நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நட்சத்திரமானது, சந்திரனின் நட்சத்திரமாய் விளங்குவதால் ஒளிரும் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இந்நட்சத்திரத்தின், முதல், மூன்றாம், மற்றும் நான்காம் பாதத்தின் நட்சத்திர அதிபதியாய்-சந்திரனும், இரண்டாம் பாதத்தின் நட்சத்திர அதிபதியாய் செவ்வாயும், நான்கு பாதங்களின் ராசி அதிபதியாய் சுக்கிரனும், நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் செவ்வாயும், இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மூன்றாம் பாதத்தில் புதனும், நான்காம் பாதத்தில் சந்திரனும் வலம் வருகின்றன. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரமாய் ரோகிணி பார்க்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரமானது, கம்சனின் அழிவுக்கு காரணமாக இருந்ததால், இந்நட்சத்திரத்தில் பிறந்தால் அவர்களது தாய் மாமன்களுக்கு ஆகாது என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய நம்பிக்கையானது, அனைத்து ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கும் பொருந்தாது. அத்தகைய நிலையானது புதனும், லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகம் அமையும் அமைப்பை பொருத்தே அமைகிறது.
எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து பின் செயலாற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக் கூட வென்று தனித்து விளங்குவார்கள். இந்ட்க நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் வெங்கடேசப் பெருமாள் சந்நிதிகளைச் சரணடைந்து வழிப்பட்டு வர சகலமும் வந்தடையும் என்பது ஐதீகம். சந்திர சாந்தி ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், செய்து திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
ஸ்ரீபாண்டவதூதர் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் சென்று வழிபட வேண்டிய ஆலயம் காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூதர் பெருமாள் கோயில் திருத்தலமாகும். 27 நட்சத்திர தேவியர்களில் ஒருவரான ரோகிணி தேவி இத்திருத்தலதினுள் இருக்கும் பெருமாளை வழிப்பட்டதன் மூலமே சந்திரனை மணவாளனாக அடையும் வரம் பெற்றார் என்பது வரலாறு. எனவேதான் இத்திருத்தலம் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனால் புதுப்பிக்கப்பட்ட இந்தத் திருத்தலம் சுமார் 2,000 வருடங்கள் பழமையானது. இத்தலத்தில் 25 அடி உயரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுக்கு தூது சென்றதால், இத்திருத்தலமானது, பாண்டவதூதர் பெருமாள் கோயில் எனப்பெயர் பெற்றது. கோயில் கல்வெட்டுகளில் கிருஷ்ணரை தூதஹரி என குறிப்பிட்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
அஷ்டமி திதி எட்டாம் நாளில் புதன் அல்லது சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அர்சனை செய்து வழிபட்டு வந்தால் அரிதான பலன்கள் நிறைந்த நன்மைகள் கிட்டும். இத்திருத்தலத்தில் கிருஷ்ணர் பூமியில் தன் பாதங்களை அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை செலுத்தியதால், இந்தத் திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பெருமாளின் பாத தரிசனம் இத்திருத்தலத்தின்பால் இருப்பதனால் இங்கு அங்கபிரதட்சணம் செய்வோருக்கு சகல துன்பங்களும் நீங்கி பாவ விமோசனம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருக்கோயில் நடை, காலை 7 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை திறக்கப்படுகிறது. கிருஷ்ணஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, உற்சவங்கள் போன்ற நாட்களில் விசேஷமாக இருக்கும்.
எப்படி செல்வது?
ஸ்ரீ பாண்டவதூதர் பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பேருந்து வசதி இருக்கிறது. பல ஊர்களில் இருந்து ரயில் போக்குவரத்தும் உண்டு. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில்தான் அமைந்திருக்கிறது. அருகில் இருக்கும் விமான நிலையம் சென்னை.