ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா… செக் பண்ண வேண்டிய 7 விஷயங்கள்!

புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குற பிளான்ல இருக்கீங்களா… உங்களோட வண்டியைத் தேர்வு செய்றதுக்கு முன்னாடி நீங்க செக் பண்ண வேண்டிய 7 விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க..!

பெட்ரோல் விலை உயர்வு, பருவநிலை மாறுபாடு என பல காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்திய சந்தையில் கால்பதிக்கத் தொடங்கிவிட்டன. எலெக்ட்ரிக் வாகனங்களான சந்தையும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் சூழலில், பெரும்பாலானோரின் தேர்வு சிக்கனமான எலெக்ட்ரிக் பைக்/ஸ்கூட்டராகவே இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் – செக்லிஸ்ட்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
தொழிற்சாலை

தொழில்நுட்பம்

ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேர்வு செய்யும் முன்னர், அதன் தொழில்நுட்ப விவரங்களை அறிந்துகொள்வது அவசியம். உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உயிர்நாடியே, அதன் பேட்டரிதான். பொதுவாக லித்தியம் அயான் பேட்டரி/லீட் ஆசிட் பேட்டரி உள்ளிட்ட பலவகை பேட்டரிகளோடு ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதோடு ஸ்கூட்டரின் ரேஞ்ச் (ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் செல்லும் தூரம்), அதிகபட்ச வேகம் போன்றவை பேட்டரியின் திறன் சார்ந்தே இருக்கும். பெட்ரோல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வது எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் வீட்டில் போதுமான அளவு/ குறிப்பிட்ட நேரம் சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால், அடுத்த நாள் பயன்பாட்டுக்கு ரெடி!

ஏத்தர் ஸ்கூட்டர்
ஏத்தர் ஸ்கூட்டர்

தரம்

நீங்கள் தினசரி பயணிக்கும் பாதை கரடு, முரடான சாலையாகவோ, போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவோ, அந்தப் பகுதியின் காலநிலை மோசமானதாகவோ இருந்தால், அதற்கெல்லாம் உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்/பைக் ஈடுகொடுக்க தரமானதாக இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு உங்கள் புதிய ஸ்கூட்டரைத் தேர்வு செய்யுங்கள். அதேபோல், பேட்டரி மழையில் நனையாதவாறு பாதுகாப்பு வசதியைக் கொண்டிருக்கிறதா என்பதையும் பார்த்து முடிவெடுங்கள். இதுபோன்ற சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ற பிரேக் வசதியையும் கொண்டிருக்கிறதா என்பதை செக் செய்துவிடுங்கள்.

ஸ்டைல், வசதிகள்

பஜாஜ் ஸ்கூட்டர்
பஜாஜ் ஸ்கூட்டர்

உங்களுக்கேற்ற நவீன டிசைன், வசதிகளுடன் ஸ்கூட்டர் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். ஸ்டைலிஷான டிசைனுடன், போதுமான அளவு லெக் ரூம், பூட் ஸ்பேஸையும் ஒருமுறை ஒப்பீடு செய்துவிட்டு முடிவுக்கு வாருங்கள். இந்திய சாலைகளில் பயணிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/பைக்குகளில் பாதுகாப்பு அம்சங்கள், கம்ஃபோர்ட் எனப்படும் சொகுசும் ரொம்பவே முக்கியமானவை.

உரிமம் – பதிவு

ஸ்கூட்டரைத் தேர்வு செய்யும்போது, அதற்கான உரிமம் மற்றும் வாகனப் பதிவு அவசியமா என்பதையும் சோதித்து விடுங்கள். மணிக்கு 25 கி.மீக்கும் குறைவான வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நீங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதனால், 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள், இந்த வகை ஸ்கூட்டர்களைத் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவர பயன்படுத்தலாம். மணிக்கு 25 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/பைக்குகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ரேஞ்ச்

ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

ரேஞ்ச் என்பது உங்கள் வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கக் கூடிய தூரம்தான். தினசரி நீங்கள் பயணிக்கும் தூரத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப ரேஞ்ச்சைக் கொண்டிருக்கும் வாகனத்தைத் தேர்வு செய்யுங்கள். பல்வேறு ரேஞ்சுகளைக் கொண்டிருக்கும் வாகனங்கள் இப்போது சந்தையில் விற்பனையில் இருக்கின்றன. உங்கள் தேவையைக் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள்.

சேமிப்பு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் வருகிறதா என்பதையும் ஆராய்ந்துவிடுங்கள். பேட்டரி தொடங்கி, வேகம் என பல காரணிகளின் அடிப்படையில் இந்த வகை ஸ்கூட்டர்களின் விலையும் மாறுபடும். இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/பைக்குகளில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதன் செயல்திறன் என்பது லீட் ஆசிட் பேட்டரிகளை விட அதிகம் என்பதால், விலையும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தேர்வு செய்கையில், ஒப்பீட்டளவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை ஒப்பிடுகையில் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

வேகம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

உங்கள் லைஃப்ஸ்டைல், பயணிக்கும் சாலை உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு உங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேகத்தையும் தேர்வு செய்யுங்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற சாலைகளில் பயணிக்க மிதவேகத்தில் செல்லும் ஸ்கூட்டர்களே சரியான தேர்வு. அதேநேரம், நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள் போன்றவற்றில் செல்லும் நிலையில், வேகம் அதிகம் கொண்ட பைக்குகளைத் தேர்வு செய்யலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறதுக்கு முன்னாடி இதுபோல வேறெந்த விஷயங்களை எல்லாம் நாம செக் பண்ணனும்னு ஐடியா இருக்கா உங்களுக்கு… அதை கமெண்ட்ல சொல்லுங்க..!

Also Read – கார் லோன் வாங்கப் போறீங்களா… இந்த 4 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top