அ.தி.மு.க அரசின் சாதனை தொடர்பான விளம்பரங்களுக்கு மொத்தம் 130 கோடி ரூபாய் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணத்தை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி என நான்கு பேரும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதற்கான பணிகள் அனைத்தையும் எடப்பாடியின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கும் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில், ஏற்பட்ட மனவருத்தம் காரணமாகவே ஓ.பி.எஸ் தன்னிச்சையான விளம்பரங்களைக் கொடுத்து வந்தார். காரணம், அரசின் விளம்பரங்களில் எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே இடம்பெற்றிருந்ததுதான். இதற்கு முதல்வர் தரப்பினர் கூறுகையில், `அரசியலமைப்புச் சட்டப்படி முதல்வர் பதவிக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. துணை முதல்வர் என்பது உருவாக்கப்பட்டது. அதனால் விளம்பரத்தில் குறிப்பிட வழியில்லை’ என்கின்றனர்.
அதேநேரம், துணை முதல்வருக்கான விளம்பரப் பணிகளை அவரது இளைய மகன் ஜெயபிரதீப் செய்து வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின்போது ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியிட்ட `பரதன்’ விளம்பரம் சர்ச்சையானதன் பின்னணியிலும் ஜெயபிரதீப் இருந்துள்ளார்.