமாக, ஆதாரங்களுடன், அக்குவேர்… ஆணிவேராகப் பிரித்து ஒரு புரொஜெக்டைத் தயார் செய்து, மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். அதில் அசந்துபோன மு.க.ஸ்டாலின், ”இத்தனை தகவல்கள் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? அதிகாரிகள் யாராவது உதவினார்களா?” என்று கேட்டபோது, கூலாக சிரித்துக் கொண்டே பதில் சொன்ன சபரீசன், “என்னிடம் தனியாக இதற்கு ஒரு டேட்டா டீம்” இருக்கிறது எனச் சொன்னபோது, ஸ்டாலின் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனார். அதுதான் சபரீசனின் முதலீடு.

MK Stalin Family

ஈகோ இல்லா இயல்பு!

ஈகோ பார்க்காதவர் சபரீசன். கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இருந்த நேரத்தில் முரசொலி பவள விழா நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாகப் போய் அந்த அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும். கட்சியின் சீனியர்களிடம் கொடுத்து, அந்த வேலையைச் செய்ய முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். மு.க.குடும்பத்தினர் யாரும் அதைச் செய்ய தயாராக இல்லை. அதுபோல, முக்கியத்துவம் குறைந்தவர்களை அனுப்பியும் பத்திரிகை முதலாளிகள், ஆசியர்களை சந்திக்க வைக்க முடியாது? அகில இந்தியத் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் வேலை, விழா ஒருங்கிணைப்பு, விழா மலர் தயாரிப்பு என மு.க.ஸ்டாலினும் அந்த நேரத்தில் ஓவர் பிஸி….. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல், “அழைப்பிதழ் கொடுக்கும் வேலையை நான் செய்கிறேன் என்று இறங்கி வந்தவர் சபரீசன்”. சொன்னதுபோல், அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்று அவரே முரசொலி பவள விழா அழைப்பிதழைக் கொடுத்தார். இப்படி பண்புடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படும் தன்மை சபரீசனின் மதிப்பை மு.க.ஸ்டாலினிடம் உயர்த்தியது. அதோடு 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க-வின் அறிவிக்கப்படாத டேட்டா அனலைசராக இருந்த சபரீசன், தி.மு.க-வின் ஆன்லைன் விளம்பரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்தார். அதில் தொடர்ந்து அவர் குவித்த வெற்றிகள்தான், தற்போது அவரது மாமனார் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நபராக அவரை மாற்றி உள்ளது.

சபரீசனைத் தொட்டால் ஸ்டாலின் துடிப்பார்..!

MK Stalin - Sabareesan

தற்போது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இருந்து சென்னை போலீஸ் கமிஷ்னராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டதுவரை சபரீசனின் கொடிதான் பறந்துள்ளது. முதலமைச்சர் அறையில், முதலமைச்சருக்குப் பின்னால் கூலாக நின்று போஸ் கொடுத்த சபரீசன், அதன் மூலம், அனைவருக்கும் சொல்லாமல் சொன்னது என்னவென்றால், அவருக்குப் பின்னால் நான்தான் இருந்தேன்… இப்போதும் இருக்கிறேன்… இனியும் இருப்பேன் என்பதுதான். அந்தளவிற்கு மு.க.ஸ்டாலினிடம் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றவராக சபரீசன் இருப்பதால், தி.மு.க-விற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் குடைச்சல் கொடுக்க நினைப்பவர்கள் முதலில் சபரீசனைத்தான் குறிவைக்கிறார்கள். அதற்கான உதாரணம்தான், சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, சபரீசன் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ரெய்டு. தனது பிரசாரத்திலும் சரி… அதற்கு முன்பும் சரி… பிரதமர் மோடியை ஒருமையில் விளிக்காத ஸ்டாலின், முதல்முறையாக தனது மருமகன் வீட்டில் ரெய்டு நடந்தபோதுதான், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தளவிற்கு மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதால், எதிர்காலத்தில் சபரீசனுக்கான சவால்களும், அரசியல் ஆபத்துக்களும், அதிகார மிரட்டல்களும் நிச்சயம் அதிகம் இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அதைச் சமாளிக்க சபரீசனிடம் எந்தத் திட்டமும் இல்லாமல் இருக்குமா என்ன?!

Also Read – கருணாநிதி கனெக்‌ஷன்… மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பேனா… சில நினைவுகள் #Wality69

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top