புதுசா வந்திருக்கிற நடிகை, செம்மையா நடிக்கிறாங்க. படங்கள்லாம் நல்லா ஓடுது, அவங்களையே புக் பண்ணிடுங்க’ – சொன்னது ரஜினிகாந்த். அப்படித்தான் அதிசயபிறவி படத்துல அந்த நடிகை முக்கியமான ரோல்ல நடிச்சாங்க. அவங்க பெயர் கனகா.. கரகாட்டக்காரன் கனகா.
முதல் படமே முன்னணி ஹீரோயின்..
இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் இடம்..
ஏக்கமும் காதலும் கலந்த கோபக்கார கண்கள்..
கனகா கால்ஷீட் இருந்தா படம் ஹிட்டுதான்..
இப்படிலாம் 90 காலக்கட்டத்துல நடிகை கனகா பத்தி பேசிட்டு இருந்தாங்க. கனகா நடிகையா வந்ததே ஒரு பெரிய கதைதான். கரகாட்டக்காரன் மூலமா சினிமாவுல அறிமுகம் ஆனாங்கனுதான் நமக்கு எல்லோருக்கும் தெரியும். அதுதான் இல்லை. பிரம்மரிஷி விஸ்வாமித்ரா படத்துலதான் முதல்ல கமிட் ஆனாங்க. அதுதான் சினிமாவுல அவங்களுக்கு முதல் படம். அந்தப்படத்தை இயக்கினது அன்னைக்கு ஆந்திர முதல்வரா இருந்த என்.டி ராமாராவ். அவர்தான் சீதா கேரக்டருக்கு கனகாவை புக் பண்ணார். அந்தக்காலக்கட்டத்துல அவர் சி.எம்ஆ இருந்ததால படம் ரிலீஸ் தள்ளிப்போச்சு. அது 1991-லதான் ரிலீஸ் ஆனது. ஆனா அதுக்குப் பின்னால நடிச்ச கரகாட்டக்காரன் படம் முதல்ல ரிலீஸ் ஆகிடுச்சு. முதல் படமா கரகாட்டக்காரன் ரிலீஸ் ஆச்சு. நடிப்பை பார்த்தா முதல் படம்னே தெரியாது. அப்படி ஒரு நடிப்பு கனகாவோடது. ஆனா கரகாட்டக்காரன் படத்துல முதல்ல நடிக்கவிருந்தது கனகாவே இல்ல அப்படினு சொன்னா நம்ப முடியுமா? ஆமாங்க. முதல்ல வேற ஒரு நடிகைதான் நடிக்கிறதா இருந்தது. அப்புறம் எப்படி அவங்க உள்ள வந்தாங்க, எப்படி சூப்பர் ஸ்டார்கூட ஜோடியா நடிச்சாங்கனுதான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.
கரகாட்டக்காரன் படம் கதையை எழுதி ராமராஜனுக்கு சொல்லி, இளையராஜாவுக்கு சொல்லி இசை வாங்கி, மொத்தப் படக்குழுவும் ரெடியா இருந்தது. ஆனா, ஒரே ஒரு குறை அதுல ஹீரோயின் மட்டும் இல்ல. கங்கை அமரன் நிறைய ஹீரோயின்களை பொருத்திப் பார்க்கிறார். ஆனா யாருமே கதாபாத்திரத்துக்கு செட் ஆனது மாதிரி தெரியலை. ஒரு நாள் கங்கை அமரன் தெருவுல நடந்து வந்துக்கிட்டிருந்தார். அப்போ எதிர்ல நடிகை தேவிகாவும் அவங்க பொண்ணு கனகாவும் நடந்து வந்துக்கிட்டிருந்தாங்க. அப்போ கங்கை அமரன் பார்த்து நலம் விசாரிச்சுட்டு கடந்து போறார். ஆனா போன கொஞ்ச நேரத்துலயே கனகா இந்த கேரக்டருக்கு சரியா இருப்பாங்கனு கங்கை அமரனுக்கு தோணிட்டே இருக்கு. சரி கேட்டிடலாம்னு முடிவு பண்ணி அவங்க அம்மா தேவிகாகிட்ட கேட்குறார். ஆனா அவ சின்ன பொண்ணு, படிக்கணும், வேணாம்னு சொல்லி அவங்க அம்மா மறுத்திருக்காங்க. ஆனாலும் கங்கை அமரன் அதோட நிற்கலை. நீங்களே ஸ்பாட்டுக்கு வாங்க, கவர்ச்சியாவோ, நெருக்கமான சீனோ எடுக்கிற மாதிரி தெரிஞ்சா கையோட கூட்டிட்டுப் போயிடுங்கனு உத்திரவாதம் கொடுத்தார். இது தேவிகாவுக்கு சரின்னு பட, அப்படித்தான் கனகா கரகாட்டக்காரனுக்குள்ள வந்திருக்கார். அப்போ கனகாவுக்கு 16 வயசு. கரகாட்டக்காரன் படம்தான் முதல் படம். அதுக்கு முன்னால பரதநாட்டியம் முறைப்படி தெரிஞ்சுக்கிட்டார். அது கைகொடுக்க கரகாட்டக்காரன்ல இறங்கினார். கங்கை அமரன் அன்னைக்கு உச்சத்துல இருந்த ஹீரோயின்கள்ல ஒருவரை செலக்ட் பண்ணியிருந்தாகூட இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸ் கிடைச்சிருக்குமாங்குறது சந்தேகம்தான். கரகாட்டக்காரன் வெளியாகி படம் 365 நாட்கள் நான் ஸ்டாப் ஓட்டம் ஓடியிருக்கு. ராமராஜன் உச்சத்துக்குப் போனது மாதிரியே முதல் படத்துலயே முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்துட்டார். அப்படி ஒரு என்ட்ரி எந்த தமிழ் சினிமா நடிகைக்கும் கிடைச்சிருக்காதுன்னு அடிச்சு சொல்லலாம்.
கனகாவோட கண்கள்தான் அவரோட பலம். 90-களின் கண்ணழகி கனகாதான். அந்த கண் காதலோட, ஏக்கத்தையும், கோபத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும். இதை மாங்குயிலே பூங்குயிலே பாட்டுலயே பார்க்கலாம். அதோட இவங்க டெடிகேஷனை மாரியம்மா பாட்டு, நளினத்தை முந்தி முந்தி விநாயகனே பாட்டுனு அவ்ளோ வெரைட்டியா பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்க. அதோட எனக்கு எமோஷனும் வரும்னு இறங்கி அடிச்சிருப்பார். அதுலயும் முந்தி விநாயகனேல இவங்க நளினம் நிச்சயமா முதல்படம்னு சொல்லவே முடியாது. சாமி பாட்டுக்கு பேயாட்டம் டான்ஸ் பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா, மாரியம்மா மாரியம்மா பாட்டை யூட்யூப்ல பாருங்க. கண்னாலயே பேசுறதை பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் படத்துல பல்லாக்கு குதிரையில பாட்டுல பார்க்கலாம். அதுல குதிரைக்குள்ள உட்கார்ந்து வருவாங்க. அப்போ அவங்க கண்ணுல மட்டும் ரியாக்ஷன் இருக்கும். கண் மட்டும் இல்ல கனகாவை பொறுத்தவரைக்கும் டான்ஸ்லயும் அவங்க கில்லிதான்.
Also Read – ‘விஜய்ணா முதல் சிவாண்ணா வரை…’ ஆரம்ப காலத்தில் நடித்த அபத்த விளம்பரங்கள்!
கனகாவை பொறுத்தவரைக்கும் கிராமத்து பெண் ஹீரோயின்க்கான பிரதிநிதியாவே வலம்வந்தாங்க. சிட்டி கேரக்டர்ஸ் பண்ணாலும், பெரிசா மக்கள் விரும்பவே இல்லை. அதுக்குக் காரணம், கரகாட்டக்காரன் அப்படிங்குற மேஸீவ் ஹிட்டுதான். எல்லோரும் சினிமாவுல அறிமுகமாகி கொஞ்ச கொஞ்சமா உச்சத்துக்குப் போய் அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கீழ இறங்குவாங்க. ஆனா கனகா அப்படியே ரிவர்ஸ்னுகூட சொல்லலாம். முதல் படமே உச்சத்துக்குப் போய் அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா கீழ இறங்கினாங்க. தமிழ் சினிமாவுல 8 வருஷம்தான் அவங்க ஹீரோயினா நடிச்சாங்க. ஆனா அதுக்குள்ளயே சூப்பர்ஸ்டார்ல ஆரம்பிச்சு, விஜயகாந்த், கார்த்திக், பிரபு, மோகன்லால், சரத்குமார்னு அன்னைக்கு முன்னணியில இருந்த எல்லோருக்கும் ஜோடியா நடிச்சாங்க. அதுலயும் அதிசயபிறவி படத்துல நடிகர் ரஜினியே கனகாவை புக் பண்ணுங்கனு சொல்ற அளவுக்கு இருந்தது, கனகாவோட வளர்ச்சி. தெலுங்கு, மலையாளத்தைத் தாண்டி தமிழ் மொழியிலதான் அதிக படங்கள் நடிச்சிருக்காங்க.
தன் தாயோட மரணம், அப்பாவோட பிரச்னைனு சிக்கல்ல சிக்கி கொஞ்சம் கொஞ்சமா சினிமாவுல இருந்து விலக ஆரம்பிச்சாங்க. இதனால ஒரு கட்டத்துல தனிமையில இருக்க ஆரம்பிச்சார். எந்த அளவுக்குன்னா, 10 வருஷமா அவர் முகமே வெளில தெரியாத அளவுக்கு இருந்தது. அப்போதான் அவரோட மரணம்னு நியூஸ்வர சினிமா உலகம் பரபரப்பானது. ஆனா அவங்களே மீடியா முன்னாடி வந்து அப்படில்லாம் ஒண்ணும் நடக்கலைனு விளக்கம் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் வீட்ல புகை வருதுனு சொல்லி அக்கம்பக்கத்தினர் ஃபையர் சர்வீஸ்க்கு கால் பண்ணாங்க. வேகமா வந்த ஃபையர் சர்வீஸ்க்கு அப்படிலாம் ஒண்ணும் இல்ல, வீட்ல அடுப்புல இருந்துதான் இந்த புகை வந்துச்சுனு சொல்லி தக்லைஃப் கொடுத்தார். பட வாய்ப்புகள் இல்லாம போனதும் யாருமே அவங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை, இவங்களும் யாரையும் தொடர்புகொள்ளவே இல்லை. ஆனா, தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய கதாநாயகிகள்ல முக்கியமானவங்க, கனகா.இப்போ சமீபத்துல குட்டி பத்மினி அவங்களை சந்திச்சுப் பேசின போட்டோக்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. ஆனா இனி திரையில வருவாங்களானு பொருத்திருந்துதான் பார்க்கணும்.