Pulses

திடீர் ஏற்றத்தில் பருப்பு விலை… என்ன காரணம்?

கொரோனா பெருந்தொற்று காலம் உணவுப் பழக்கவழக்கத்தையே மொத்தமாக மாற்றியிருக்கிறது. சத்தான, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் மீது மக்களின் கவனம் திரும்பத் தொடங்கியிருக்கிறது. பருப்பு விலையின் திடீர் ஏற்றத்தின் பின்னணி என்ன?

கொரோனா பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. உணவு தொடங்கி பல்வேறு பழக்க வழக்கங்களும் அதையொட்டி மாறத் தொடங்கியிருக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய உணவு வகைகள் மீது திடீரென வெளிச்சம் விழத் தொடங்கியிருக்கிறது. புரோட்டீன் சத்துகள் செறிந்து காணப்படும் விலை குறைந்த உணவு வகையான பருப்பு வகைகளின் விலை சுமார் 15% அளவுக்குக் கடந்த ஓராண்டில் உயர்ந்திருக்கிறது. சில்லறை பணவீக்கத்தின் அளவு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமான 6.3%-மாகக் கடந்த மே மாதத்தில் இருந்தது. பருப்பு விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இதுவும் பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் பருப்பு விலை

பருப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும் துவரம் பருப்பு விலை கடந்த ஆண்டு ஜூலையில் கிலோ ரூ.96 என்று இருந்த நிலையில், இந்த ஜூலையில் அது ரூ.110 ஆக உயர்ந்திருக்கிறது. பருப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கிலோவுக்கு ரூ.10 விலை குறைத்து கடந்த மாதத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகான விலை நிலவரம் இது. மற்ற பருப்பு வகைகளான கறுப்பு உளுந்து, பாசிப்பருப்பு போன்றவற்றின் விலையும் 4 – 14% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேவை அதிகரித்ததே விலை உயர்வின் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

பருப்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் போன்றவை கடந்த ஆண்டு லாக்டவுனின்போது முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டில் நிலைமை அப்படியில்லை. தடுப்பூசி போட்டபிறகு பருப்பு வகை உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையும் விலை உயர்வுக்குக் காரணம். அதேபோல், உற்பத்திக் குறைவு, வெளிநாட்டு இறக்குமதி வாய்ப்புகள் குறைந்தது போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வியாபாரிகள். இந்தியாவில் ஆண்டுக்கு 25 மில்லியன் டன் அளவுக்கு பருப்புகள் பயன்பாடு இருக்கிறது. தேவையை சமாளிப்பதற்காகவே 1 – 1.5 மில்லியன் டன் பருப்புகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2020 – 2021 ஜூன் – ஜூலை நிலவரப்படி பருப்புகளின் உற்பத்தி இந்த ஆண்டில் 25.56 மில்லியன் டன்களாக இருக்கும் என்கிறது மத்திய வேளாண் அமைச்சகம். இது கடந்த ஆண்டு எதிர்பார்ப்பான 23.03 மில்லியன் டன்னை விட அதிகம். எதிர்பார்க்கப்படும் அளவு உற்பத்தி நடைபெறும்பட்சத்தில் இறக்குமதியை சார்ந்திருக்கும் தேவையும் குறையும்.

Pulses

அரசின் நடவடிக்கைகள்

பருப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இறக்குமதி சிக்கல்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பாசிப்பருப்பு தவிர மற்ற பருப்புகளைக் கையிருப்பு வைத்துக் கொள்ளும் அதிகபட்ச அளவைக் குறைத்து சமீபத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதி செய்பவர்கள் மற்றும் மில் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் இந்த நடவடிக்கை வரும் அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்த விற்பனையாளர்கள் 200 டன், சில்லறை விற்பனையாளர்களுக்கு 5 டன், மில் உரிமையாளர்களுக்கு மூன்று மாத உற்பத்தி அல்லது வருடாந்திர உற்பத்தியில் 25% இதில் எது அதிகபட்சமோ அதை ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என மத்திய உணவுத் துறை அமைச்சக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பாகவே துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து, பாசிப்பருப்பு போன்றவைகளின் இறக்குமதியில் இருந்த சிக்கல்களைக் களையவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், இருப்பு வைத்துக்கொள்வதற்கான உச்ச வரம்பு வியாபாரிகளை மட்டுமல்லாது விவசாயிகளையும் பாதிக்கும் என்கிறார்கள்.

கடந்த 2020 ஜூலை 1-ம் தேதி கிலோ ரூ.72-க்கு விற்ற கடலைப் பருப்பின் விலை தற்போது ரூ.75-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.96-ல் இருந்து ரூ.100 ஆகவும், உளுந்தம்பருப்பின் விலை ரூ.106-ல் இருந்து ரூ.114 ஆகவும், சிவப்பு துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.79-ல் இருந்து ரூ.87 ஆகவும் விலை உயர்ந்திருக்கிறது.

Also Read – வில்லேஜ் குக்கிங் சேனல் ஆரம்பிக்கப்பட்ட கதை தெரியுமா?

38 thoughts on “திடீர் ஏற்றத்தில் பருப்பு விலை… என்ன காரணம்?”

  1. An outstanding share! I’ve just forwarded this onto a colleague
    who has been conducting a little research on this.
    And he in fact bought me lunch because I stumbled upon it for
    him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!!
    But yeah, thanx for spending some time to talk about
    this issue here on your web page.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top