முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு… தமிழக அரசின் மசோதா என்ன சொல்கிறது?

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய மசோதா நிறைவேறியது. அந்த மசோதா எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது?

நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நீட் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,10,971 மாணவ – மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 90%-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வு பயத்தால் சேலம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்தசூழலில், மாணவர் தனுஷ் உயிரிழந்த விவகாரம் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய தங்களைப் பேச விடவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, `நீட் தேர்வு குறித்து தி.மு.க அரசு மாணவர்களைக் குழப்பத்தில் வைத்திருந்ததே, மாணவர் தனுஷ் உயிரிழப்புக்குக் காரணம்’ என்று பேசினார். அதேநேரம், நீட்டிலிருந்து விலக்கு கோரி தி.மு.க அரசு கொண்டுவரும் மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா

இந்தநிலையில், நீட்டிலிருந்து விலக்குப் பெறும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிமுகப்படுத்திப் பேசினார். அப்போது, “எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போதுதான் தமிழகத்தில் முதல்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும் அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான். அதை இந்த அவைக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டார்கள். ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள்; இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றால், நீட் விலக்கு வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்கலாமே?’ என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மசோதா என்ன சொல்கிறது?

நீட் விலக்கு கோரி ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில், தி.மு.க கொண்டுவந்திருக்கும் மசோதா எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். அரசாணை எண். 283 மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-06-2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிலே பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த உயர் மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரிடமிருந்தும் கருத்துகளை இந்தக் குழு கேட்டுப் பெற்றது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

86,342 பேரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே.இராஜன் குழு 14-07-2021-ல் அரசிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைச் சட்டம் – 2006

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கை சட்ட 2006-ஐப் போலவே ஒரு புதிய சட்டத்தை இயற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறலாம் என நீதிபதி ஏ.கே.இராஜன் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதுபற்றி மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதித் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மேலும், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறைமூலமாக சரிசெய்யப்பட்டால், அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவக் கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்தத் தகுதியானது.

இந்தப் புதிய சட்ட முன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்ககை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

உயர் மட்டக் குழுவின் பரிந்துரையைக் கவனமாகப் பரிசீலித்த பின்பு, சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை நிலைநிறுத்தவும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய மாணவர்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உறுதி செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுகிறது.

இந்த நீட் தேர்வால் அரியலூர் மாவட்டம் அனிதா தொடங்கி ஏராளமான மாணவர்கள், தங்கள் உயிரை இழக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நேற்றைக்குக் கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார். உயிர்க்கொல்லியாக மாறி வரும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்குமா?

நீட்டிலிருந்து விலக்கு கோரி அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `குடியரசுத் தலைவர் அதை நிறுத்தி (withheld) வைத்திருக்கிறார். ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (withheld)? என்று நம்முடைய அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருந்தார். அதன்பின்னர், இதுதொடர்பான வழக்கொன்றில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்து, மசோதாக்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் முந்தைய அ.தி.மு.க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read – சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்… பா.ஜ.க – அ.தி.மு.க வெளிநடப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top