யாஹூ

Yahoo வீழ்ந்தது ஏன்… எங்கே சறுக்கியது அதன் பிஸினஸ்?

இன்று இணையத்தின் தாதாக்களாக வலம் வரும் Google, Facebook, Youtube-க்கு எல்லாம் வெகு காலத்திற்கு முன்னால், இன்னும் சொல்லப்போனால், இவையெல்லாம் தொடங்குவதற்கு முன்பே இணையத்தில் ஓர் அரசனைப் போல கோலோச்சியது Yahoo. ஆனால், வேகமாக மின்னி வீழ்ந்த ஒரு வால் நட்சத்திரத்தைப் போல விரைவிலேயே யாகூ வீழ்ந்து மடிந்தது.

Yahoo முதலில் ஒரு Web directory-ஆகத் தான் அறிமுகமானது. இணையதளங்களின் பட்டியலை அவற்றின் பக்க எண்ணிக்கைகளின் அடிப்படையில் உருவாக்குவதும் அவற்றைத் தேடி எடுக்க உதவுவதுமாகத்தான் உருவாக்கப்பட்டது. அப்போது இணையத்தின் அத்தனை சாத்தியங்களையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் யாஹூ தான். Dropbox, Cloud storage எல்லாம் வருவதற்கு முன்பே அந்த ஏரியாவில் Yahoo Briefcase என்ற சேவையை அறிமுகப்படுத்தினார்கள். மின்னஞ்சல், ஷாப்பிங், மேப் மற்றும் கேம்ஸ் என அத்தனை ஏரியாவிலும் கெத்து காட்டினார்கள்.

இன்று நாம் இனையத்தில் பயன்படுத்தும் பல சேவைகளின் முன்னோடி யாகூ அறிமுகப்படுத்தியது. இப்போதைய Youtube-ற்கு முன்னோடியாக Yahoo TV இருந்தது. Instagram -ற்கு முன்னோடியாக Flickr இருந்தது. Spotify-க்கு முன்னாடியாக Yahoo Music இருந்தது. Google Keep, Evernote-ற்கு முன்னோடியாக Yahoo Notes இருந்தது.

யாஹூ அவர்களின் உச்சத்தில் இருந்தபோது 125பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாக இருந்தது. அப்போது அவர்களுடைய மதிப்பு Ford, Chrysler, GM, Diseny, Viacom ஆகியவற்றை விட அதிகமாக இருந்தது.

இப்படியெல்லாம் உச்சத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த யாஹூவின் வீழ்ச்சி, ஏப்ரல் 2000-ம் ஆண்டின் Dotcom crash-ற்குப் பிறகு தொடங்கியது. யாஹூ தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்ட சில சம்பவங்களைப் பார்ப்போம்.

1998-ம் ஆண்டு, யாகூவின் வாசலில் ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டியது. யாகூவின் நிறுவனர்கள், அப்போது கொஞ்சம் சோம்பலடைந்து கதவைத் திறக்காமல் விட்டார்கள், அதுதான் யாகூவின் வீழ்ச்சியை வேகமாக்கியது.

யாகூவின் சர்ச் என்ஜினை மேம்படுத்த உதவும் தொழிநுட்பங்களோடு Stanford பல்கலைக்கழகத்தின் இரண்டு பட்டதாரிகள் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலையோடு வந்தார்கள். யாகூவின் David Filo அவர்கள் இருவரையும் உங்கள் தொழில்நுட்பத்தை வைத்து நீங்களே ஒரு தேடு இயந்திரத்தை உருவாக்குங்கள் என்ற இலவச அறிவுரையை வழங்கி அனுப்பினார். அந்த இருவரும் துவங்கிய தேடு இயந்திரம் தான் Google.

2002-ம் ஆண்டு மீண்டுமொரு முறை யாகூவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது யாகூவின் CEO-ஆக இருந்த Terry Semel கூகுளை வாங்குவதற்கு மூன்று பில்லியன் டாலர்கள் வரை செலவழிக்கத் தயாராக இருந்தார். ஆனால், கூகுள் நிறுவனர்களான Larry Page & Sergey Brin இருவரும் யாகுவிற்கு தங்கள் கதவுகளை மூடிக்கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது 5 பில்லியன் டாலர்கள் என்ற செவிவழிச் செய்தி உண்டு.

இப்போதைய கூகுள் தாய்க்கழகத்தின் மதிப்போடு ஒப்பிட்டால், அப்போது அவர்கள் கேட்ட விலை கடலை மிட்டாய்க்குச் சமம். ஆனால், யாகூ இரண்டு முறையும் அந்த அசாத்திய வாய்ப்பை தவறவிட்டது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகும் யாகூ பாடம் கற்றுக்கொண்டதா இல்லையா என்பதை சோதிக்கும் விதமாகவே இன்னொரு வாய்ப்பும் யாகூவுக்கு வந்தது. வழக்கம் போல அந்தச் வாய்ப்பையும் வீணாக்கியது. 2006 ஜூலையில் Facebook-கினை கைப்பற்றும் வாய்ப்பையும் யாகூ வீணாக்கியது.

கூகுள், பேஸ்புக் மட்டுமல்ல… யாகூ வாங்க முடிவெடுத்து கைவிட்ட நிறுவனங்களின் பட்டியல் நீளமானது, அதைவிட சோகமான விஷயங்கள் அந்த நிறுவனங்கள் எல்லாம் பின்னாளில் அசுரப் பாய்ச்சலும் கண்டன. அப்படி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வாங்காமல் விட்ட நிறுவனங்கள் Youtube, ebay, Apple (iphone அறிமுகப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு)

யாகூ வாங்காமல் விட்ட இந்தக் கதைகளை விடுவோம். 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவணம் யாகூவை 44.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்தது. ஆனால், யாகூவின் Co founder, “Jerry Yang” அந்த வாய்ப்பைத் தட்டிக் கழித்தார்.

Also Read : பேங்க் அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி.. எளிய வழி இதோ!

நிறுவனங்களை வாங்கும் இந்த முயற்சிகள் தோல்வியைத் தழுவ, அந்த நிறுவனங்கள் அசுர வளர்ச்சியக் கண்ட போது யாகூ தானாகவே கீழே விழுந்தது. அதுமட்டுமல்லாமல், இணையத்தின் முன்னோடிகளாக அவர்கள் உருவாக்கிய flickr, yahoo tv, yahoo music போன்றவை தங்களைப் புதுப்பித்துக்கொள்ளாமல் ஒரு பக்கம் வீழ்ச்சியடைய, தாய் நிறுவணமான யாகூவும் கால ஓட்டத்தைக் கணிக்கத்தவறி தோற்று வீழ்ந்தார்கள்.

இணையத்தின் சாத்தியத்தை முன்கூட்டிய கணிக்க முடிந்து அந்த சேவைகளை துவங்க முடிந்த யாகூவால், இணையத்தின் எந்த நிறுவனம் கோலோச்சும் என்பதை கணிக்க முடியாமல் வீழ்ச்சியைச் சந்தித்தார்கள்.

2 thoughts on “Yahoo வீழ்ந்தது ஏன்… எங்கே சறுக்கியது அதன் பிஸினஸ்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top