Dhanalakshmi

டூட்டி சந்தைத் தோற்கடித்த திருச்சிப் பொண்ணு… யார் இந்த தனலட்சுமி?

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய அளவில் ரெக்கார்ட் வைத்திருக்கும் ஒடிசாவின் டூட்டி சந்தைத் தோற்கடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார் நம்ம திருச்சியைச் சேர்ந்த 22 வயதான தனலட்சுமி.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24வது ஃபெடரேஷன் கோப்பை தேசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 100 ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். 100மீ ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனையைத் தன்வசம் வைத்திருக்கும் ஒடிசாவின் டூட்டி சந்த், மற்றொரு முக்கிய தடகள வீராங்கனையான அசாமின் ஹிமா தாஸ் போன்ற வீராங்கனைகள் கலந்துகொண்ட போட்டியில் தனலட்சுமி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

டூட்டி சந்த்

பந்தய தூரத்தை 11.39 விநாடிகளில் கலந்து தனலட்சுமி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம்பிடித்த டூட்டி சந்த், 11.58 விநாடிகள் எடுத்துக்கொண்டார். அதேபோல், 11.76 விநாடிகளில் இலக்கைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்ததும் தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா சுசீந்தரன் என்ற வீராங்கனையே. தொடக்கத்திலேயே சொதப்பிய ஹிமா தாஸ் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

ஹிமா தாஸ்

யார் இந்த தனலட்சுமி?

திருச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தனலட்சுமி இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். 22 வயதான தனலட்சுமியின் தாய் விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மங்களூரு ஆல்வா கல்லூரியில் பயின்றுவரும் அவர், அங்கு கிடைக்கும் சொற்பமான ஊக்கத்தொகையையும் குடும்பத்துக்குக் கொடுத்துவிடுவார். கொரோனா காலத்தில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்ட அவர், அடிப்படை உபகரணங்கள் வாங்குவதற்குக் கூட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். ஆனால், தனது நிலை குறித்து எப்போதுமே அவர் வருந்தியதில்லை.

அவரது கனவு, லட்சியம் எல்லாமே வெற்றி என்ற ஒற்றை இலக்கை நோக்கித்தான் இருந்தன. தமிழக முன்னாள் தடகள வீரரான மணிகண்ட ஆறுமுகத்தின் ராக்ஃபோர்ட் ஸ்டார்ஸ் அகாடமியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பயிற்சி எடுத்து வருகிறார். தேசிய அளவிலான சீனியர் தடகளப் போட்டியில் தனலட்சுமி வென்றிருக்கும் முதல் பதக்கம் இது.

மணிகண்ட ஆறுமுகம் – தனலட்சுமி
Mrs.Bumrah… யார் இந்த சஞ்சனா கணேசன்..? 5 சுவாரஸ்ய தகவல்கள்!

கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி மூலம் முதல்முறையாக கவனம் ஈர்த்தார். 200மீ ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று பதக்க வேட்டையை அவர் தொடங்கினார். 200 மீ ஓட்டப் பந்தயத்தைக் குறிவைத்து பயிற்சி எடுத்துவந்த தனலட்சுமிக்கு, தற்போது 100மீ ஓட்டத்தில் கிடைத்திருக்கும் தங்கம் எதிர்பாரா இன்ப அதிர்ச்சிதான் என்கிறார் அவரது பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம்.

டூட்டி சந்த் போன்ற மிகப்பெரிய தடகள வீராங்கனையை வென்று தங்கம் வென்றிருப்பது ரொம்பவே ஸ்பெஷலானது. அவரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது’ என்று பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம் நெகிழ்ந்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில்,தனலட்சுமியின் முன்னேற்றத்துக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதினேன். நானும், எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அவருக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்தோம். அதேபோல், டயட் விஷயத்திலும் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்’ என்றும் மணிகண்ட ஆறுமுகம் கூறியிருக்கிறார்.

கொரோனா லாக்டௌன் காலத்தில் புதிய பயிற்சிக் கருவிகள் மூலம் பயிற்சி முறை உள்ளிட்டவைகளை மாற்றி கடுமையாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்த உழைப்பின் பலனை இப்போது அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறார். வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் 200மீ ஓட்டத்திலும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கோடு அந்தப் போட்டிக்கு ஆர்வமாகத் தயாராகி வருகிறார் தனலட்சுமி.

திருச்சி மண்ணின் மகள் தடகளத்தில் உயரம்தொட வாழ்த்துகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top