பொதுவாகவே ஹீரோக்களாக நடிக்கும் நடிகர்களுக்கு இரட்டை வேடத்தில் நடிக்கிறது சவாலான விஷயமாகத்தான் இருக்கும். அதில் ஒரு கதாபாத்திரம் வில்லன்னா இன்னுமே சவாலாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஏன்னா, எல்லா கமர்ஷியல் படங்களிலும் ஹீரோ கேரக்டருக்கும் வில்லன் கேரக்டருக்கும்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவோட டாப் ஹீரோக்கள் எல்லாரும் இந்தப் பேட்டன்ல படங்கள் பண்ணியிருக்காங்க. அது என்னென்ன படங்கள்னு இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ரஜினி இதுவரைக்கும் நிறைய படங்களில் இரட்டை வேடங்களில் நடிச்சிருந்தாலும் அவரே ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்தப்படம்னா அது எந்திரன்தான். வசிகரனாக சிட்டியை உருவாக்கி, அதற்கு எமோஷன்ஸை வரவழைத்து தன் கண்டுபிடிப்பையே தனக்கு வில்லனாக மாற்றிவிடுவார். ஆனால், சிட்டி கொடுரமான வில்லனாக மாற ப்ரபோசர் போரா போட்ட ரெட் சிப்தான் காரணம் என்றாலும், வசிகரன் சிட்டிக்கு எமோஷன்ஸை வர வைத்ததுதான் இதற்கெல்லாம் துவக்கம் என்று சொல்லலாம். அதுனாலதான் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையே ஆரம்பமாகும். ரஜினியும் வசிகரன் கதாபாத்திரத்தைவிட சிட்டியாக மிரட்டியிருப்பார்.
ரஜினியைப் போலவே கமலும் இரட்டை வேடங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். அதில் சில படங்களிலும் ஹீரோ வில்லனாகவும் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்ததில் இந்த பேட்டனுக்கு பக்காவாக பொருந்துகிற படமாக ஆளவந்தான் படம்தான். அண்ணன் – தம்பி என இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்ட கமல் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்; படத்தின் மேக்கிங்கில் இருந்த புதுமை – பிரமாண்டம்; குறிப்பாக நந்து கேரக்டரில் கமலின் நடிப்பு என பல விஷயங்களில் இந்தப் படத்தில் பல விஷயங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தியிருப்பார் கமல்.
விஜய் இரட்டை வேடங்களில் சில படங்கள் நடித்திருந்தாலும் அவர் நடித்த முதல் இரட்டை வேட படத்திலேயே இந்த பேட்டனில் நடித்திருப்பார். படத்தின் கதையாகவும், மேக்கிங்காகவும் சில குறைகள் இருந்தாலும், இரு கேரக்டர்களுக்கும் இடையே வித்தியாசம் காட்ட ஓரளவு முயற்சி செய்திருப்பார் விஜய்.
அஜித்தும் இரண்டை வேட படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும் அவர் நடித்த முதல் இரட்டை வேட படமான வாலியிலேயே இந்த பேட்டனில் நடித்திருப்பார். அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்த அஜித் லுக்கில் வித்தியாசம் காட்ட முடியாத கதை என்பதால் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியிருப்பார். அதுனாலேயே அஜித்திற்கு முதல் ஃபிலிம்ஃபேர் விருதை வாங்கிக்கொடுத்தது வாலி. இந்தப் படம் மட்டுமில்லாமல் வரலாறு, அட்டகாசம் படத்திலும் அஜித்திற்கு அஜித்தே வில்லன்.
இதுவரைக்கும் பார்த்த நான்கு ஹீரோக்களின் படங்களில் மூன்று படங்கள் கதாநாயகிக்காக சண்டை போடுவதாகவே இருக்கும். ஆனால், சூர்யாவின் 24 படம் இதில் இருந்து ரொம்பவே வித்தியாசமான படம். டைம் ட்ராவல் படம் என்பதால் இதில் டைம் மிஷினான வாட்ச்தான் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான சண்டையில் காரணம். இதில் 3 சூர்யா என்றாலும் 2 சூர்யாதான் ஒரே சீனில் வருவார்கள். இதில் வில்லன் கேரக்டரான ஆத்ரேயாவுக்கு இரண்டு லுக்கும் இருக்கும். இரண்டு லுக்கிலும் சூர்யா பட்டையை கிளப்பியிருப்பார். படமும் டெக்னிக்கலாக ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும்.
வித்தியாசமான கெட்டப் போடுவது விக்ரமுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், விக்ரம் வித்தியாசமான கெட்டப் போட்ட பல படங்களில் விக்ரம் ஒரே ஆளாகத்தான் இருப்பார். இரட்டை வேடங்களில் அதுவும் இந்த பேட்டனில் அவர் நடித்த படம் இருமுகன்தான். லவ் என்கிற கேரக்டரில் தனது கெட்டப், பாடி லாங்குவேஜ், வாய்ஸ் என எல்லாத்தையும் மாற்றி வேறு ஒரு ஆளாக இருப்பார். ஆனால், இந்தப் படத்திற்கு முன்பாகவே விக்ரம் இதைவிட சிறப்பான கெட்டப்களில் நடித்ததாலோ என்னவோ இந்தப் படம் ஆடியன்ஸை பெரிதாக ஈர்க்கவில்லை.
இந்தப் பேட்டனில் சமீபத்தில் வந்தப் படம்தான் நானே வருவேன். ஆளவந்தான், வாலி, 24 படங்களைப் போல இதுவும் அண்ணன் – தம்பி சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். ஆளவந்தான் படத்தின் சாயல் கொஞ்சம் இருந்தாலும் இதை சற்று வித்தியாசமாகவே கையாண்டிருப்பார்கள். தனுஷும் சைக்கோ கேரக்டரில் சிறப்பாகவே நடித்திருப்பார்.
இதுவரைக்கும் நாம் பார்த்த படங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்ன என்றால், ஒரு ஹீரோ இந்த பேட்டனில் படம் பண்ணும் போது ஹீரோ கேரக்டரைவிட வில்லன் கேரக்டரைத்தான் சிறப்பாக நடிக்கிறார்கள். அதற்குத்தான் அதிக மெனக்கெடல்களையும் போடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தப் படங்கள் போக அமைதிப்படை படத்தில் சத்யராஜ், ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவி, சிங்கம் புலி படத்தில் ஜீவா என பல ஹீரோக்கள் தங்களது கரியரில் ஒருமுறையாவது இந்த பேட்டனில் படம் நடிக்கிறார்கள்.
இந்தப் பேட்டனில் வந்த உங்களுக்கு பிடித்த படம் எது? இதில் நான் சொல்லாத படம் எதாவது இருந்தால் அதையும் கமெண்ட் பண்ணுங்க.