ஸ்காட்லாந்தைச் சேர்ந்த காலின் மெக்கல்லம் என்ற இளைஞர் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஸ்காட்லாந்தின் அபெர்டென்ஷீர் பகுதியிலிருக்கும் பான்ஃப் நகரைச் சேர்ந்தவர் காலின் மெக்கல்லம். கடற்கரை நகரமான பான்ஃபில் இவர் சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது கடலின் மேல் காற்றில் கப்பல் ஒன்று மிதந்துகொண்டிருப்பது போன்ற காட்சியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். உடனடியாக அந்தக் காட்சியைத் தனது கேமராவில் படம்பிடித்த காலின், அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.
ஒளியியல் மாயையால் (Optical Illusion) இந்தத் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடலின் நிறமும் வானத்திலிருந்த மேகக் கூட்டங்களின் நிறமும் ஒரேபோல் இருந்ததால், கடல் நீர்மட்டத்திலிருந்து சிறிது தூரம் மேலே எழும்பிய நிலையில், கப்பல் காற்றில் பரப்பது போன்ற தோற்றம் உண்டாகியிருக்கிறது.
https://www.facebook.com/photo/?fbid=2876054102667732&set=a.1407773149495842
இதுகுறித்து பேசிய காலின் மெக்கல்லம், “முதலில் அந்தக் காட்சியைப் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தபோதுதான் ஒளியியல் மாயையால் இதுபோன்ற காட்சி ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனடியாக அந்தக் காட்சியைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். அந்தப் பதிவை இதுவரை 1,700க்கும் மேற்பட்டோர் பகிர்ந்திருக்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.