ரேவதி

நடிகை ரேவதியின் மறக்க முடியாத பாடல்களின் லிஸ்ட்!

பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், ரேவதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். 80 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.பாண்டி திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவரது ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இயக்குநராகவும் சில படங்களை இயக்கியுள்ளார். ரேவதியின் பிறந்த நாள் இன்று. பிறந்தநாள் சிறப்பாக ட்விட்டரிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் மறக்க முடியாத சில பாடல்களின் தொகுப்பு இங்கே..

Revathi
Revathi

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

பாரதிராஜா இயக்கத்தில் 1983-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `மண் வாசனை’. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் `பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’. இன்றைக்கும் வெட்கம் என்ற வார்த்தையை கேட்டவுடன் நமது ஞாபத்திற்கு முதலில் வரும்பாட்டு இதுதான். வெட்கப்படும் பெண்ணாக இந்தப்பாட்டில் ரேவதி கலக்கியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.. முகத்தை கைகளால் மறைத்து ஒரு கையை மட்டும் எடுத்துவிட்டு நாயகனைப் பார்க்கும் காட்சி எல்லாம் வேற லெவலில் இருக்கும். இப்போ மட்டுமில்ல எப்பவுமே வெட்கத்துக்கான சிக்னேச்சர் பாடல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டுதான். இந்தப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

என்ன மானமுள்ள பொண்ணு

ராஜ் கபூர் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `சின்ன பசங்க நாங்க’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் `என்ன மானமுள்ள பொன்னு’. வெட்கத்துக்கு எப்படி பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலோ அப்படி பொன்னுங்க தங்களை பொன்னு பார்க்க வந்த கதையை சொல்றதுக்கு பயன்படுத்துற பாடல் இதுதான். இந்தப் படத்துக்கும் இளையராஜாதான் இசையமைத்துள்ளார். கங்கை அமரன் இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். எஸ்.ஜானகி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். கிராமத்து துறுதுறு பொன்னாக ரேவதி இந்தப் பாடலில் வந்து அசத்தியிருப்பார்.

ஆகாய வெண்ணிலாவே

பாசில் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `அரங்கேற்ற வேளை’. அற்புதமான டூயட் பாடலின் லிஸ்டில் ரேவதியின் இந்தப் பாடலை தவிர்க்க முடியாது. இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வாலி இந்தப் பாட்டிற்கான வரிகளை எழுதியுள்ளார். யேசுதாஸ் மற்றும் உமா ராமநாதன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

மன்றம் வந்த தென்றலுக்கு

மணி ரத்னம் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `மௌன ராகம்’. இளையராஜா இசையில் இந்தப் படத்தில் வரும் ஒஹோ மேகம் வந்ததோ, சின்ன சின்ன வண்ணக்குயில், நிலாவே வா, பனிவிழும் இரவு என எந்தப் பாடலையும் தவிர்க்க முடியாது. ஆனாலும், மன்றம் வந்த தென்றலுக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. எஸ்.பி.பி-யின் குரலில் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் சரி வரிகளும் சரி மோகன் மற்றும் ரேவதியின் நடிப்பும் சரி இந்தப் பாடலில் பெஸ்டாக இருக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான அந்த பிரிவை மிக அற்புதமாக மோகனும் ரேவதியும் வெளிப்படுத்தியிருப்பார்கள்.

தென்றல் வந்து தீண்டும்போது

இளையராஜா ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களில் இந்தப் பாட்டுக்கு எப்போதும் இடம் உண்டு. இன்றைக்கும் ரிப்பீட் மோடில் கேட்கப்படும் இளையராஜா பாடல் என்றால் அது `தென்றல் வந்து தீண்டும்போது’தான். நாசர் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான அவதாரம் படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை வாலி எழுதியுள்ளார். இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்து இந்தப் பாடல்களை எழுதியுள்ளனர்.

மேகங்கருக்கையிலே

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாச்சலம் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். இளையராஜா மற்றும் உமா ராமநாதன் ஆகியோர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளனர். இந்தப் பாட்டு நடைபெறும் சூழலே மிகவும் அழகாக இருக்கும். ஆற்றில் கல்யாணத்துக்கு செல்லும் மக்கள் பாடிக்கொண்டே செல்லும் பாடல்தான் இது. கல்யாணப் பெண்ணாக ரேவதி இந்தப் பாடலில் வருவார்.

நேற்று இல்லாத மாற்றம்

சுரேஷ் சந்திர மோகன் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `புதிய முகம்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் `நேற்று இல்லாத மாற்றம்’. வைரமுத்து எழுதியுள்ள இந்தப் பாடலை சுஜாதா பாடியுள்ளார். இளம்பெண்களின் காதல் மனதை அழகாக சொல்லும் இந்தப் பாடலில் ரேவதி மிகவும் கியூட்டாக இருப்பார். இந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் மிகவும் அழகாக இருக்கும். 

பச்சமலை பூவு

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `கிழக்கு வாசல்’. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்தான். எனினும், ரேவதியை வர்ணித்து கார்த்திக் பாடும் `பச்சமலை பூவு’ பலரின் ஃபேவரைட். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் வரிகளை ஆர்.வி.உதயகுமார் எழுதியுள்ளார். எஸ்.பி.பி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

வெண்பனி மலரே

நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `பா.பாண்டி’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமேன்ஸ் பாடல்தான் `வெண்பனி மலரே’. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷ் இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஷான் ரோல்டன்தான் இந்தப் பாடலை பாடியுள்ளார். வயதானாலும் ரேவதி ரொமேன்ஸ் சீன்லாம் வேற லெவல்ல பெர்ஃபாமன்ஸ் பண்ணியிருப்பாங்க. ராஜ்கிரண் மற்றும் ரேவதியின் ரொமேன்ஸ்க்காகவே இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ரேவதியின் நடிப்பில் வெளியான பாடல்களில் உங்க ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read : சாண்ட்விச் செல்லர் டு பாலிவுட் லெஜண்ட் – திலீப் குமாரின் அசாத்திய பயணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top