நீட்

நீட் தேர்வு: நிரந்தர விலக்குப் பெற முடியுமா… தமிழக அரசின் வாதம்; மத்திய அரசு சொல்வதென்ன?

நீட் தேர்வு முறையிலிருந்து விலக்குப் பெறும் வகையில் புதிய சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்க முயற்சிக்கப்படும் என்று தமிழக அரசு கூறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முடியுமா?

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வாக நீட் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் நான்காண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 16 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,10,971 மாணவ – மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 90%-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மறுபுறம் நீட் தேர்வு பயம், தேர்வெழுதிய பின்னர் மதிப்பெண் குறையலாம் உள்ளிட்ட காரணங்களால் சேலம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் அருகே துளராங்குறிச்சியில் மாணவி கனிமொழி, வேலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் சௌந்தர்யா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழக அரசின் மசோதா

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்னரே நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆட்சிக்கு வந்ததும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வினால் ஊரகப் பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என்று ஆய்வறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஜூன் 10-ம் தேதி அமைக்கப்பட்ட இந்தக் குழு, 86,432 பேரிடம் பெற்ற கருத்துகள் அடிப்படையிலான ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14-ம் தேதி சமர்ப்பித்தது. இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, `சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது’ என்று தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மேலும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கை சட்டம் 2006-ஐப் போலவே ஒரு புதிய சட்டத்தை இயற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை செய்திருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

என்ன பிரச்னை?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள், மாநில அரசின் அதிகாரங்கள், பொதுப்பட்டியல் என அதிகாரங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வழக்குத் தொடர்ந்து, அது நிலுவையில் இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பற்றிய தெளிவான வழிகாட்டுதல்கள், அதில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது போன்றவை அரசியலமைப்புச் சட்டத்தில் விவரிக்கப்படவில்லை. கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மாணவர்களுக்குப் போதிக்கப்படும் கல்வியின் தரத்தை செழுமைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

ஆனால், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் மாணவர் சேர்க்கை என்பது தரம் என்ற அடிப்படையின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருக்கிறது என்பது தமிழக அரசின் வாதம். அதேபோல், கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி மாநில அரசுகளுக்கே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வரும் என்றும் தமிழக அரசு சொல்கிறது. நீட் விலக்கு மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போதே இதைப்பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், “மருத்துவக் கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசானது அதை முறைப்படுத்தத் தகுதியுடையது’’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

நீட் தேர்வு விலக்கு சாத்தியமா?

சட்டவழிமுறைகளைப் பின்பற்றினால் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்குப் பெற முடியும் என்கிறார் தமிழக அரசு அமைத்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “மத்திய அரசால் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கோ, அதை முறைப்படுத்துவதற்கோ அதிகாரம் இல்லை என்று சட்டம் இருக்கிறது. இது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. 2007-ல் இயற்றப்பட்ட இந்த சட்டம் இன்றும் அமலில் இருக்கிறது. இதற்கு முன்பு நீட் விலக்குக் கேட்டபோது இந்த சட்டம் பற்றி யாரும் பேசவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு மாடர்ன் மருத்துவக் கல்லூரி வழக்கில் பொதுப்பட்டியலில் உள்ளீடு 66, பிரிவு 1-ன் கீழ் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை வராது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. மாநிலப் பட்டியலில் இருக்கும் 25-வது உள்ளீட்டின் கீழ்தான் வரும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதேபோல், நாடு முழுவதும் பொதுவாகக் கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறையில் இருந்து விலக்கு கேட்கலாமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கும் ஒரு உதாரணம் இருக்கிறது. பொதுவாக கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்படுவதும், முன் ஜாமீன் வழங்கப்படுவதும் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் சட்ட வழக்கம். ஆனால், இந்த முன் ஜாமீன் நடைமுறையில் இருந்து விலக்கு வேண்டும் என தனியாக சட்டமியற்றியிருக்கிறது உத்தரப்பிரதேசம். இதனால், உ.பி-யில் முன் ஜாமீன் பெறும் சட்ட நடைமுறை இல்லை. அதேபோல், நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறையில் இருந்து விலக்குக் கேட்பது மாநிலங்களின் உரிமை. இந்த முறை குடியரசுத் தலைவரும் மனம்மாறி இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு என்ன சொல்கிறது?

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், நீட்டில் இருந்து விலக்குப் பெற மாநில அரசுகள் விரும்பினால், உச்ச நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும் என மத்திய உயர் கல்வித் துறை செயலாளர் அமித் காரே கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் நீட் தேர்வு முறையைத் தமிழ்நாடும் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ல் உத்தரவிட்டிருக்கிறது. நீட் தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை உருவாக்கியிருக்கும் பாடத்திட்டத்தில் சிபிஎஸ்இ மட்டுமல்லாது அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. நீட் தேர்வு பாடத்திட்டத்தில் மாநில அரசுகளுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், அதிலிருந்து விலக்குப் பெற உச்ச நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும்’’ என்று அவர் கூறியிருக்கிறார்.

Also Read – நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு… தமிழக அரசின் மசோதா என்ன சொல்கிறது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top